புதுச்சேரி

பாராளுமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி தொடரும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி

Published On 2023-02-13 03:54 GMT   |   Update On 2023-02-13 03:54 GMT
  • எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது.
  • நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவைக்கு கப்பல்கள் வந்து செல்வது மிகவும் நல்லது, வியாபாரம் பெருகும். புதுவை மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கும். பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே நாங்கள் கூறியது போல, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பா.ஜனதா-அ.தி.மு.க. கட்சிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு செய்து வருகிறது. புதிதாக அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

மாநில அந்தஸ்து கிடைத்தால் ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும். எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்து பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கைதான் எல்லாம். கருப்பு சட்டையெல்லாம் அணிந்து போராடிய நாராயணசாமி மாநில அந்தஸ்து பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்தை பெறுவோம். எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது. நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.

இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News