search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அடிப்படையில் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. பிரிந்த இயக்கத்தை ஒன்றிணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவை சேரும்.

    துவக்க விழா என்பது சாதாரணம் அல்ல. அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவை அனைத்தையும் வீழ்த்தியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.

    அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது.

    கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக.

    தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கின்றது திமுக. அதிமுக சொந்த காலில் நிற்கிறது. சொந்த காலில் நிற்கின்றவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. திமுகவிற்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியினர் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

    திமுக ஆட்சியில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்முன் நீட் ரத்து என சொன்னார்கள். இதுவரை நீட் ரத்துகான ரகசியத்தை உதயநிதி வெளிவிடவில்லை"

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது.
    • இந்த போட்டியில் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

    'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

    இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஒரு நூதன போட்டியை அறிவித்தது.

    ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் 25 நபர்கள் சரியாக தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர். 

    • மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.
    • 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார். இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சனிடம் சினிமா பாணியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சன் லஞ்சமாக பல லட்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    லஞ்சமாக பெற்ற பணத்தில் துணை ஆட்சியர் உல்லாச வாழ்க்கை நடத்தியுள்ளனர். குடும்பத்திற்கு மற்றும் மருத்துவ செலவிற்காக செலவிட்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

    விசாரணையின்போது, 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.

    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

    தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்தபோது, 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ரேவதி, சிவஸ்ரீ, திர்ய தர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    22-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    23-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
    • ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்.

    தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம்.
    • வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும்.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 29-ந்தேதி மாலை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க.வி.ன் அதிகார துஷ்பிரயோகத்தால் அ.தி.மு.க. கொடியை கூட ஏற்றுவதற்கு எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது.

    இந்த மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும். வருங்கால முதலமைச்சராகும் எடப்பாடியாருக்கு மதுரை நகரமே திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.
    • இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.

    தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவர்னரை, கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழி நடத்தக் கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.

    தற்போது தமிழக அரசியலில் கட்சி பேதமின்றி மக்கள் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தாமல், மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல், மக்கள் நல்ல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விவாதிக்காமல், மோசமான தனிநபர் துதி பாடும் அரசியலும், வெறுப்பு அரசியலின் உச்சகட்டமாக, தனிப்பட்ட முறையில் தலைவர்களை, அவமானப்படுத்துவதும் கேலி பேசுவதும், குறிப்பாக பெண் தலைவர்களையும் விட்டு வைக்காமல் இகழ்வதும் அரசியல் அநாகரிகத்தின் உச்சகட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மூத்த தலைவர்களே, தங்களுடைய வாரிசுகளை தூண்டிவிட்டு அருவருப்பான அரசியல் விளம்பரத்திற்காக, தங்கள் கட்சியினர், வாரிசுகள், பேசும் அருவருக்கத்தக்க பேச்சுக்களை ரசித்து அழகு பார்ப்பது தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

    தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனி நபர் தாக்குதல்களை புறம் தள்ளி, மனிதநேயத்தோடு பரஸ்பரம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறைஅதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

    அதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.
    • இதுவரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சொத்து வரி குறிப்பிட்ட காலகெடு வுக்குள் சொத்து வரி செலுத்துவதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.

    5.13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டுகளில் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெறும் தகுதியை இழந்துள்ளார்கள்.

    கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த 25 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.

    இதையடுத்து அவர்கள் வரியை கட்டினார்கள். சொத்து வரி கட்டாததற்காக இதுவரை சொத்துக்கள் எதையும் மாநகராட்சி பறிமுதல் செய்யவில்லை.

    கடந்த 1-ந்தேதிக்கு முன்பே சுமார் 40 ஆயிரம் பேர் முன் கூட்டியே ஆன்லைனில் 6 சதவீத வரி உயர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது.

    முன் கூட்டியே வரி செலுத்தியவர்களும் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    • மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது அதற்கு தகுந்தாற்போல் மாத்திரைகள் வழங்கப்படும்.
    • கல்விக்கு கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம்.

    திருச்சி:

    பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து, 8,096 ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இணையவழி முதல் சுற்று தேர்வில், 2,008 பேரும், 2-ம் கட்ட தேர்வில் இவர்களில் இருந்து 992 பேரும் தேர்வாகினர். இறுதி சுற்றில் 75 சதவீதம் அதற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள் மாநில அரசின் கனவு ஆசிரியர்களாக தேர்வாகினர்.

    இவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 75 முதல், 89 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 325 ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 2 குழுக்களாக டேராடூன் சென்று திரும்பினர்.

    இதில் 90 முதல் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 54 ஆசிரியர்கள் கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வருகிற 23-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை அவர்கள் பிரான்ஸ் நாட்டை சுற்றி பார்க்கின்றனர்.

    பிரான்ஸ் செல்லும் ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களது பயணம் சிறக்க வாழ்த்தினார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுவாக சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் ஆசிரியர்களை மாணவனாகிய நான் அழைத்துச் செல்கிறேன். தொடக்கக்கல்வி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று கல்வி சார்ந்த, வரலாற்று சார்ந்த சுற்றுலா இடங்களை பார்க்க உள்ளோம்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது ஆசிரியர் சார்ந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அங்கீகாரம் செய்யும் விதமாகவும் முதல் முறையாக ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

    பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது அதற்கு தகுந்தாற்போல் மாத்திரைகள் வழங்கப்படும். சில நேரங்களில் மாத்திரைகளை கொடுக்க தெரியாமல் கொடுத்து சோகமான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    அது மாதிரி நடைபெறக்கூடாது என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி, சரியான முறையில் ஊட்டச்சத்து வழங்கவும் சில சமயங்களில் வயதிற்கு தகுந்த வளர்ச்சி குழந்தைகளுக்கு இல்லாத நிலையில், அதுபோன்ற குழந்தைகளையும் கண்டறிந்து பிள்ளைகளின் உடல்நலம் சார்ந்து ஒவ்வொன்றையும் அனைத்தையும் செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வியும், சுகாதாரமும் 2 கண்கள் என முதலமைச்சர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது.

    கல்விக்கு கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது 32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பகுதியில் கோலடி ஏரி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வருவாய்த்துறை அதிகாரி கள் நடத்திய ஆய்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருவதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி.எந்திரத்துடன் இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அதிரடியாக இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×