search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.
    • திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * சென்னை ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை பார்க்க முடிகிறது.

    * சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. கனமழை தொடர்ந்திருந்தால் மக்கள் எங்கும் சென்றிருக்க முடியாது.

    * 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர்.

    * 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது.

    * எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை.

    * வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.

    * திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

    * திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * மக்கள் புரிந்து கொள்வதற்காகவே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

    * அதிமுக ஆட்சியில் அந்தந்த துறை அமைச்சர்கள் பணிகளை கவனித்து கொண்டார்கள்.

    * தற்போது அனைத்து துறை பணிகளையும் துணை முதலமைச்சரே செய்கிறார் என்று கூறினார்.

    • பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது.
    • உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

    மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் உணவும் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன. காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயன் அடைந்தனர்.

    அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.

    மழை காரணமாக வேலையும் வருமானமும் இல்லாமல் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்க உத்தரவு பிறப்பித்து எங்களுக்கு உதவிபுரிந்த முதலமைச்சருக்கு மனதார எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கட்டணமில்லா உணவு சாப்பிட்ட மக்கள் கூறினர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். குறிப்பாக முதலமைச்சர் புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணி மேற்கொண்டிருந்த சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மழைநிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். அங்கு பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. அந்தப் பகுதிகளில் எல்லாம் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்ப்களை பயன்படுத்தி மழைநீர் தேங்க விடாமல் செய்த மாநகராட்சி பணியாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

    தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாத்திட 300 நிவாரண மையங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 2 நாட்களிலும் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

    சென்னை மாநகரம் முழு வதிலும் 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. திடீரென பெய்த பெருமழை காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
    • விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3,040 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரெயில் 53½ மணி நேரத்தில் 35 ரெயில் நிலையங்களில் நின்று சென்று தர்பங்காவை அடைகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான இது கடந்த 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பெரம்பூர் வந்தடைந்த இந்த ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த ரெயிலில் முன்பதிவு ஏ.சி. பெட்டிகள் 10, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பெட்டி 3, 2 சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் 1,300 பயணிகளும், முன்பதிவு இல்லாத 3 பெட்டிகளில் 400 பேரும் என மொத்தம் சுமார் 1,700 பேர் பயணித்தனர்.

    இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது. இதனால், சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

    சரியாக, இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் காலிப்பெட்டிகள் மீது 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

    ரெயில் என்ஜின் மோதியதில், சரக்கு ரெயிலில் கடைசியாக இருந்த கார்டு பெட்டி தூக்கி வீசப்பட்டது. அடுத்ததாக இருந்த சரக்கு பெட்டியும் நிலைகுலைந்தது. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜின் மற்றும் தொடர்ந்து இருந்த ஜெனரேட்டர் மற்றும் லக்கேஜ் பெட்டி, தொடர்ந்து இருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1 (எச்.1), இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2 (ஏ.2, ஏ.1), 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 6 (பி 6, பி 5, பி 4, பி 3, பி 2, பி 1), 3-ம் வகுப்பு எக்கனாமி ஏ.சி. பெட்டி 1 (எம்.1), சமையல் அறை பெட்டி (பேண்டரி) ஆகியவை ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதி இருபுறமும் சரிந்து விழுந்தன.

    ரெயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு ஆகியவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரெயில்வே ஊழியர்களிடம் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    தற்போது கிடைத்த தகவலின் படி, விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றபட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

    • வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
    • பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இது தவிர அமாவாசை தினங்களிலும், புயல் சின்னங்கள் ஏற்படும் போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

    வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம், தேங்காய்பட்டினம், பிள்ளைத்தோப்பு, பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின. குறிப்பாக அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதியில் எழும்பிய ராட்சத அலைகள் குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது. சுமார் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்பொழுது 235 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை சூழ்ந்த தண்ணீர் நேற்று மாலை முதலே வடிய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்துள்ளது.

    பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோட்டார் மூலமாக தண்ணீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


    இதுமட்டுமின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ரோடுகள் சீரமைப்பு மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்தாலும் அழிக்காமல், பிள்ளைத்தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மணல் அதிகளவு காணப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து வீடுகளுக்குள் கிடக்கும் மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. பிள்ளை தோப்பு பகுதியில் 34 வீடுகளும் அழிக்கால் பகுதியில் 41 வீடுகளிலும் மணல் குவியல்கள் உள்ளன. அந்த மணல் குவியல்களை பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அழிக்கால் பகுதியில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

    லெமூர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது .போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். சுற்றுலா பயணிகள் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்க வில்லை. இதேபோல் கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    • அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. தொடங்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் இன்று அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்கிருந்த பிரமாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது வருங்கால முதல்வரே, எங்கள் பொதுச் செயலாளரே வாழ்க என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆண்டு விழா நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
    • திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.

    பழனி:

    பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.

    அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக தாமதமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

    • பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
    • எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

    சென்னை:

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
    • குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    வேதாரண்யம்:

    மிககனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மீன் வளத்துறை மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை அடுத்து வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 5000 மீனவர்கள் தங்களது பைபர்படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    மழை இல்லாததாலும், வானிலை சீராக உள்ளதாலும் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அனுமதி அளித்ததால் 3 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தென் வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    மேலும் வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து நாகை மாவட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    இந்நிலையில் வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புதுச்சேரி நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கிருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், சபரிமலை உள்ளிட்ட கேரளாவுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடந்து செல்லும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.

    நேற்று இரவு சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக சோதனை நடத்த திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. செந்தில்குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் இரவு 2 மணியளவில் வத்தலக்குண்டு பஸ்நிலையம் வந்தனர். அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன.

    மேலும் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு காலையில் முதல் பஸ்சுக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ்நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றி கடைகளையும் அடைக்குமாறு தெரிவித்தனர். மேலும் பஸ் நிலைய நுழைவாயிலில் பேரிக்காடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி திறக்க அறிவுறுத்தினர். பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ள போதிலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் அன்பழகனின் தாய் முத்துலட்சுமி மட்டுமே இருந்தார். அவர் தனது மகனுக்கு கடந்த சில நாட்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டு நாங்கள் சொல்வதை கேட்காமல் இருந்து வருகிறார்.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டு நேற்று காலையில் தான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். சிறிது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வெளியே சென்று வருவதாக என்னிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு தற்போது வரை வரவில்லை. எனது உறவினர்கள் அவரை தேடி வருகிறோம் என்றார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரையில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மதுரையை சேர்ந்த வாலிபர் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    ×