search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் போலீஸ்"

    • கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

    கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார்.

    கஸ்தூரி தான் குடியிருக்கும் காலண்டர் தெரு வீட்டை விற்பதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கஸ்தூரியின் வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் சென்ற வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    போலீஸ் விசாரணையில் வளையாபதி தனது நண்பரான பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதைதொடர்ந்து போலீசார் வளையாபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
    • ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.

    ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

    அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

    • பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
    • போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    ஆவடி:

    ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

    பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:

    உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.

    போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.

    கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...

    கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..

    போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    • ரூ.1.5 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பெரிய கொல்லம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா. இவருக்கு கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.

    இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பேறுகால விடுப்பில் இருப்பதாகவும், அதனால் லதாவின் தங்கை நடத்தி வரும் தீப்பெட்டி ஆபீசை லீசுக்கு தருமாறும் லதாவிடம் சேர்மக்கனி கேட்டார். லதாவும் அதற்கு ஏற்பாடு செய்தார்.

    லீசுக்கான தொகையை சேர்மக்கனி சரியாக கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவசர தேவைக்கு ரூ.1.5 லட்சம் தேவைப்படுவதாக கேட்டு வாங்கினார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் செக் ஒன்றை சேர்மக்கனி கொடுத்தார்.

    ஆனால் அந்த காசோலை வங்கியில் இருந்து திரும்ப வந்தது. விசாரணையில் அந்த காசோலை வேறு ஒருவருடையது என தெரியவந்தது. இதனால் மீண்டும் சேர்மக்கனியிடம் பணத்தை தருமாறு லதா கேட்டார்.

    அப்போது பணம்கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுகுறித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லதா வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் தாலுகா போலீசார் பெண் போலீஸ் சேர்மக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் போலீசை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த நல்லையாராஜ் என்பவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கற்பகலட்சுமி(34).இவர் ஓ.மேட்டுப்பட்டியில் நடந்த விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். அங்கு இவர் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது ஒரு வாலிபர் வீடியோ எடுத்து அவரை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது.

    இந்த நிலையில் இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசில் கற்பகலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த நல்லையாராஜ் என்பவரை கைது செய்தனர்.

    • கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.
    • கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர்.

    கோவை:

    மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைபட்டு கிடந்தனர். அவர்களும் படித்து நல்ல நிலையை அடைய பலர் போராடினர். போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் பலரும் படித்து பற்பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

    தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிக பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள்.தாங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரமான கோவையில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், குற்றம் செய்தவர்களை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    குறிப்பாக எந்தவொரு குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.

    தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரீமா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றி வரும் பிருந்தா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களாகவும் பெண்கள் அதிகளவில் அந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

    அவர்கள் அந்த பதவியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடிக்கடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடமும் குற்ற சம்பவங்கள் குறித்தும், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாகவே ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது.

    கோவை மேற்குமண்டலம் என்பது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஐ.ஜி.யாக இருந்து எந்தவிதமான குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இவரது கடமையாகும்.

    இந்த உயர்ந்த பதவியில் தான் தற்போது பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அளிப்பதே தனது முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.

    மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கு மண்டலத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஐ.ஜி., டி.எஸ்.பி. பதவிகளை தவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பிலும், நிறைய பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இப்படி உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளிலும் கோவை மாவட்ட போலீசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும் அதிகமாக வரவேற்பினை பெற்றுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தாமும் இதுபோன்று சாதித்து உயர் பதவியை அடைய ஒரு உந்துதலாகவும் இருக்கும்.

    இதுதொடர்பாக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- கோவையில் போலீஸ் உயர் பதவிகளை பெண்கள் அலங்கரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வரவேற்கத்தக்கது.

    பெண் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள், பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புகிறோம்.யாருக்கும், யாரும் சளைத்தவர்கள் அல்ல.

    எல்லோரும் ஒன்று என்ற வழியில் பெண்களாலும் எல்லா துறையிலும் திறம்பட பணியாற்ற முடியும் என்பதையே இது காட்டுகிறது. எனவே அனைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சாதித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றனர்.

    • அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
    • டிரைவர் பஸ்சை நிறுத்தும் முன்பே மூதாட்டி இறங்கியதால் தவறி விழுந்தார்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு புறப்பட்டது.

    இந்நிலையில் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பிரதான பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சில் வழி தவறி ஏறிய சுமார் 80 வயது உள்ள மூதாட்டி ஒருவர் அவசரமாக இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் டிரைவர் நிறுத்துவதற்கு முன்பே அந்த மூதாட்டி பதட்டத்தில் இறங்கியதால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு தலையில் அடிபட்டதால் தனது பெயர், அவரது ஊர் மற்றும் உறவினர்கள் பெயரை சொல்ல முடியாமல் திணறினார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பின்னர் அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்பு லன்சில் ஏறுவதற்கு மறுத்த மூதாட்டியை பெண் போலீஸ் ஒருவர் கரிசனையுடன் பேச்சு கொடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகவும், மூதாட்டியின் உறவினர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்நிலையில் மூதாட்டியின் சொந்த ஊர் மடத்தூர் என்பது தெரியவந்தது.

    • 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூர்:

    ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.

    தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    • சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.
    • ஸ்வர்ணலதா‘ஏபி 31’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.

    விசாகப்பட்டினம் :

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர்.

    இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 10 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த நோட்டுகளை சூரிபாபு என்ற இடைத்தரகரிடம் கொடுத்தனர்.

    பணத்தை மாற்றிய சூரிபாபு, ரூ.90 லட்ச ரூபாய்க்கு ரூ.500 நோட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு ஆந்திர ஆயுதப்படை போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, ஊர்க்காவல் படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    சூரிபாபுவின் காரையும் சோதனையிட்ட அவர், அதில் ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டு கட்டுகள் இருப்பதைக் கண்டார். அதுகுறித்து ஸ்வர்ணலதா விசாரித்தபோது, சூரிபாபு திக்கி திணறியுள்ளார்.

    அதையடுத்து ஸ்வர்ணலதா, தனக்கு ரூ.20 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல்லும்படியும், இல்லாவிட்டால், ஆவணமின்றி கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

    பெண் இன்ஸ்பெக்டருடன் பேரம் பேசிய சூரிபாபு, கடைசியில் ரூ.12 லட்சத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதரிடம் கொண்டு போய் கொடுத்துள்ளார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் விக்ரமாவிடம் புகார் அளித்தனர். அதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, இடைத்தரகர் சூரிபாபு, ஊர்க்காவல் படையினர் இருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, சினிமா மோகத்தில் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர், பிரபலமான தெலுங்கு சினிமா பாடல்களுக்கு நடனமாடி 'யூடியூப்'பில் பதிவேற்றி வந்தார். அவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், ஸ்வர்ணலதாவை சந்தித்த ஒருவர், 'உங்கள் அழகுக்கு நீங்கள் சினிமாவில் நடித்தால் 'ஓகோ' என்று வருவீர்கள்' என்று கூறினாராம்.

    அதையடுத்து சினிமா கனவில் மிதந்த ஸ்வர்ணலதா, அதை தானே நிறைவேற்றும் வகையில் 'ஏபி 31' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அதில் கதாநாயகியாகவும் அவரே நடிக்கிறாராம்.

    சினிமா தயாரிப்புக்கு நிறைய பணம் தேவை என்பதால் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.

    • பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    • புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு போலீஸ் துறையில் பெண் போலீசார் கால் தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதையொட்டி பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னையில் இருந்து பாய் மர படகு மூலம் புறப்பட்டு பழவேற்காடு வழியாக கோடியக்கரை வரை சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயண நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 1,000 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தை 4 பாய்மர படகுகளில் 30 பெண் போலீசார் மேற்கொண்டனர். இந்த பாய்மர படகு பயணத்தில் பெண் போலீஸ் உயரதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் மகேஸ்வரி, பவானீஸ்வரி, டி.ஐ.ஜி. கயல்வழி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கோடியக்கரை சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினர்.

    இந்நிலையில் நேற்று காலை புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களை புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர். பின்னர் அந்த குழுவினர் இங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகம் சென்றடைகின்றனர். 

    • ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.
    • ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ்துறையில் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 382 போலீசாருக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்வேறு பயிற்சிகள் பெற்ற போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் போலீஸ் நிர்வாகம், செயல்பாடுகள், சிறப்பு சட்டங்கள் ஆகிய 3 பிரிவுகளில் ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸ் சிறப்பிடம் பிடித்தார். அதோடு பெஸ்ட் இன் இன்டோர் என்ற பரிசையும் ராஜேஸ்வரி வென்றார்.

    மேலும் பயிற்சி பெற்றவர்களில் பெஸ்ட் ஆல் ரவுண்டராக ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட பிறகும் போராடி ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவை முத்திரையர் பாளையம் சாணரபேட்டை புதுதெருவை சேர்ந்த ராஜேஸ்வரி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

    எஸ்.எஸ்.எல்.சி. முடித்து டிப்ளமோ படித்திருந்த ராஜேஸ்வரிக்கு போலீஸ் பணிக்கு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.

    அதோடு சென்னை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ராஜேஸ்வரி தனது கல்வித்தகுதி பிளஸ்-2 வுக்கு சமமானது என தீர்ப்பும் பெற்றார். ஆனால் தீர்ப்புக்கு முன்பு போலீஸ் பணிக்கான தேர்வு முடிந்துவிட்டது. இருப்பினும் மனம் தளராத ராஜலட்சுமி 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றினார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்க ராஜேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்று பெஸ்ட் ஆல் ரவுண்டர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

    இவரது கணவர் செந்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    ஊர்க்காவல் படையில் இருந்த போது பல்நோக்கு பணியாளர் பணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போலீசில் சேர வேண்டும் என்ற வைராக்கியத்தில் அந்த வாய்ப்பை உதறினேன். ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார். 

    • கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.
    • முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    வீட்டு கடமையையும் பார்த்துக் கொண்டு போலீஸ் காவல் பணியிலும் இரவு, பகல் பாராது ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் 'ஆனந்தம்' என்றொரு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கம் குடும்ப பணிகளிலும், காவல் நிலைய பணிகளிலும் ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வாரத்தில் 3 நாள் கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்தை குறைத்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பது தான்.

    இந்த கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் 4,821 பெண் போலீசார் பங்கேற்றனர். அவர்களுக்கு சுயசிந்தனைக்கான பயிற்சி, எப்போதும் மகிழ்ச்சியாக முற்போக்கு சிந்தனையும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் தொடர்ந்து இரண்டு மாதம் நடக்கிறது. முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், இங்கு நடைபெறும் இந்த பயிற்சியில் நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொண்டு காவல் பணியினையும், குடும்ப பொறுப்பையும் சமநிலையுடன் வைத்து பணியாற்று மன அழுத்தமில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்ற பெண் போலீசார் கூறும்போது, இந்த கவுன்சிலிங் பெண் போலீசாருக்கு நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சியாகும். குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு போலீஸ் பணியினையும் டென்சனில்லாமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று முகாமில் பயிற்சி அளித்தது எங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றனர்.

    ×