search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை போராட்டம்"

    • வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

    கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்ன கிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 44 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    • பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இதனால் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு பேச முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்றுகாலை 30-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    • வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் விசாலப்பட்டு அடுத்த பெரிய மோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூனை குட்டி பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தற்காலிக பணியாளராக 28 வயது ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து தற்போது அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஆசிரியர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல தயாராகினார். அப்போது அங்கு சென்ற அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் பள்ளி திறந்ததும், பெண் ஆசிரியரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை முன்கூட்டியே அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அசோக் குமார், பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கமல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் சமரசம் பேசினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
    • பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்

    சென்னை:

    இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது.

    அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, "கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப் படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

    எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

    • இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.
    • தமிழக மீனவ அமைப்புகளுக்கும் அழைப்பு.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து பா.மக. சார்பில் வருகிற 8-ந்தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

    தொடர்ந்து வங்க கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடிய தமிழக மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்கி வருவதாலும், அவர்களுடை உடைமைகளை அதாவது வலைகளை சேதப்படுத்துவது, கைது செய்து சித்ரவதை செய்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மீன்பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் பா.ம.க. சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மீனவ அமைப்புகளுக்கும் இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் வாதிகள் மற்றும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலாவும் நபர்கள் வதந்தி கிளப்பி வருகின்றனர்.

    கேரளாவில் அமைந்திருந்தாலும் அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பலகோடி செலவில் தமிழக அரசு அணையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த பணி முடிந்தபின்னர் 152 அடி வரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால் கேரளா அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுக்கள் தொடர்ந்து அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் என இவர்கள் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் இதனை அமல்படுத்தாமல் கேரள அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இதனால் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

    கடந்த 2024ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து அணைப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பருவமழையின்போது அணைப்பகுதியை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

    சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முல்லை ப்பெரியாறு அணை விவகாகரத்தை நிலச்சரிவுடன் ஒப்பிட்டு கேரள அரசியல் வாதிகள், தன்னார்வலர்கள் வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் கேரளாவை கண்டித்து தமிழக-கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    கடந்த 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கேரளா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் எம்.பி. முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.

    எங்கு இயற்கை பேரழிவு நடந்தாலும் அதனை பெரியாறு அணையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். எனவே இதனை கண்டித்து நாளை குமுளியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

    • 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம்.
    • 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.

    சென்னை:

    தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 32 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி கைதானார்கள்.

    இன்று 3-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். தூத்துக் குடி, சிவகங்கை, தேனி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழு குழுவாக டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.

    அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். பள்ளிக் கல்வி இயக்கக அலுவலகம் வரை ஆசிரியர்களை வர விடாமல் ஆங்காங்கே மறித்து கைது செய்து சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

    இன்று நடந்த போராட்டத்திலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர். இதுபற்றி நிர்வாகிகள் கூறும்போது, 'ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது அரசுக்கு நல்லதல்ல.

    தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசி தீர்வு காண வேண்டும் என்றனர்.

    • தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.
    • ஆசிரியர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை, டி.பி.ஐ. வளாகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது,

    அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.

    ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

    ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.

    பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
    • போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

    பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை

    அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.

    பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர்.
    • ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன், ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம்.

    முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர். இனிமேல் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை சிறையில் அடிப்போம் என கூறுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாங்கள் என்ன தவறு செய்தோம். டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு தரமான கல்வி கொடுத்தது தான் நாங்கள் செய்த தவறு. ஏனெனில் பாஜகவால் அதை செய்ய முடியாது. மொஹல்லா க்ளினிக்குகளை உருவாக்கி மக்களுக்கு மருத்துவ சேவை செய்தது எங்கள் தவறு. பாஜகவால் இதை செய்ய முடியாததால் மொஹல்லா க்ளினிக் திட்டத்தை நிறுத்த வேண்டுமென பாஜக விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    சுவாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைதான நிலையில் வீடியோ வெளியிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    ×