search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple"

    உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அருண்குமார் (வயது26). பி.பி.ஏ. படித்து முடித்துள்ள இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    காவாராப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் மகள் சிந்து(21). இவர் பி.டெக். படித்து முடித்துள்ளார். அருண்குமாரும், சிந்துவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு சிந்து வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அருண்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சிந்து பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது.

    இந்த தகவலை தனது காதலன் அருண்குமாரிடம் சிந்து கூறி, உன்னை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது என்று கதறி அழுதார். இதனால் சிந்துவை அழைத்து கொண்டு கடலூருக்கு சென்ற அருண்குமார் அங்கு பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் நேற்று தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இது குறித்து சிந்து கூறும்போது, நான் பள்ளியில் படிக்கும் போதே அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தோம். அருண்குமாரை காதலிப்பதாக எனது தந்தையிடம் நான் கூறியபோது, கத்தியால் குத்தியோ அல்லது விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள் என்று கொடுமைப்படுத்தினார். நாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்தவுடன் அருண்குமாரின் வீட்டை எனது தந்தை அடித்து நொறுக்கியதுடன் அங்குள்ளவர்களை மிரட்டினார். மேலும் நான் காணாமல் போய்விட்டதாக ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். எனது தந்தையால் எனக்கும், அருண் குமாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளோம் என்றார். 
    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தனியார் நிறுவன ஊழியர் காதலியுடன் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குட்டம் தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி (19). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு மில் வேலைக்கு சென்று வருகிறார். முத்துப்பாண்டி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 40 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது காயத்திரியுடன் பழக்கம் ஏற்பட்டது. உடனே இது காதலாக மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வாடிப்பட்டி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா இருவீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினார். காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே வாழலாம் என்று போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

    எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சந்தைப்பேட்டை காதர்கான் பட்லா பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 28). தனியார் கார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக உள்ளார்.

    இவரது உறவுப்பெண் செல்வமீனா (22). இவரும் பொன்ராஜூம் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதில் இரு குடும்பத்தினர் இடையே திடீர் பிரச்சினை ஏற்பட்ட தால், திருமண பணிகள் நிறுத்தப்பட்டன.

    இதனால் காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். கடந்த 11-ந் தேதி செல்வமீனா வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.

    அதன்பிறகு காதலன் பொன்ராஜை சந்தித்தார். அவர்கள் இருவரும் திருச்செந்தூர் சென்று அங்கு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    ஒரு வாரம் அங்கிருந்து விட்டு புதுமணத் தம்பதியர் பொன்ராஜ்-செல்வமீனா நேற்று மதுரை திரும்பினர். இதுபற்றி செல்வமீனாவின் சகோதரர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.

    அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சந்தைப்பேட்டை பகுதியில் நின்றார். பொன்ராஜ், தனது தாய் மீனாட்சி, காதல் மனைவி செல்வமீனா ஆகியோருடன் அங்கு வந்ததும், பிரபாகரன் வழிமறித்து வாக்குவாதம் செய்தார்.

    திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பொன்ராஜை வெட்டினார். இதனை தடுக்க வந்த செல்வமீனா மற்றும் மீனாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிமாறன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். பிரபாகரன் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அருகே சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்ட தம்பதி, ‘குஞ்சுகள் பறந்துசெல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் காத்திருப்போம்’ என்றனர்.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு தற்போது வீட்டை கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஓம்ஸ்ரீமன் (7) என்ற ஒரு மகன் உள்ளான். சவீதா ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஸ்கூட்டரை வீட்டுக்குள் நிறுத்திவிட்டு மகேந்திரன் குடும்பத்துடன் காரில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    உறவினர் வீட்டில் இருந்து 29-ந் தேதி வீட்டுக்கு திரும்பினார்கள். காரில் இருந்து இறங்கியதும் சவீதா ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது வண்டியின் முன்பகுதியில் பொருட்கள் வைக்கும் பொந்துபோன்ற இடத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. உடனே தன்னுடைய கணவரையும், மகனையும் அழைத்து அதை காண்பித்தார். மகிழ்ச்சி அடைந்த 3 பேரும் கூட்டை கலைக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ஸ்கூட்டரை அசைக்காமல் அதே இடத்தில் விட்டுவிட்டார்கள்.

    இதற்கிடையே 2 நாட்கள் கழித்து சவீதா கூட்டை பார்த்தபோது, குருவி எங்கோ இரைதேட சென்றிருந்தது. ஆனால் கூட்டுக்குள் 3 முட்டைகள் இருந்தன. இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த சவீதா ஸ்கூட்டரை சிறிது கூட அசைக்காமல் பார்த்துக்கொண்டார். நாள்தோறும் குருவி வருவதும், கூட்டில் முட்டையை அடை காப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகான 3 குஞ்சுகளை தாய் குருவி பொரித்தது.

    தாய் குருவியையும், குஞ்சு களையும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சவீதா குடும்பத்தார். ‘குஞ்சுகள் பெரியதாகி தாய் குருவி அவைகளை அழைத்துக்கொண்டு பறந்து செல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவோம்’ என்றார்கள்.

    இதற்கிடையே தாய் குருவி இரையுடன் வந்து, தன்னுடைய அலகில் இருந்து குஞ்சுகளின் வாயில் ஊட்டுகிறது. அப்போது மற்றொரு குருவியும் உடன் வருகிறது. அது தந்தை குருவியாக இருக்கலாம். இந்த காட்சிகளை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து செல்கிறார்கள். 
    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற கணவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது தனோகி பகால் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தாரு காமேதி. இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    ஆனால், அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் தவறான உறவை ஏற்படுத்தி கொண்டார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. பழங்குடி பஞ்சாயத்தினர் அவர்களை பிரித்து வைத்தனர்.

    இதனால் அந்த பெண் தனியாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே காதலித்த வாலிபரை சந்திப்பதற்காக சரே கார்டு என்ற இடத்துக்கு சென்றார். அவர்கள் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த வி‌ஷயம் அவருடைய கணவர் தாரு காமேதிக்கு தெரிய வந்தது. மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் அவமானப்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.

    ஊர்க்காரர்களை அழைத்து கொண்டு அந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை அவர்கள் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர்.

    பின்னர் இருவரின் கைகளை கட்டினார்கள். அவர்கள் ஆடையை களைந்து நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. இந்த காட்சியை பலர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவருடைய கணவர் தாரு காமேதி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சம்பவம் நடந்த இடம் மாநில உள்துறை மந்திரி குலாப்சந்த் கட்டாரியாவின் சொந்த ஊராகும்.

    இதே பகுதியில் 2016-ம் ஆண்டு காதல் ஜோடி ஒன்றை இதே போல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
    குற்றாலம் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்ததில் பெண் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென்காசி:

    ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி பொன் ஏஞ்சல் (வயது35). இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காய்கறி கடைக்காரர் சுதாகர்(35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    சுதாகருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களது கள்ளத்தொடர்பு அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓட்டம்பிடித்தது.

    இது தொடர்பாக சுதாகரின் மனைவி சுமதி தனது கணவரை காணவில்லை என ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுதாகரை தேடி வந்தார்கள் இதனிடையே ஊரை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு நேற்று குற்றாலத்துக்கு வந்தனர்.

    குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் ஒரு விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினர். இன்று காலை அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை எட்டி பார்த்தனர்.

    அங்கு பொன் ஏஞ்சலும், சுதாகரும் வி‌ஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர். உடனே இதுபற்றி குற்றாலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்ஜ் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பொன் ஏஞ்சல் இறந்து கிடந்தார். சுதாகர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இதை தொடர்ந்து சுதாகரை போலீசார் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன் ஏஞ்சல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லையில் கைதான திருமண மோசடி தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்ப பெண்களின் படங்களையும் அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஆண்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதை அறிந்த ஒரு கும்பல் முருகனிடம் செல்போன் மூலம் பேசி அழகான பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, பெண்ணுக்கு பெற்றோர் இல்லை என்பதால் திருமண செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணத்தை அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளது.

    இதனை நம்பிய முருகன், அந்த கும்பலுக்கு ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 705 கொடுத்துள்ளார். திருமணத்துக்கு தாமதம் ஆனதால் சந்தேகம் அடைந்த முருகன் இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    முருகன் புகார் தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் ரமா, அனிதா ஆரோக்கிய மேரி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே சத்யாநகரில் வசித்து வந்த சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேரும் இந்த திருமண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த கும்பல் சென்னை அடையாறு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன், சென்னை எல்.ஐ.சி. ஊழியர் அன்பழகன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான அரசகுமரன் உள்ளிட்டோரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.

    தற்போது போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.63½ லட்சம், 69 பவுன் தங்க நகைகள், நிலம் மற்றும் சொகுசு பங்களா, செல்போன்கள், பித்தளை சிலை ஆகியவற்றை மீட்டுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1½ கோடி ஆகும்.

    இந்த திருமண மோசடி தம்பதி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கைதான சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேருக்கும் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் என். புதுக்கோட்டையை அடுத்த காளிசெட்டிபட்டி ஆகும். இவர்கள் பல பேரிடம் இதுபோல் மோசடி செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு அஞ்சுகிராமம் அருகில் சொகுசு பங்களா கட்டி வசித்து வந்துள்ளனர். இதுபோன்ற மோசடி செயல்களுக்காகவே அவர்கள் நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த கும்பல் மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தப்படும் இணையதளங்களை அடிக்கடி நோட்டமிட்டுள்ளனர். அதில் 45 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் அதிகாரிகள், வசதி படைத்தவர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். பின்னர் அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் அழகாகவும், ஆபாசமாகவும் பேச்சு கொடுத்து ஆசையை தூண்டினர். பின்னர் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் பதிவிடப்பட்டு இருக்கும் அழகான குடும்ப பெண்களின் படங்களை தேர்வு செய்து வைத்து, அதில் மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ்- அப் மூலம் அந்த ஆண்களுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதாவது செல்பி மோகத்தில் இளம்பெண்கள் தங்களது செல்போன் படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பதிவு செய்கின்றனர். அதனை சேமித்து வைத்து மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் அதிகமாக வெளியே தெரியாத துணை நடிகைகள், டி.வி. நாடக நடிகைகள் படங்களையும் அனுப்பி உள்ளனர். இதில் சிக்குகின்றவர்களை நைசாக பேசி தங்களது வங்கி கணக்குக்கு இணையதளம் மூலம் பணத்தை அனுப்ப கூறி பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

    தற்போது நெல்லை மாட்ட குற்றப்பிரிவு போலீசார் சுப்பிரமணியன் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளவர்களின் பட்டியலை சேகரித்து உள்ளனர். இதில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தி விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

    மேலும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. 
    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தம்பதியை தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் பால்ராஜ் (வயது 22). இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கும் அவரது உறவினர் மகேந்திரன், சக்தி, தெத்தன் ஆகியோருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று பால்ராஜ், ஈஸ்வரி மற்றும் பால்ராஜின் சகோதரர் தங்கராஜ் ஆகியோர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மகேந்திரன், சக்தி, தெத்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிளை கொண்டு அவர்களை இடித்தனர்.

    தவறி கீழே விழுந்த அவர்களை கம்பால் தாக்கினர். மேலும் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டிவீரன் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே தொழில் போட்டியில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பூதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி பஞ்சு (வயது35). ஆண்டவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த பொன்னாங்கன் என்பவரும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று கடையில் இருந்த பஞ்சுவிடம் பொன்னாங்கன், அவரது மகன் தங்கபாண்டி, அல்லிநகரத்தை சேர்ந்த கோபி ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதை தட்டிகேட்ட ஆண்டவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.

    மேலும் கடையை காலி செய்யாவிட்டால் தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஆண்டவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொன்னாங்கன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் தம்பதியின் பொருட்களை திருடியது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தேசிய நுகர்வோர் கமி‌ஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் கணவன்- மனைவி பயணம் செய்தனர். அவர்கள் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பெட்டி வைத்திருந்தனர். அப்போது அந்த பெட்டியில் அத்துமீறி ஏறிய பிச்சைக்காரன் பெட்டியை உடைத்து அதில் இருந்த பொருட்களை திருடிச்சென்று விட்டான். இச்சம்பவம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

    இது குறித்து தேசிய நுகர்வோர் கமி‌ஷனிடம் தம்பதியினர் புகார் செய்தனர். ரெயில்வேயின் கவனக்குறைவு காரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய பிச்சைக்காரன் தனது பொருட்களை திருடிச் சென்று விட்டதாக புகார் கூறி இருந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் கமி‌ஷன், தம்பதிக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.#tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடந்த மறியலில் மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.#bansterlite #sterliteprotest
    ராயபுரம்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று காலை தண்டையார்பேட்டை சிக்னல் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருது கணேஷ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது தண்டையார்பேட்டை சிக்னல் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த பாரி- தமிழரசிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் புதுமண தம்பதிக்கு அப்பகுதியில் மறியல் நடந்து கொண்டு இருக்கும் தகவல் கிடைத்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்த அவர்கள் மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுமண தம்பதியினர் பாரி-தமிழரசி ஆகியோர் தாங்கள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்களும் மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் போராட்டத்தை முடித்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு சென்றுவிட்டனர். இதுபற்றி புதுமாப்பிள்ளை பாரியிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது வருந்தத்தக்கது. இதனை கண்டித்து இன்று காலை அரசியல் கட்சியினர் திருமண மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்தோம். இதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.

    எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த மனநிம்மதி ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    புதுமண தம்பதியினர் சென்ற சிறிது நேரத்தில் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட எர்ணாவூர் நாராயணன், மருதுகணேஷ் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.#bansterlite #sterliteprotest
    ஜோலார்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிக்னலுக்காக நின்றபோது பயணியிடம் 12 பவுன் நகை பையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    கொல்லத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டபட்டி சிக்னலுக்காக நின்றது. அதில் பயணம் செய்த செகந்திராபாத்தை சேர்ந்த ஜான்சன் (35), அவரது மனைவி ஜோதிமூன் (32) 12 பவுன் தங்க நகைகள், பணம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பையில் வைத்திருந்தனர். அந்த பையை தலையணையாக வைத்து தூங்கியபடி சென்றனர். சிக்னலில் நின்ற ரெயில் புறப்பட தயாரானது.

    அப்போது மர்ம நபர் ஒருவர் நகை பையை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். நகையை பறிகொடுத்த ஜான்சன் கூச்சலிட்டார். இதனால் ரெயிலில் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் மூலம் ஜோலார்பேட்டை போலீசாருக்கு அந்த பயணி புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×