search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100849"

    பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் அடுத்த காங்கையார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உத்தண்டம். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் உதயநிதி (வயது 17).

    இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் அவர், மற்ற நாட்களில் செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசுவார். அது போல் நேற்றிரவு செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசினார்.

    பின்னர் விடுதிக்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்கள் உதயநிதி அறைக்கு சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி உதயநிதியை அழைத்த போது, உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

    இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்த போது, உதயநிதி மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிதியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே உதயநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் உதயநிதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி, டேபிள், ஷேர் மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். உதயநிதி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் மாணவன் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உதயநிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உதயநிதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. விடுதியில் தங்கியிருந்து படிக்க விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    9-வது நாளான இன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo #Strike
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    9-வது நாளான இன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் காலை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

    9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அவர்கள் கவுரவம் பார்க்கிறார்கள். பள்ளி கல்வித்துறை செயலாளர் இப்போராட்டத்தை திசை திருப்பி வருகிறார்.

    நிதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்தான் சொல்கிறார். ஆனால் அதுபற்றி நிதி அமைச்சர் வாய் திறக்கவில்லை. இன்று மாலை ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று நடந்த போராட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டனர். போராட்டம் தொடங்கியபோது அதிகளவில் பங்கேற்றனர். தற்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் போராட்டத்துக்கு குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். #JactoGeo #Strike
    சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் நிலையில், வன்முறை மற்றும் போலீஸ் நடவடிக்கையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. #SudanProtests #BreadPrice
    கர்த்தூம்:

    சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
     
    போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.



    இந்த மாதமும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதேசமயம் அரசுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது. இந்த போராட்டங்களால் பதற்றம் நீடிக்கிறது.

    அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையில் கடந்த 21-ம் தேதிவரை 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. போராட்ட நிலையை விசாரணை மேற்கொள்ளும் கண்காணிப்பு குழுவின் தலைவர் அமீர் அகமது இப்ராகிம், இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SudanProtests #BreadPrice
    புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    புதுக்கோட்டை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் தொடங்கியது.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ரெங்கசாமி, செல்லத்துரை, தாமரைச்செல்வன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 ஆசிரியர்கள் உள்பட 15 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தொடர்ந்து உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

    இந்நிலையில் நேற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 566 பேரை கைது செய்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இவர்களை நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல பல பள்ளிகள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றனர்.  #JactoGeo
    திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 600 பெண்கள் உள்பட 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். #Jactogeo
    திருவாரூர்:

    பழைய ஓயவூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 22-ந் தேதி தொடங்கினர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்் சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முத்துவேல், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சண்முகவடிவேல், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பெண்கள் உள்பட 1,000 பேரை கைது செய்தனர். #Jactogeo
    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள மதனஞ்சேரி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திம்மாம்பேட்டை வாணியம்பாடி செல்லும் சாலையில் இன்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

    ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் கலெக்டரிடமும் மனு கொடுத்து உள்ளனர்.

    ஆனால் மனுவின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்காடு கல்புத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    கோர்ட் உத்தரவால் திருச்சியில் அதிக அளவில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். #Jactogeo
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தூண்டியதாக 48 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    நேற்று திருச்சி உறையூர் மாநகராட்சி பள்ளி உள்பட சில பள்ளிகள் ஆசிரியர்கள் வராததால் பூட்டப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் வந்திருந்த ஒரு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திண்ணைகளில் பாடம் எடுத்தனர். இன்று 8-வது நாளாக திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு போராட்டம் நடத்துவதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிட்டால் அந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியிடம் காலியாக அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் நேற்றைய கூட்டத்தை விட இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் இன்று காலை பணிக்கு திரும்பியிருந்தனர்.

    ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #Jactogeo
    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 150 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திருப்பூர்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

    கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களை கைது செய்து பல்வேறு மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 1626 பெண் ஊழியர்கள் உள்பட 1941 பேரை இரவில் விடுவித்தனர். ஆனால் முக்கிய நிர்வாகிகளான சம்பத்குமார், சாமி குணம், சிவம், வெள்ளிங்கிரி உள்பட 42 பேரை விடுவிக்கவில்லை.

    இவர்கள் 42 பேரும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், வழிமறித்து தடுத்து இடையூறு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் 42 பேரையும் இன்று அதிகாலை கோவை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட்டு வேலுசாமி முன்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் மறியல் செய்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கலெக்டர் பங்களா அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 566 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 63 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள 6 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இரவு 10 மணிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சராஜ், நிர்வாகிகள் கனகராஜ் உள்பட 45 பேரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர்களை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 45 பேரையும் தனியாக திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இன்று காலை அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த 2 போலீஸ் வாகனங்களில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #Jactogeo
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Jactogeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி சேலத்திலும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் கடந்த 25-ந் தேதி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 45 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன்பு 45 பேரையும் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை வருகிற 11-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாமக்கல்லில் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 55 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவர் வருகிற 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
    திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டு வரும் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 3,200 ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு 8 இடங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.

    கைதானவர்கள் வழக்கமாக மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் நேற்று முக்கிய நிர்வாகிகள் சிலரது பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் நிர்வாகிகள் இடையே கைது செய்யப்படலாம் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இரவு 9 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபங்களில் தங்கி இருந்த அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மண்டபங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஊழியர்களில் பலர் சர்க்கரை நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள், 6 அரசு ஊழியர்கள் என 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மற்ற பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் அந்த 9 பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டனர். #Jactogeo
    நெல்லை மற்றும் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 97 ஆசியர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #JactoGeoStrike
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ சார்பாக கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், ராஜசேகர், பவுல், பொன்னுசாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 1200 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 42 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைதான ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JactoGeoStrike
    அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமானது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். #JactoGeo #Seeman

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். நாளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தொடர்வார்களா? என்று தெரியவில்லை.

    முன்பு கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் ஜெயலலிதா கிடப்பில் போட்டார். மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நியாயம் உள்ளது.

    நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தைதான் கேட்கிறார்கள். அரசு போராடவே கூடாது என்றால் தவறு.

    அவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விடுத்து அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடக்கூடாது.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 40 தொகுதிகளில் தலா 20 தொகுதிகள் ஆண்கள் -பெண்களுக்கு ஒதுக்கப்படும். சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Seeman

    ×