search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல்"

    குலசேகரம் அருகே நேற்று மாலை இடி, மின்னலுடன் பெய்த மழையில் மரம் விழுந்து வீடு சேதமானது.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், மலையோர கிராமங்களிலும் கோடை மழை பெய்கிறது. நேற்று மாலையிலும் குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    மழை காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    குலசேகரம் பகுதியில் பெய்த மழையில் மரம் விழுந்து குடிசை வீடு ஒன்று சேதமானது. குலசேகரத்தை அடுத்த வெண்டலிக் கோட்டில் இச்சம்பவம் நடந்தது.

    வீட்டில் கூலித்தொழிலாளி ராஜன் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். அவருடன் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் ராஜனின் தாயார் ஆகியோர் இருந்தனர்.

    குலசேகரம் பகுதியில் நேற்று மாலை மழை பெய்த போது வீட்டில் ராஜனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். அப்போது வீட்டின் அருகே நின்ற மரம் பலத்த மழையால் சரிந்து விழுந்தது.

    மரம் விழும் சத்தம் கேட்டதும், ராஜனும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ராஜனின் வீடு மழையால் இடிந்த தகவல் வருவாய் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி ரவி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் அந்த பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்தார். அதனை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    சூளகிரி பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது.
    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆங்காங்கே மழையும் பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலினால் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்குவோர் கடும் புழுக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் தெருக்கள் மற்றும் வீட்டு தின்னைகளை நோக்கியே சென்றனர். மேலும், சூளகிரி பகுதி ஏரி, குளங்களில் போதியஅளவு தண்ணீர் இன்றி பல ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கினறுகள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ், சாமுவேல், ரங்கராஜன் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிவந்த நிலையில் நேற்று மாலை சூளகிரி பகுதிகளில் சுமார் மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதில் சூளகிரி, மாரண்டபள்ளி, தியாகரசன பள்ளி, சென்னபள்ளி, பஸ்த்தள பள்ளி, சின்னார் மற்றும் பல பகுதியில் பரவலான மழை பெய்தது. மழையினால் நள்ளிரவு நேரத்தில் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு உள்ள வேப்பமரம் வேரோடு சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களுக்கு எந்தவித விபத்து மற்றும் சேதங்கள் இல்லாமல் இருந்தது.
    சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யத்தில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. அப்போது வீடுகளில் மின்னல் தாக்கி 14 பேர் காயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் திடீரென மழை பெய்தது.

    அப்பகுதியில் ஒரு சில கூரை வீடுகளில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கி இருந்த வீரமணி மற்றும் சந்திரா இருவரும் காயம் ஏற்பட்டது. மேலும் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 12 பேர் லேசான காயம் அடைந் தனர்.

    மின்னல் தாக்கிய 14 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டனர் மின்னல் தாக்கியதில் வீடுகளில் இருந்த மிக்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்தன.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. மேலும் மதுக்கூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    கடந்த 2 மாதங்களாக வெயிலில் தவித்து வந்த மககள், திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் அப்பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

    ராமநாதபுரத்தில் நேற்று திடீரென்று பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிககுறைவாக பெய்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து மக்கள் குடி நீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு கத்தரி வெயில் எனப்படும் கோடைவெயிலுக்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

    கோடைவெயிலுக்கு முன்னதாகவே இவ்வாறு வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டிவதைத்தால் மக்கள் கோடைவெயிலை நினைத்து அச்சத்தில் இருந்தனர். மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் சொல்ல முடியாத அவதியடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

    இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நேற்று காலை ராமநாதபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நிமிடங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. காலை 11.45 மணிஅளவில் இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரத்தில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வைசியால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை நீரை மக்கள் வீணாக்காமல் குடங்களில் பிடித்து வைத்தனர். கடந்த பல நாட்களாக மக்கள் வெயிலால் அவதியடைந்த நிலையில் திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வாய்ப்பு மிக குறைவு என்றாலும் வெப்பக்காற்றால் பகலிலும், இரவிலும் அன்றாட வேலையை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மக்களுக்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    இடி, மின்னல் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே வெளியிடுவதற்கான புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #LightningAlertSystem #IMD
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கலந்துகொண்டு பேசியதாவது:-



    இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடம் வகிக்கிறது. இடி, மின்னலை முன்கூட்டியே கணிப்பது விரைவில் சாத்தியமாகும். ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

    அதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா  உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயல்திட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். #LightningAlertSystem #IMD
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. #heavyrain

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மாவட்டத்தில் பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் நள்ளிரவில் கன மழை கொட்டியது.

    இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கோபி, கவுந்தப்பாடி மற்றும் கொடிவேரி, பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.

    இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பவானி- 42.

    சத்தியமங்கலம்- 26.

    கோபி- 21.

    கவுந்தப்பாடி- 19.2.

    கொடிவேரி அணை-15.

    அணை- 18.

    அணை- 12.

    அணை- 11.8.

    எலந்தகுட்டை மேடு-11.

    பவானிசாகர்- 7.

    நம்பியூர்- 6.

    பு.புளியம்பட்டி- 3.5.

    சிவகிரி- 2.2. #heavyrain

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை

    கடலூர்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிமுதல் மழை பெய்யத்தொடங்கியது. கடலூர் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 1 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து பெய்தது.

    நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கடலூர், திருப்பாதிரி புலியூர், நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதுபோல் சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர், வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வீரமுடையான் நத்தம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அதுபோல் ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுகுப்பம், சேத்தம்பட்டு, காவனூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் செல்லும் நிலை ஏற்பட்டது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா போன்ற பகுதிகளில் இன்றும் கடல் கொந்தளிப்பும், பலத்த காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் இன்று2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    பரங்கிப்பேட்டை 6 மில்லி மீட்டர்.

    அண்ணாமலைநகர் -58.80

    சிதம்பரம் -46.80.

    கடலூர்-29.30

    வானமாதேவி-16.50

    பண்ருட்டி-9.20

    ஸ்ரீமுஷ்ணம்-9.10

    குப்பநத்தம்-7.50

    மாவட்டம் முழுவதும் 461.25 மி.மீ. மழை பெய்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, எண்டியூர், பிரம்மதே‌ஷம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. 9 மணி வரை பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    எக்கியார்குப்பம், கூனிமேடுகுப்பம், கீழ்புத்துப்பட்டு, அனிச்சக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் கொந்தளிப்பும், சூறைகாற்று வீசுவதால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டன.

    கடலூரில் நேற்று இரவு 11 மணிக்கு நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு கடலூர் நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தெப்பக்குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. சேறும்- சகதியுமாக காட்சி அளித்தது.

    கடலூர் நகர் பகுதியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    சிதம்பரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந் தனர். அவர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி- கல்லூரிக்கு சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், சேந்த நாடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    அதுபோல மரக்காணம் அதனை சுற்று பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    விருதுநகர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. விருதுநகரில் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    சிவகாசி, திருச்சுழி, வத்திராயிருப்பு, பிளவக்கல், கோவிலாங்குளம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    விருதுநகர்-33

    வெம்பக்கோட்டை-22.2

    பிளவக்கல்-3.2

    மாவட்டத்தில் 296.8 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசியது. இன்று காலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக கோவில் வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக கோவில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஒரு சிலர் பள்ளி வரை நனைந்தவாறு சென்றனர். 3 மணி நேரத்தில் 26.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுபோல், குருந்தன்கோடு, குளச்சல், சிற்றார், பாலமோர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:–

    நாகர்கோவில்–26.2, குருந்தன்கோடு–25.6, குளச்சல்–6.4, பேச்சிப்பாறை –1, சிற்றார்1–4, சிற்றார்2–7, மாம்பழத்துறையாறு –3, கன்னிமார்–4.6, பாலமோர் –2.8, ஆணைகிடங்கு –3, அடையாமடை –8, திற்பரப்பு–9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 482 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.
    நாகர்கோவில் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி அருகே மயிலாடியில் 11 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று காலை வெயில் அடித்தது. பகல் 12 மணி அளவில் திடீரென சீதோஷ்ணம் மாறியது. வானில் கருமேகங்கள் திரண்டன. இரவாகி விட்டதோ என்றும் எண்ணும் அளவுக்கு நகரம் இருளில் மூழ்கியது.

    வானம் இருண்டு காணப்பட்ட சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. அது மெல்ல, மெல்ல தீவிரம் அடைந்தது. அப்போது இடியும் மின்னலும் காணப்பட்டது. அதோடு சூறாவளி காற்றும் சுழன்றடித்தது.

    இம்மழை காரணமாக நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார், செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கோட்டார் பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து ஓடியது.

    இந்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது. மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிட்டன. இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவிலில் பெய்த மழை போல கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் பகுதிகளில் இன்று பகல் 11.30 மணி முதலே கனமழை பெய்தது.

    இதுபோல குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மார்த்தாண்டம், குழித்துறை, திருவட்டார், குலசேகரம்,பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், கன்னிமார், பூதப்பாண்டி, கடுக்கரை, தெரிசனங்கோப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் கன மழை பெய்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான அனைத்து கடற்கரை கிராமங்களிலும் இந்த மழை பெய்தது.

    காட்டுமன்னார்கோவிலில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று வீசியதால் காட்டு மன்னார் கோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து நுழைவு வாயிலில் உள்ள கதவின் மீது விழுந்தது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளேரி என்ற இடத்தில் புளிய மரமும், காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலை ஓரம் இருந்த வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

    இதேபோல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு போக்குவரத்து சீரானது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஒருசில கிராமங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    இதேபோல் பெண்ணாடம், திட்டக்குடி, ஆவினங்குடி, தொழுதூர், ராமநத்தம், ஆவட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. மேலும் பெண்ணாடம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் பெண்ணாடம் பகுதிகளில் உள்ள கடைவீதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வடிகால் வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×