search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    சேலத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற கவரிங் வியாபாரி மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).

    கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை-பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    வியாபாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது38). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கம்பத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் வாரவட்டிக்கு கடன் வாங்கினார்.

    இதற்காக வட்டி மட்டும் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் சரவணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம், ரவியிடம் ரூ.15 ஆயிரம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்கிடம் ரூ.20 ஆயிரம், ராமராஜிடம் ரூ.50 ஆயிரம், அணைப்பட்டி குட்டியிடம் ரூ.20 ஆயிரம், சிவாவிடம் ரூ.80 ஆயிரம், குணசேகரனிடம் ரூ.60 ஆயிரம், சுருளிபட்டியை சேர்ந்த இளம்பருதியிடம் ரூ.25 ஆயிரம், கே.எம்.பட்டியை சேர்ந்த ஜக்கப்பனிடம் ரூ.10 ஆயிரம், நல்லதம்பியிடம் ரூ.20 ஆயிரம், முருகனிடம் ரூ.20 ஆயிரம், மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரம் என 13 பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

    இதனால் அவருக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சென்றாயனிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த ராயப்பன்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    புதுவையில் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் வதூத் ரகுமான் (வயது 44).

    இவர், புதுவை சண்டே மர்க்கெட்டில் துணி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை போடுவதற்காக வேனில் துணிமணிகளை ஏற்றிக்கொண்டு காந்தி வீதிக்கு வந்தார்.

    அவர் வழக்கமாக கடை போடும் இடமான காந்தி வீதி- நீடராஜப்பர் வீதிசந்திப்பில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இரவு வியாபாரம் முடிந்து 11.30 மணியளவில் துணிமணிகளை வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரானார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒரு மோட் டார் சைக்கிளில் வந்த வாலிபர் சிறிது தூரத்தில் நின்று விட்டார். மற்ற 2 வாலிபர்களும் பர்கத் ரகுமானிடம் வந்தனர். அவர்கள் திடீரென ரகுமா னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ரகுமானை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினர். இதனால் பர்கத் ரகுமான் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ஆனால், சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர்கள் சுற்றி வளைத்து மோட்டார் சைக் கிள் சாவியால் அவரது முகத்தில் குத்தி விட்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த பர்கத் ரகுமான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தரமணியில் மாமூல் கேட்டு சாலையோர டிபன் கடைகாரர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தரமணியில் சாலையோர டிபன் கடை நடத்தி வருபவர் செல்லத்துரை. இவரிடம் அ.தி.மு.க. வட்ட அவைத்தலைவர் எமநாதன் என்பவர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.15 ஆயிரத்தை செல்லத்துரை கொடுத்தார்.

    இந்த நிலையில் எமநாதன் கூடுதலாக ரூ.20 ஆயிரம் மாமூல் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். ஆனால் செல்லத்துரை பணம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த எமநாதன் தனது ஆதரவாளர்களுடன் செல்லத்துரையின் டிபன் கடையை நொறுக்கி சூறையாடி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து செல்லத்துரை கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமைந்தகரை பிபி கார்டன் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் பிரதாப் சந்திரன். அவர் நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வினித்குமார், பிரசாந்த் ஆகிய இருவரும் பிரதாப் சந்திரனிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டினர்.

    இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் பிரதாப்சந்திரன், அவரது மனைவி பிரியங்கா, கடை ஊழியர் மகேஷ் ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் கடைக்கு வந்த வடமாநில வாலிபர் ஒரு வருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளதையடுத்து நாமக்கல்லில் கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கறிக்கடை வியாபாரி டிபன் பாக்ஸ் வழங்கியுள்ளார். #PlasticBan
    நாமக்கல்:

    நாமக்கல்லில் கறிக்கோழிக் கடை வைத்து நடத்தி வருபவர் புவனேஸ்வரன் (வயது 56).

    நேற்று 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது.

    இதனை வரவேற்று புவனேஸ்வரன் தனது கடையில் இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கி வருகிறார். இதற்காக அவர் கடையில் நிறைய டிபன் பாக்ஸ்கள் விலைக்கு வாங்கி வைத்துள்ளார்.

    இன்று அவர் பாத்திரங்கள் கொண்டுவராத வாடிக்கையாளர்களிடம் ரூ.50 பெற்றுக் கொண்டு இந்த டிபன் பாக்ஸ்களில் இறைச்சி வைத்து கொடுத்து அனுப்பினார்.

    பின்னர் திரும்ப வந்து டிபன் பாக்ஸை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி வாடிக்கையாளர்கள் அந்த டிபன் பாக்ஸை திரும்ப கொண்டு வந்து புவனேஸ்வரனிடம் கொடுத்தனர். பின்னர் அவர் ரூ.50 யை அந்த வாடிக்கையாளிடமே திரும்ப கொடுத்தார்.

    இது குறித்து புவனேஸ்வரன் கூறியதாவது:-

    இதே பகுதியில் நான் 29 வருடங்களாக கறிக்கடை வைத்து நடத்தி வருகிறேன்.

    அரசு அறிவித்துள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற திட்டத்தை வரவேற்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நான் டிபன் பாக்ஸ் வழங்குகின்றேன்.

    இந்த திட்டம் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    ராஜபாளையம் வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்த போலீசார் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் உடுமலை அருகே உள்ள இலுவன்காட்டூரை சேர்ந்த ஷேக்அப்துல்காதர் (37) என்பவர் பருத்தி வாங்கிய வகையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 607 பாக்கி வைத்துள்ளார். இந்த தொகையை கேட்ட போது, ஷேக்அப்துல் காதர் தான் புதிதாக மில் வாங்குவதாகவும், மில்லை வாங்கிய பின்னர் பணத்தை மொத்தமாக கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.

    அதோடு, மில் வாங்குவதற்கு பணம் தேவைப்படுதாக கூறி சீனிவாசனிடம் பணம் கேட்டார். இதை நம்பிய சீனிவாசன் மேலும் ரூ.1 கோடியே 17 லட்சத்தை கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 60-ஐ வாங்கிய ஷேக் அப்துல் காதர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

    இதுகுறித்து சீனிவாசன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஷேக்அப்துல் காதர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் விசாரணை நடத்தி ஷேக்அப்துல்காதரை கைது செய்தார். அவரிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கைதான ஷேக்அப்துல் காதர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், இரிடியம் மோசடி கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
    பூந்தமல்லியில் வியாபாரி மொபட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பைபாஸ் ரோட்டில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் கடை வைத்திருப்பவர் தேவராஜ் (வயது 52).

    இவர் பூந்தமல்லி டிரெஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 1 லட்சம் எடுத்தார். அதை நண்பர் ஒருவருக்கு கொடுப்பதற்காக தனது மொபட்டில் சென்றார்.

    பணத்தை அந்த மொபட்டின் சீட்டின் கீழே உள்ள அறையில் வைத்திருந்தார். வழியில் ஒரு பெட்டிக்கடை அருகே மொபட்டை விட்டு விட்டு வீட்டுக்கு பொருட்கள் வாங்கினார்.

    பின்னர் மொபட் சீட்டை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ. 1 லட்சத்தை யாரோ திருடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரியிடம் பணம் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள். மொபட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது தேவராஜின் மொபட்டை வேறு ஒரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

    கடலூரில் வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 55). வியாபாரி. இவர் தனது வீட்டின் ஒரு அறையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியக்காரைக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு செல்ல சிவாஜி முடிவு செய்தார்.

    அதன்படி வீடு மற்றும் கடையை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

    அவர்கள் சிவாஜியின் வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வீட்டை மீண்டும் பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் சிவாஜி வீட்டுக்கு வந்தார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை மற்றும் எல்.இ.டி. டி.வியை கொள்ளையடித்து சென்றது அவருக்கு தெரிந்தது.

    இது குறித்து முதுநகர் போலீசில் சிவாஜி புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். #tamilnews
    பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது என்றும் அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் வணிகர் பேரமைப்பு மாநில தலைவர் கூறினார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைச்செயலாளர் சிவனேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

    தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விதிகளில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை கவனித்தால் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பொருள் பேக்கிங் செய்யவும் விற்பனை செய்யவும் இந்த அறிவிப்பு பாதகமாக உள்ளது.

    மையம் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து பேக்கிங் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் தடை இல்லை என்று அறிவித்துள்ளது. உதாரணமாக சிறு குறு மளிகை வியாபாரிகள் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வணிகத்திற்கு ஏற்றவாறு பேக்கிங் செய்து இதுவரை விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது தடை அறிவிப்பின்படி பொருட்களை மேற்கூறியவாறு பேக்கிங் செய்யவும் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களது தொழில் மிகவும் பாதிக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

    இது சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர ஓட்டல் மற்றும் சிறு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரி நிறுவனங்கள், பொருட்களை பேக்கிங் செய்வதற்கு இதுவரை பிளாஸ்டிக் பொருளை உபயோகித்து வந்தனர். தற்போது இந்த தடையால் மாற்று பொருள் தெரியாமல் பேக்கிங் செய்ய சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான விழிப்புணர்வை தந்து மறுசுழர்ச்சிக்கு குப்பைகளை சேகரித்து பயன்படுத்தும் பொழுது குப்பைகளின் அளவும் முற்றிலும் குறையும்.

    அதேசமயம் மறுசுழற்சி நிறுவனங்களும் பெருகி நிறைய வேலை வாய்ப்புகளும் உண்டாகும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்கு ஏதுவான உதவிகளை செய்து அவர்கள் தொழில் முனைய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    இந்த தடையால் பல கோடி வியாபாரிகளும் எங்களை போன்ற உற்பத்தியாளர்களும் பாதிப்படைவார்கள். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும் வழி வகுத்து விடும்.

    எனவே இந்த பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது .அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு 100 சதவீதம் தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயற்குழு உறுப்பினர் ராமசாமி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் துணைத்தலைவர் ஜெப்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கோவை மதுக்கரை அருகே போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் இருந்து ரூ.2 ½ லட்சம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பத்ரிபாலத்தை சேர்ந்தவர் சபீர் (வயது 43). இவரது தம்பி சுக்கூர் (23) மற்றும் இவர்களது நண்பர் மன்சூர் (33). இவர்கள் 3 பேரும் ஆடு, மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள்.

    சம்பவத்தன்று ஆந்திரா சென்று வியாபாரிகள் அங்கு அறுவை மாடுகளை வாங்கினர். வாங்கிய மாடுகளை ஒரு லாரியில் ஏற்றி கேரளா புறப்பட்டனர். லாரி முன்னே செல்ல 3 பேரும் காரில் பின்னால் வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவையை கடந்து மதுக்கரை அருகே உள்ள சாவடிக்கு சென்றனர்.

    அப்போது ஒரு போலீஸ் ஜீப்பில் இருந்து 5 பேர் கும்பல் இறங்கியது. காரை சைகை காட்டி கும்பல் நிறுத்தியது. போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் தன்னை இன்ஸ்பெக்டர் என்றும் மற்றவர்களை போலீஸ் என்றும் அறிமுகம் செய்தார்.

    காரை சோதனை செய்ய வேண்டும் என்று காருக்குள் ஏறிய கும்பல் திடீரென மிளகாய் பொடியை அவர்கள் கண்ணில் தூவினர். கண்ணில் மிளகாய் பொடி பட்டதும் வியாபாரிகள் அலறித்துடித்தனர். அப்போது காரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் அதே காரில் அவர்களை கடத்தினர்.

    கார் தமிழக எல்லையை கடந்து வாளையார் வனப்பகுதிக்குள் வந்ததும் அவர்களை அடுத்தடுத்து தள்ளி விட்டனர். பின்னர் கும்பல் அதே காரில் தப்பினர். வனப்பகுதியில் கிடந்த வியாபாரிகள் கண் எரிச்சல் குறைந்ததும் வாளையார் போலீசில் புகார் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் தமிழில் பேசினர். எனவே அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறியதின் பேரில் கோவை மதுக்கரை மற்றும் சாவடி போலீஸ் நிலையத்திற்கு வாளையார் போலீசார் தகவல் தெரிவித்தனர். தமிழக போலீசாருடன் தேடுதல் வேட்டையில் வாளையார் போலீசார் இறங்கினர். தீவிர தேடுதலில் வியாபாரிகளின் கார் கஞ்சிக்கோடு என்ற இடத்தில் அனாதையாக நின்றது. காரை இங்கு நிறுத்திய கும்பல் அவர்கள் கொண்டு வந்த ஜீப்பில் தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. தமிழக போலீசார் உதவியுடன் கேரளா முழுவதிலும் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    வியாசர்பாடி மார்க்கெட்டில் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதது குறித்து பிரபல ரவுடியின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி, ஏ.கல்யாணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் பிரபல ரவுடி நாகேந்திரனின் தம்பி ஆவார். முருகன் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் வியாசர்பாடி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவரை மிரட்டி முருகன் பணம் பறித்ததாக போலீசுக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    ×