search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 120617"

    சென்னிமலை அருகே சோள தட்டுப்போர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 65). விவசாயி.

    இவரது தோட்டத்தில் மாடு,எருமைகளுக்கு தேவையான தீவனத்திற்காக சோளத்தட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இதில் இருந்து நேற்று மதியம் கரும்புகை வந்தது.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது தட்டுப்போர் தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மள மளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

    இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கூறும் போது, தட்டுப்போரின் அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து பலத்த காற்றில் கீழே விழுந்த தென்னை மட்டைகள் அருகில் இருந்த மின் கம்பத்தின் கம்பி மீது விழுந்து அதில் இருந்து ஏற்பட்ட தீ தென்னை மட்டையில் பற்றியுள்ளது.

    பின்னர் அது தட்டுப்போரின் மீது விழுந்து இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்றார்.

    ஊத்துமலை அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா (வயது61), விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் (31) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிச்சையாவுக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது. அந்த வைக்கோல் படப்புக்கு முருகன் தீவைத்ததாக, பிச்சையா ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    கொடைக்கானல் வனப்பகுதியில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாமல் முடங்கிபோய் உள்ளனர்.

    இதுபோன்ற சமயங்களில் குளிர் காய்வதற்காக வனப்பகுதிகளில் தீ மூட்டும்போது அது பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி விடுவதுண்டு.

    எனவே வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இருந்தபோதும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வனப்பகுதியான டைகர்சோலை குறிஞ்சிநகர், செண்பகனூர் மலை உச்சி, டால்பின் நோஸ், வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டது.

    இன்று 3-வது நாளாக தீ பற்றி எரியும் நிலையில் அதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் வனப் பகுதியில் பல அரிய வகை மரங்களும், மூலிகைகளும் உள்ளன. 3 நாட்களாக பற்றி எரியும் காட்டு தீயால் அவை அனைத்தும் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

    மேலும் வன விலங்குகளும் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    காட்டு தீ இடைவிடாமல் எரிந்து வருவதால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்களும் இடம் பெயர்ந்து வருகின்றனர். எனவே தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர். நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதை தவிர்க்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கம்பம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் தீவனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வைக்கோல் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் கம்பத்தை சார்ந்த மணிவண்ணன் கேரளாவிற்கு வைக்கோல் களை லாரிகளில் ஏற்றி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி மதுரை அருகே உள்ள செக்கானூரணி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளாக கட்டப்பட்டு சுமார் 180 -க்கும் மேற்பட்ட கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் கோட்டயம் நோக்கி சென்றது. லாரியை கம்பத்தை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் ஓட்டினார்.

    இந்த லாரியை டிரைவர் கம்பம் பகுதியில் உள்ள தியேட்டர் பகுதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விட்டார். சிறிது நேரத்தில் லாரியில் இருந்து புகை வந்துள்ளது.லாரியிலிருந்து புகை கிளம்புவதை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ பரவுவதற்குள் வைக்கோல் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். இதனால் தீ பரவாமல் அணைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்டதால் லாரி சேதமாகாமல் தப்பியது. இது குறித்து கம்பம் வடக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கீழக்கரையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    கீழக்கரை:

    கீழக்கரை அண்ணா நகரில் வசிப்பவர் மூக்கன் (வயது 75). இவரது மகன் அந்தப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதனை முன்னிட்டு கட்டுமானப் பொருட்கள் வைப்பதற்காக அங்கு குடிசை வீடு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த வீட்டில் மூக்கன் படுத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு குடிசையில் தீப்பிடித்தது.

    இந்த விபத்தில் குடிசையில் இருந்த மூக்கன், உடல் கருகி பரிதாபமாக இறந்தார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. #CaliforniaWildfires
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வறண்ட வானிலை நிலவும் வடக்கு கலிபோர்னியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகிவிட்டன.

    தற்போது மணிக்கு 35 கிமீ வேகத்தில் தீ பரவி வருவதால் எங்கு திரும்பினாலும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. தீப்பிடித்த பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.



    இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 5 பேர் காருக்குள் இறந்து கிடந்தனர். தீப்பிடித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    வடக்கு கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CaliforniaWildfires
    திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே தனியார் கார் உதிர் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இந்த கம்பெனியில் திருத்தணி, ஆர்.கே. பேட்டை அரக்கோணம் சோளிங்கர், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 1500 பேர் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

    முதல் ஷிப்ட் 8 மணி முதல் ஐந்து மணிவரை. இரண்டாவது ஷிப்ட் 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என 2 ஷிப்டுகளில் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் காரின் உதிரிபாகங்களான ஸ்டேரிங், இண்டிகேட்டர், ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கப்படுகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் இரவு 2 மணிக்கு மேல் சுமார் 30 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இரவு சுமார் 2 மணி அளவில் எதிர்பாராதவிதமாக ஸ்பார்க் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மளமளவென தீ நாலாபுறமும் பற்றி எரிந்தது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

    திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் மதன்லால். இவர் இடையர் பாளையம் அருகே உள்ள ஒரு குடோனில் பழைய பொருட்களை சேர்த்து வைத்து இருந்தார்.

    இந்த குடோனில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. குடோனில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களும் இருந்ததால் பெரும் கரும் புகை உருவானது.

    குடோன் அருகே மரக்கடைகள் உள்ளதால் அக்கடைகளுக்கு தீ பரவும் நிலை ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை அணைக்க முடிந்தது.

    தீப்பிடித்த பழைய பொருட்கள் குடோன் அருகில் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடந்தது. அதற்கு யாரோ தீ வைத்த போது அந்த தீ குடோனுக்கும் பரவி இருக்கலாம் என தெரிகிறது.

    சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை சிம்மக்கல், வைகை தென்கரையைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). மொபைல் கடை நடத்தி வருகிறார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை வைகை கரையோரம் இரவில் நிறுத்துவது வழக்கம். அந்தப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் இதே போல் மோட்டார் சைக்கிள்களை அங்கு நிறுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஒரு வாலிபர் 3 மோட்டார் சைக்கிள்களின் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

    இதனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். திலகர் திடல் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தவர் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்த ஜனார்த்தனன் (28) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலூரில் ஒர்க்ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.

    மேலூர்:

    மேலூர் மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனை எதிரே மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இரவு 11.30 மணியளவில் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளிவந்தது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் உள்ளே இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மேலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிண்டியில் கார் உதிரிபாக குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident

    சென்னை:

    கிண்டியில் தனியார் கார் ஷோரூம் உதிரிபாக சர்வீஸ் சென்டர் மற்றும் குடோன் உள்ளது. இங்கு நேற்று இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றிருந்தனர். இன்று காலையில் வந்து பார்த்த போது குடோனில் இருந்து தீ புகை வருவதை கண்டனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    கிண்டி, ராஜ்பவன், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் குடோனில் இருந்த ஏராளமான பொருட்கள் வெடித்து சிதறி தீப் பிடித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    தேனி அருகே பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின. #Fireaccident

    உத்தமபாளையம்:

    தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பிரிவில் ராமச்சந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார்.

    நள்ளிரவு சமயத்தில் கடையில் இருந்த புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அங்காடியில் வேகமாக பரவிய தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident

    ×