search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 7 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் வருகிற 13-ந்தேதி வரை டெல்லியில் தங்கி இருக்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் யாரை எல்லாம் எப்போது சந்தித்து பேசுவார் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தற்போது நிலவக்கூடிய அரசியல் சூழல், தமிழக அரசுடன் ஏற்பட்டு வரும் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விவாதித்ததாக தெரிகிறது.

    குறிப்பாக தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீதான சி.பி.ஐ. உள்ளிட்ட வழக்குகளின் தன்மை குறித்தும் அதன்மீது விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியது குறித்தும் அந்த கடிதத்தின் மீது என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அதேபோல அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்துமே மத்திய மந்திரி உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய விவரங்கள் ஆகும்.

    உள்துறை அமைச்சகம் மூலம் தான் இந்த விஷயங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கொண்டு செல்லப்படும்.

    அந்த அடிப்படையில் அரசு சார்ந்த மற்றும் அரசுடனான மோதல் போக்கு சார்ந்த அனைத்து விஷயங்களையும் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவாக விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் கவர்னரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் அரசுடன் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன? மோதல் போக்கை தணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    தமிழக அரசின் மீது பல்வேறு விஷயங்கள் குறித்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து கவர்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பான விஷயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையும் சந்திப்பதற்கு திட்டம் வைத்து இருப்பதாகவும் தெரிகிறது.

    கவர்னர் ஆர்.என்.ரவி வழக்கமாக மாதம் ஒருமுறை டெல்லிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் 7 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கிறார்.

    அதிலும் மிகவும் முக்கியமாக இந்த முறை அவரது நிகழ்ச்சி நிரல் எதையும் அரசு அதிகாரிகளிடம் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

    • பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.
    • டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச சசிகலா திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்ததாலும் அ.தி.மு.க. சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையின்கீழ் அ.தி.மு.க. வந்தது. ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகும் அ.தி.மு.க.வில் இணைந்து தலைமைப் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தொடங்கிய அ.ம.மு.க.வில் சசிகலாவுக்கு தலைவர் பதவியை கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சசிகலா அதை ஏற்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு சென்று விட்டால் அதன்பிறகு அ.தி.மு.க.வுக்குள் செல்ல முடியாது என்பதாலேயே சசிகலா டி.டி.வி.தினகரனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் இப்போது அ.ம.மு.க. தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க டி.டி.வி. தினகரன் தயாராகிவிட்டார்.

    தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை பிரிப்பார்கள். அதை ஈடுகட்ட தன்னை அ.தி.மு.க. வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பார் என்று சசிகலா எதிர்பார்த்தார். அதற்காகவே வைத்திலிங்கம் வீட்டு திருமணத்துக்கு செல்வதை கூட தவிர்த்தார் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி தரப்பில் இருந்து அதற்கான சமிக்ஞை எதுவும் கிடைக்காதது சசிகலாவை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    எனவே இதுவரை பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.

    அதாவது டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் நிலவும் இந்த சிக்கல்களுக்கு அமித்ஷா மூலம் தீர்வு காண அவர் முடிவு செய்து உள்ளார்.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். அதுதான் கூட்டணிக்கு பலம் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. இந்த சூழ்நிலையில் சசிகலாவின் வேண்டுகோளை ஏற்று இணைப்புக்கான முயற்சியில் அவர் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
    • நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வருகிற 5-ந் தேதி சந்திப்பு நடைபெறலாம் என அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் ஜெகன்மோகன் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினர்.

    அவர்கள் வருகையின்போது ஜெகன்மோகன் கட்சி தலைவர்கள் சந்தித்து பேச முயன்றனர். அதனையும் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் புறக்கணித்தனர்.

    இதனால் பா.ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சந்திப்பு பா.ஜனதா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில்:-

    நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. மத்திய அரசுடன் நல்ல உறவை பேணுவோம்.

    ஒரு கட்சியாக நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். மக்கள் பணிக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு தொடரும் என்றார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்புக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் எதுவும் ஏற்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • உள்துறை மந்திரி அமித்ஷா கூறியபடி கவர்னர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
    • அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிவித்து விட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற போது ஊழல் சட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் இருந்து முழுமையாக விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

    அப்போது நெஞ்சு வலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இப்போது சிகிச்சை பெறும் நிலையில் அவரது போலீஸ் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புழல் ஜெயில் கைதி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்கள் அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார்.

    அவ்வாறு இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

    அப்போது செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதமும் அனுப்பி இருந்தார்.

    அதில் அரசியல் சாசனத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்ட ரீதியாக சந்திக்க போவதாகவும் தெரிவித்தார். கவர்னரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பு சட்ட நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரை தன்னிச்சையாக நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்கள்.

    இந்த விசயம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தெரியவந்தது. அவர் தலைமை வழக்கறிஞர் கருத்தை கேட்டு முடிவெடுங்கள் என்று கவர்னருக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை அன்றிரவே நிறுத்தி வைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்கும் வரை உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று 6 பக்க கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

    அதில் எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்றும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி தான் நீங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

    அரசியல் சாசனம் 164(1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ, அல்லது நீக்கவோ முதலமைச்சரின் ஆலோசனைப் படிதான் கவர்னர் செயல்பட முடியும்.

    அரசியல் சாசனம் 164(2)-ன்படி முதலமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

    எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    எனவே நீங்கள் எனது ஆலோசனை இல்லாமல் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியபடி கவர்னர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    ஆனால் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிவித்து விட்டனர்.

    இதனால் தான் எடுத்த நடவடிக்கை குறித்தும் அதற்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள சட்ட பிரிவைகளை சுட்டிக் காட்டியும் அட்டர்னி ஜெனரலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான கடிதம் தயாரித்து அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த கடிதத்தின் மீது வருகிற திங்கட்கிழமை அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிரந்தரமாக வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.

    • மோடி மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.
    • பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

    பாட்னா :

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன.

    இதுதொடர்பாக கடந்த 23-ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். அடுத்தகட்டமாக பெங்களூருவில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றவர்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். பீகாரின் மங்கரில் நடந்த பா.ஜனதாவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஊழலுக்கு எதிராக பீகார் மாநிலம் எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. ஜூன் 23-ந்தேதி பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த ஊழல்வாதிகளுக்கு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    ராகுல் காந்தியை மிகப்பெரும் தலைவராக காட்டுவதற்கு கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. மோடி மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.

    மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது? என நிதிஷ்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார்.

    ஆனால் பீகாருக்காக நிதிஷ்குமார் என்ன செய்தார் என்பதை அவர் வெளியிட வேண்டும். அவர் எப்போதும் தனது கூட்டணி கட்சிகளை மாற்றி வருகிறார். அவர் நம்பகமானவர் அல்ல.

    பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மறுபுறம் மருத்துவக்கல்லூரிகள், விரைவுச்சாலைகள், பாலங்கள், புதிய இருப்புப்பாதைகள், மின் திட்டங்கள் என பல உள்கட்டமைப்பு திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    முன்னதாக லகிசராயில் உள்ள மகாதேவர் கோவிலில் அமித்ஷா சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

    • ‘என் மண்-என் மக்கள்’ என்ற கோஷத்துடன் பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக நடத்த முடிவு செய்துள்ளார்.
    • ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார்.

    ஆரம்பத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    இதற்கிடையில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டங்கள் இந்த மாதம் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டதால் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி பாதயாத்திரையை தொடங்க திட்டமிடப்பட்டது.

    'என் மண்-என் மக்கள்' என்ற கோஷத்துடன் இந்த பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக நடத்த முடிவு செய்துள்ளார்.

    ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக வழித்தடங்களை இறுதி செய்ய தனி குழுவும் போடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் அவர் பாத யாத்திரை செல்லும் வழித்தடத்தை முடிவு செய்கிறார்கள்.

    அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அவர் அடுத்த மாதம் 28-ந்தேதிதான் கலந்து கொள்வதாக நேரம் ஒதுக்கி உள்ளார்.

    எனவே அண்ணாமலையின் பாத யாத்திரை மீணடும் 19 நாட்கள் தள்ளிப் போகிறது. ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரை ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென்மாவட்டங்களில் முதல் கட்டமாக நடைபெறுகிறது.

    பாத யாத்திரையின் போது அண்ணாமலை செல்லும் இடங்கள், பேசும் இடங்கள், இரவில் தங்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடருகிறது.
    • போதைப்பொருட்களில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.

    புதுடெல்லி :

    சர்வதேச போதைப்பழக்க எதிர்ப்பு தினத்தையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    போதைப்பொருட்களை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை மத்திய உள்துறை அமைச்சகம் பின்பற்றி வருகிறது. அதன் பலன்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை மோடி அரசு ஒழித்துக்கட்டும். இந்தியா வழியாக போதைப்பொருட்களை கடத்திச்செல்லவும் அனுமதிக்க மாட்டோம்.

    ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களை ஒழிப்பதில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். 'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற இலக்கை எட்டுவோம். இந்த போரில் வெற்றி பெறும்வரை ஓய மாட்டோம்.

    போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடருகிறது. இதன் பலனாக, 2014-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுவரை ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை கைப்பற்றப்பட்ட ரூ.768 கோடி போதைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில், இது 30 மடங்கு அதிகம்

    போதைப்பொருள் வியாபாரிகள் மீது 8 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய 8 ஆண்டுகளில் பதிவானதை விட 181 சதவீதம் அதிகம். இதுதவிர, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 6 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

    இவையெல்லாம் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசின் உறுதிப்பாட்டை காட்டுகின்றன. அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மோடி அரசு நடவடிக்கை எடுப்பதால்தான் இது சாத்தியமானது.

    போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், மக்களின் பங்களிப்பு இல்லாமல் இப்போரில் வெற்றிபெற முடியாது. எனவே, ஒவ்வொருவரும் இப்போரில் பங்கேற்க வேண்டும். எங்கே போதைப்பொருள் வர்த்தகம் நடந்தாலும் அதுபற்றி பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    போதைப்பழக்கம், இளைய தலைமுறையை சீரழிப்பதுடன், அதன் வருவாய், தேச பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
    • இதில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

    புதுடெல்லி:

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமென அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் உள்துறை தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

    மேலும், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங்கை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தன.

    • காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன.
    • மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது.

    ஜம்மு :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் பாகவதி நகர் பகுதியில், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி நினைவுதினத்தையொட்டி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    பாட்னாவில் 'புகைப்பட படப்பிடிப்பு' நடந்து வருகிறது. பிரதமர் மோடியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து வருகின்றன. நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது. அப்படியே ஒற்றுமையாக இருந்தாலும், மோடியை தோற்கடிக்க முடியாது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பா.ஜனதா 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராவார்.

    காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இருந்ததால், எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.

    பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானார்கள். இருப்பினும், அந்த குடும்பத்தினர் 370-வது பிரிவை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவையும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபாவையும் கேட்கிறேன். பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானதற்கு யார் பொறுப்பேற்பது?

    காஷ்மீரில் ஜி-20 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக கவர்னர் மனோஜ் சின்கா மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். அதில் பங்கேற்றவர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.

    அனுமதி பெறாமல் காஷ்மீரில் நுழைந்ததாக சியாம பிரசாத் முகர்ஜி, 1953-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டார். 370-வது பிரிவு நீக்கத்தால் அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது. 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிந்தைய 47 மாத காலத்தில், காஷ்மீரில் 32 தாக்குதல் சம்பவங்கள்தான் நடந்தன. கல்வீச்சு சம்பவங்கள் 90 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, முதல் முறையாக 1 கோடியே 88 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது. ஊழலற்ற இந்தியாவுக்கு மோடி வலிமையான அடித்தளம் அமைத்துள்ளார்.

    அவரது 9 ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. மோடி ஒரு திறந்த புத்தகம்.

    பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு காஷ்மீர் மக்கள் ஆதரவு தர வேண்டும். மோடியையும், ராகுல்காந்தியையும் ஒப்பிடவே முடியாது. ராகுல்காந்தி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

    குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.

    இதையடுத்து மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பும் அங்கும் வன்முறை ஓயவில்லை.

    இதையடுத்து வருகிற 24-ந் தேதி அங்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா 3-வது முறையாக வெற்றி பெற வலுவான திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
    • பாஜகவுக்கு எதிரான ஒத்த கருத்து உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார்.

    டெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது .இதற்காக இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா ஆகியோர் 3-வது முறையாக வெற்றி பெற வலுவான திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

    ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான ஒத்த கருத்து உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார்.

    இதற்காக அவர் ஏற்கனவே கடந்த 12-ந் தேதி பாட்னாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் அதில் சில தலைவர்கள் பங்கேற்க முடியாததால் இந்த கூட்டம் நாளை 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    திட்டமிட்டபடி இந்த கூட்டம் நாளை பாட்னாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜூ ரஞ்சன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    பொதுத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை வெல்வதற்கான முதல்படியாக இந்தக்கூட்டம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த கூட்டணியை வழி நடத்துவது யார்? பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படுபவர் யார்? என பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

    பல்வேறு கொள்கைகளைக் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகிக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என அந்த கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் முதல் முறையாக ஒரே பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    அந்தந்த மாநிலங்களில் எந்த கட்சி பலமாக இருக்கிறதோ அந்த கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்ற கொள்கையில் இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

    பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என கட்சிகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.

    அனைத்து சக்திகளையும் கொண்டுள்ள பா.ஜ.க.வை எதிர்கொள்ள கடைபிடிக்க வேண்டிய வியூகம், கட்சிகளுக்கு இடையே கொள்கைகளை வகுப்பது, பரிவர்த்தனை முறையில் முன்னேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

    இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார்.
    • மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும்.

    கர்நாடகா போல இந்த மாநிலங்களையும் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் பா.ஜனதா தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இதற்காகவே ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களுக்கு மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக அமித்ஷா நேற்று டெல்லியில் ஓசையின்றி அதிரடி அலசலில் ஈடுபட்டார். அவருடன் ஜே.பி.நட்டா, சந்தோஷ் உள்பட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்ததும், மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளில் சிலரை 5 மாநில தேர்தலுக்கு பொறுப்பாளராக அனுப்ப ஆலோசிக்கப்பட்டது.

    இது தவிர பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார். மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    ஆனால் இந்த தகவல்கள் பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குக் கூட முழுமையாக தெரியவில்லை. அந்தளவுக்கு அமித்ஷா ரகசியமாக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்.

    ×