search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • எங்களை பொறுத்தவரை சாப்ட் லேண்டிங் மட்டுமல்ல சந்திரயான்-3ன் முழு அம்சங்களும் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.
    • சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான ஆதித்யா-எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுப்பப்படும்.

    திருவனந்தபுரம்:

    சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு நேற்று வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம் நாடு அதிக கிரகங்களுக்கு இடையோன பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது. விண்வெளித்துறையின் விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையை பற்றி நீண்ட கால தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

    எங்களை பொறுத்தவரை சாப்ட் லேண்டிங் மட்டுமல்ல சந்திரயான்-3ன் முழு அம்சங்களும் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. இதனால் முழு நாடும் எங்களுக்கு ஆதரவை வழங்குகிறது. இதேபோல் எங்களது எதிர்கால முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். நாங்கள், சந்திரன், செவ்வாய் அல்லது வீனஸ் ஆகியவற்றுக்கு அதிகமாக பயணிக்க முடியும். ஆனால் அதற்கான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிக முதலீடும் இருக்க வேண்டும்.

    சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான ஆதித்யா-எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுப்பப்படும். ஏவுதலுக்கு பிறகு பூமியில் இருந்து லாக்ரேஞ்ச் புள்ளியை அடைய 125 நாள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். சந்திரயான்-3ன் ரோவர் மற்றும் லேண்டர் தற்போது படங்களை அனுப்பி வருகிறது. வரும் நாட்களில் இன்னும் தரமான படங்களுக்காக இஸ்ரோ குழு காத்திருக்கிறது. தற்போது நிலவு பற்றிய அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரக்யான் ரோவர் மூலம் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சந்திரயான் 3 திட்டத்தின் 2 குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியுள்ளது.

    14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    மேலும், லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் அனைத்தும் சீராக செயல்படுவதாக கூறியுள்ளது.

    பிரக்யான் ரோவர் மூலம் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சந்திரயான் 3 திட்டத்தின் 2 குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
    • சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது. 14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கி உள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

    இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    செப்டம்பர் 2-ந்தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நமது விஞ்ஞானிகள் நம் நாட்டிற்கு மாபெரும் பரிசை அளித்திருக்கிறார்கள்.
    • நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று உள்ளது.

    பெங்களூரு:

    நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா விண்ணில் செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கியது.

    அந்த சமயத்தில் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். எனவே அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக நேரடியாக இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு வந்தார். எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய மோடியை கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர்.

    காலை 6.30 மணியளவில் பிரதமர் மோடி அங்கிருந்து பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) கட்டுப்பாட்டு மையத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். அவரை வரவேற்பதற்காக 5 ஆயிரத்துக்கும் அதிகமான பா.ஜ.க.வினர் சாலையின் இருபுறங்களிலும் நின்று மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தனர். பீனியா அருகே மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

    "ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்.. என்று முழக்கமிட்டு மோடி பேச தொடங்கினார். உடனே அங்கு கூடியிருந்த மக்களும் பா.ஜ.க. தொண்டர்களும் ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் என்று கோஷமிட்டனர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நமது விஞ்ஞானிகள் நம் நாட்டிற்கு மாபெரும் பரிசை அளித்திருக்கிறார்கள். பெங்களூருவில் மக்கள் ஆர்ப்பரிக்கும் இதே காட்சிகளை தான் கிரீஸ் நாட்டிலும் கண்டேன். என்னால் என்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. முதலில் நான் இந்தியா வந்ததும் பெங்களூருக்கு வர வேண்டும் என்று தான் எண்ணினேன். முதலில் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்கள் முன் தலைவணங்க நான் காத்திருக்கிறேன்.

    பெங்களூரு மக்கள் காட்டும் இந்த ஆர்வம் என்னை மேலும் மகிழ்ச்சிபடுத்துகிறது. விஞ்ஞானிகளை காண நான் ஆர்வமாக இருக்கிறேன். இந்தியா ஒரு மாபெரும் மைல்கல்லை அடைந்த நேரத்தில் நான் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், முதலில் இந்தியா வந்ததும் நேராக பெங்களூருக்கு செல்ல வேண்டுமென்று விரும்பினேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதை தொடர்ந்து இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலை வர் சோம்நாத் வரவேற்றார்.

    அவரை பிரதமர் மோடி கட்டித்தழுவி பாராட்டினார். பின்னர் சந்திரயான்-3 மாதிரியை காட்டி அதன் செயல்பாடு குறித்து சோம்நாத் விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து இஸ்ரோ அலுவலகத்திற்குள் விஞ்ஞானிகளை பாராட்டும் வகையில் கைதட்டியபடியே பிரதமர் மோடி நடந்து சென்றார். விஞ்ஞானிகளும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் அவரது தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். பின்னர் விஞ்ஞானிகளோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைப்படங்களை பரிசாக வழங்கினர்.

    பிறகு விஞ்ஞானிகளை வாழ்த்தி மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று உள்ளது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன். விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பான பணியால் விண்வெளி துறையில் நமது தேசம் சாதனை படைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவின் அடையாள சின்னமான அசோக சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொட்ட தருணம் மறக்க முடியாதது. உங்கள் அனைவருக்கும் நான் சல்யூட் செய்ய நினைத்தேன்.

    நீங்கள் தேசத்தை எந்த அளவுக்கு உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நம் நாட்டின் கவுரவத்தை நிலவில் நாம் நிலைநாட்டி உள்ளோம். விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது.

    உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா தலைமை ஏற்கும். இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் நிலவை ஆய்வு செய்வதற்கான புதிய வாசல்களை திறந்து உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருந்தாலும் எனது மனம் முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடனேயே இருந்தது.

    இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்காகவும், முயற்சிக்காகவும், துணிவிற்காகவும் மனமார்ந்த பாராட்டுகள். இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் பூர்வ எழுச்சியை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதி சிவ சக்தி என்று அழைக்கப்படும். சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. அதனால் 'சிவசக்தி' என அழைப்பதே சிறந்ததாகும். பூமி என்பது பெண் சக்தியின் அடையாளமாக திகழ்கிறது. இமயம் முதல் குமரி வரை இந்தி யாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவசக்தி உள்ளது.

    நிலவில் யாரும் செய்யாத சாதனையை நாம் அனைவரும் போராடி படைத்திருக்கிறோம். நம் இந்திய மணித்திருநாட்டின் கவுரவத்தை நிலவில் நிரூபித்து இருக்கிறோம். 2019-ல் சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்படுகிறது.

    நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆகஸ்டு 23-ந் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடுவோம். இந்த நாளில் விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நிலவில் பிரக்யான் ரோவரின் வீரத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    முழு உலகமும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு உள்ளது. லேண்டரின் மென்மையான தரை இறக்கத்தை சோதிக்க நமது விஞ்ஞானிகள் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் செயற்கை நிலவை உருவாக்கியுள்ளனர்.

    லேண்டர் அங்கு செல்வதற்கு முன்பு பல சோதனைகளில் தேர்ச்சி பெற்றதால் வெற்றி உறுதியானது. ஒரு தலைமுறையையே நீங்கள் எழுப்பிவிட்டீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • உங்களுக்கு மத்தியில் இருப்பது, எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    • உங்களுடைய உழைப்பிற்காக, தைரியத்திற்காக, இலக்கை அடைய வேண்டும் நோக்கத்திற்கான, திடமான சிந்தனைக்கான சல்யூட்

    பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார்.

    பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார்.

    அதன்பின் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    1. உங்களுக்கு மத்தியில் இருப்பது, எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பல பிறவிகள் காத்திருந்து கிடைத்த மகிழ்ச்சி போன்று உள்ளது. உடல், மனம் என அனைத்தும் மகிழ்ச்சியால் பூரித்து கொண்டுள்ளது.

    2. சில நேரங்களில் மனிதர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவார்கள். அதேபோன்ற உணர்ச்சி தற்போது எனக்கு ஏற்பட்டது.

    3. நான் தென்ஆப்பிரிக்காவில் இருந்த போதிலும், மனம் முழுவதும் உங்களுடனேயே இருந்தது.

    4. நான் உங்களுக்கு அநியாயம் செய்துவிட்டேன் போன்ற எண்ணம் ஏற்படும். அதிகாலையிலேயே உங்கள் அனைவரையும் அழைத்து தொந்தரவு செய்து விட்டேன்.

    5. சந்திராயனுக்காக எவ்வளவு நேரம் வேலை செய்து இருப்பீர்கள். உங்களுக்கு துன்பம் ஏற்பட்டிருக்கும்.

    6. இந்தியா வந்ததுமே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக உங்களை பார்க்க வேண்டும் தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

    7. சல்யூட் அடிக்க நினைத்தேன். உங்களுடைய உழைப்பிற்காக, தைரியத்திற்காக, இலக்கை அடைய வேண்டும் நோக்கத்திற்கான, திடமான சிந்தனைக்கான சல்யூட்.

    8. இது ஒரு சாதாரணமான வெற்றியே அல்ல. இந்த அளவில்லா விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகளுக்கான சங்கநாதம் இது.

    9. இந்தியா நிலவில கால் வைத்திருக்கிறது. நம்முடைய நாட்டின் கவுரவத்தை நிலவில் நிலைநாட்டியிருக்கிறோம்.

    10. இதுவரை யாரும் செய்யாத வேலையை செய்திருக்கிறோம். இதுதான் இன்றைய இந்தியா. உணர்ச்சி மிகுந்த பாரதம். விழிப்பு மிகுந்த பாரதம். புதிய வழியில் சிந்திக்கும் பாரதம்.

    11. லேண்டர் தரையிறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்

    • கூடியிருந்த பா.ஜனதா தொண்டர்கள், மக்களிடையே பிரதமர் மோடி பேச்சு
    • விமான நிலையத்தில் கவர்னர், முதல்வர் வரவேற்க வரவில்லை

    பிரதமர் மோடி கிரீஸ் நாட்டின் சுற்றுப் பணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸில் இருந்து நேற்று புறப்பட்டார். அவர் நேராக பெங்களூரு வந்தடைந்தார். சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூர் வந்துள்ளார்.

    பெங்களூர் வருகை தந்த பிரதமர் மோடியை காண பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வெளியே அதிக அளவில் திரண்டு இருந்தனர். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர், முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் மட்டும் வரவேற்றார்.

    மோடியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    அதிகாலையில் என்னை பார்ப்பதற்காக கூடியிருக்கிறீர்கள். ஏதென்ஸில் பார்த்ததை போன்று இங்கே பார்க்கிறேன். நான் இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்க்க வந்திருக்கிறேன். அதனால் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரிடம் என்னை வரவேற்க வரவேண்டாம் எனத் தெரிவித்தேன். முறைப்படி மாநிலத்திற்கு வருகை தரும்போது நடைமுறைப்படி கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்க வந்தால் போதுமானது என்று தெரிவித்தேன்.

    வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் உடனடியாக நான் இங்கு வரமுடியவில்லை. அதனால்தான் நாடு திரும்பியதும் உடனே இங்கு வந்துள்ளேன். இஸ்ரோ சாதனையை இன்னும் பெங்களூர் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால்தான் குழந்தைகயுடன் அதிகாலையிலேயே இங்கே வந்திருக்கிறீர்கள். என்றார்.

    • கிரீஸ் சுற்றுப் பயணம் நேற்று முடிவடைந்து இந்தியா புறப்பட்டார்
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்க இருக்கிறார்

    பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார்.

    இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் உரையாட இருக்கிறார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''சந்திரயான்-3 வெற்றியின் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்திகளாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கிரீசில் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி.
    • விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார்.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார்.

    விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், தேசியக்கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின், காணொலி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தும் பேசினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிலையில், கிரீசில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று நேரில் சந்திக்கிறார்.

    நேரடியாக பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அதிகாலை 5.55 மணியளவில் பிரதமர் மோடி வருகிறார். கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    காலை 6.30 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

    காலை 7 மணியளவில் இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சந்திரயான்-2 ஆர்பிட்டர் சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது
    • லேண்டரை தரையிறக்க கூடுதலாக ஒரு வழி கிடைத்ததாக இஸ்ரோ தகவல்

    சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி, பிரக்யான் ரோவர் நிலவில் நடைபயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், தற்போதைய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது. இரு முனைகளில் இருந்தும் தகவல் பரிமாறப்பட்டது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், லேண்டரை தரையிறக்க தற்போது மேலும் ஒரு வழி கிடைத்துள்ளது என தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நிலவில் கால்பதிப்பதற்கு முன் (நேற்று முன்தினம்) ஆகஸ்ட் 23-ந்தேதி சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர், துல்லியமாக படம் எடுக்கும் கேமரா மூலம் படம் பிடித்ததாக ஒரு போட்டோவை இஸ்ரோ அப்டேட் செய்திருந்தது.

    ஆனால், அப்டேட் செய்த சில நிமிடங்களில் அதை நீக்கியுள்ளது. இதனால் சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த படம் உண்மைதானா? இஸ்ரோ அதை நீக்க என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • 'கூகுள்' பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.
    • 'டூடுல்' பக்கத்தில் 'சந்திரயான்-3' திட்டத்தின் முழு பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான 'கூகுள்' பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை (கவன ஈர்ப்பு சித்திரம்) வெளியிடுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில் 'ஜிப்' என்று அழைக்கப்படும் கிராபிக்ஸ் பட வடிவமைப்பில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

    அதில் கண்களை மூடிக்கொண்டு இருக்கும் நிலா தன்னை சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தை மிரட்சியுடன் பார்ப்பது போலவும், பின்னர் விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறியதும் நிலா மகிழ்ச்சி ததும்ப சிரிப்பது போலவும் அந்த 'டூடுல்' உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த 'டூடுல்' பக்கத்தில் 'சந்திரயான்-3' திட்டத்தின் முழு பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.

    • விக்ரம் லேண்டர் நேற்று நிலவில் தரையிறங்கியது.
    • அதிலிருந்து வெளியே வந்த ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கியது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் நேற்று தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.

    லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    இதேபோல், நிலவின் மேல்பரப்பில் உள்ள மண்ணின் தன்மை, வளிமண்டலம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ரோவர் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். உந்து விசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்துச் செயல்பட்டு வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவின் மேல்பரப்பில் மண்ணில் உள்ள ரசாயன பொருட்களின் தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலவில் உள்ள பாறைகள் மற்றும் மண்துகள்களில் அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம் உள்ளிட்ட தனிமங்களை பற்றிய ஆய்வும் நடைபெறும்.

    இந்நிலையில், லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா, நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளது. 2.17 நிமிடங்கள் ஓடக்கூடிய, இஸ்ரோ வெளியிட்ட அந்த வீடியோவில் நிலவின் மேற்பரப்பு காணப்படுகிறது.

    லேண்டர் நிலவுக்கு அருகே தரையிறங்குவதற்காக இயங்கி கொண்டிருந்தபோது, புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் தெளிவாக காணப்படுகின்றன.

    • சந்திரயான் 3 லேண்டர் சிறப்பாக செயல்படுகிறது.
    • நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகரத் தொடங்கின.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

    அதன்பின் ஆறு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது.

    இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

    இந்நிலையில், சந்திரயான் 3 லேண்டர் சிறப்பாக செயல்படுகிறது என்றும் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகர்ந்து அதன் ஆராய்ச்சியைத் தொடங்கியது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    மேலும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் செயல்படுவதால், தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

    ×