search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 243241"

    • சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

    சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா (45), சிவசங்கர் (30) ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
    • நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.

    முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.

    இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.

    நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது.
    • நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சாகுல் (வயது 22), தவ்பீக் (15) என 2 மகன்கள் உள்ளனர். சாகுல் பழனி சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். தவ்பீக் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று அதிகாலை சாகுல் வெளியே சென்று விட்ட நிலையில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது இளைய மகன் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் மர்ம கும்பல் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த அப்துல் லத்தீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    மேலும் இதை தடுக்க வந்த தவ்பீக்கிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்துல் லத்தீப்பையும், தவ்பீக்கையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அப்துல் லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்துல் லத்தீப் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது. நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. மேலும் சிறுமலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    பெரும்பாலான கொலைகள் சொந்த பிரச்சினையில் நடந்திருந்தாலும் தொடர் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    2023ம் ஆண்டு தொடங்கிய 2-வது நாளில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிலக்கோட்டை வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். 13-ந் தேதி வடமதுரையில் வாலிபர் கேரம் விளையாட்டு தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். 20-ந் தேதி தாடிக்கொம்பு உலகம்பட்டியில் முதியவரும், அதே நாளில் மறவபட்டியில் ஐ.டி.ஊழியரும் கொல்லப்பட்டனர்.

    பிப்ரவரி மாதம் 10-ந்தேதி குஜிலியம்பாறையில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசினர். 13-ந் தேதி எரமநாயக்கன் பட்டியிலும், 17-ந் தேதி ரெட்டியபட்டியிலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. 24-ந் தேதி பட்டிவீரன்பட்டியில் மகனை தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

    மார்ச் மாதம் 2-ந் தேதி சொத்து தகராறில் விவசாயிகள் மீது முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதே நாளில் வேடப்பட்டியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 3-ந் தேதி கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் தொழிலாளியும் கொல்லப்பட்டார். 4-ந் தேதி கூலித் தொழிலாளி முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். 7-ந் தேதி குஜிலியம்பாறையில் கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொன்றனர். 14-ந் தேதி சின்னாளப்பட்டியில் தந்தையை மகன்களே வெட்டி கொன்றனர். கடந்த 11-ந் தேதி மூதாட்டியை குடிபோதையில் வாலிபர் கற்பழித்து கொன்றார். இந்த நிலையில் 18-வது சம்பவமாக இன்று வீடு புகுந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார்.

    • அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார்.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் படவட்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். தூத்துக்குடியை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இவருக்கும் இவரது தம்பி குடும்பத்துக்கும் இடையே தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. தம்பி மகனான அற்புதராஜ் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து பொன்ராஜை கொலை செய்து விட்டேன் என்று அற்புத ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் இருப்பவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அபிராமபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அற்புதராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அலமாதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • பலத்த காயமடைந்த முரளி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மகன் முரளி (வயது 26). பால் வியாபாரி.

    இவருக்கும் அலமாதி சாந்தி நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த திலீபன் (25) என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று திலீபன் அவரது ஆதரவாளர்கள் 5 பேருடன் எடப்பாளையத்திற்கு சென்று மாடு மேய்த்துக் கொண்டிருந்த முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அலமாதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த முரளி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
    • கள்ளக்காதலை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வட்டாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன்(வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

    கடந்த 9-ந்தேதி காலை பூலாங்குளம் காட்டுப்பகுதியில் முத்துராமலிங்கராஜன் கை, கால்கள் முறிக்கப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அதே பகுதியை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதனை முத்துராமலிங்கராஜன் கண்டித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து உஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உஷாவின் கள்ளக்காதலன் கடல்மணி தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து முத்துராமலிங்கராஜனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உஷாவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவான கடல்மணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை கொண்டு ஆய்வு செய்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் பதுங்கியிருப்பதாக காட்டியது.

    உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தூத்துக்குடியை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. அதனை வைத்து தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்று தூத்துக்குடியில் பதுங்கியிருந்த கடல்மணியை கைது செய்தனர்.

    அவரது நண்பரான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது56). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த 3 போலீசார்கள் திடீரென சிவஞானத்தை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிவஞானம், அவர்களிடம் இருந்து தப்பி செல்ல ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதே பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான மண்டபத்தெருவை சேர்ந்த சரவணன், அவரது நண்பர்களான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், ஆபேல் ஆகிய 3 பேரையும் கொலை நடந்த ஒரு மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

    கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார். இடப்பிரச்சினை தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த தகராறில் சிவஞானம் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதான 3 பேரிடமும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலசரக்கு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு முஸ்லிம் தெருவை சேர்ந்த வர் நசீர் அலி (வயது 55). இவர் அதே பகுதி யில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜாரியா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெரியபட்டினத்தில் தனக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை நசீர்அலி ரூ.27 லட்சத்துக்கு சஹாரூல் ஜமால் என்பவருக்கு விற்றார். இதில் பெரியபட்டினம் பண்ணக்கரையை சேர்ந்த செய்யதுஇபுராகிம் என்ப வர் தரகராக செயல்பட்டு நிலத்தை விற்று கொடுத்த தாக தெரிகிறது.

    ஆனால் நிலம் விற்ற பணத்தில் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம்மட்டுமே நசீர் அலியிடம் கொடுக்கப்ப ட்டது. மீதமுள்ள ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்படவில்லை.

    நசீர்அலி நிலம் விற்ற மீதி பணத்தை தருமாறு செய்யது இபுராகிமிடம் அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை நசீர்அலி தொழு கையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யது இபுராகிம் அவரி டம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த அவர், நசீர் அலியை சரமாரி யாக தாக்கி தள்ளி விட்ட தாக தெரிகிறது. இதில் அவர் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியலில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியபட்டினம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நசீர்அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராமநாதபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

    • வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அலிவிடை தாங்கி பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70).

    இவர்களுக்கு பூர்வீக சொத்து அந்த பகுதியில் உள்ளது. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சரோஜாவின் மகன் செல்வம் (50). 2-வது மனைவி பார்வதியின் மகன் சுப்பிரமணி (45) இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இளநீர் வியாபாரியான சுப்பிரமணி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு விவசாய நிலத்துக்கு வந்தார். அப்போது அங்கு செல்வம் மனைவி சங்கீதா (45) துணி துவைத்து விவசாய நிலத்தில் காய வைத்திருந்தார்.

    இதை பார்த்த சுப்பிரமணி திடீரென இளநீர் வெட்டும் கத்தியால் துணி காயகட்டியிருந்த கயிற்றை அறுத்துள்ளார்.

    இதை தட்டிக்கேட்ட சங்கீதாவையும் கத்தியால் சுப்பிரமணி வெட்டினார். இதை பார்த்த பக்கத்து நிலத்திலிருந்த வெங்கடேசன் மனைவி வேண்டா அமிர்தம் (55) எதற்காக தனியாக இருக்கும் பெண்ணிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டார்.

    அப்போது வேண்டா அமிர்தத்தின் கழுத்தில் சுப்பிரமணி வெட்டினார். இதில் வேண்டா அமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்தபடி விவசாய நிலத்தில் இருந்து தப்பி ஓடினார். அப்போது வெறி பிடித்தபடி கத்தியுடன் சுப்பிரமணி சங்கீதாவை விரட்டி சென்றார். எதிரே சங்கீதாவின் கணவர் செல்வம் வேண்டா அமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை சங்கீதா கூறிக் கொண்டிருந்தார்.

    இதற்கிடையில் சுப்பிரமணி கத்தியுடன் பின் தொடர்ந்து வந்தார். அவரை மடக்கி எதற்காக என் மனைவியை வெட்டினாய் என வெங்கடேசன் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வம் அவரது மனைவி சங்கீதா வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் நடுரோட்டிலேயே சுப்பிரமணி வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    அவரை பிடிக்க முயன்ற அழிவிடை தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டிவிட்டு ஓடினார்.

    தொடர்ந்து வெம்பாக்கம் டவுனில் பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி( 55) அவரது மனைவி லதா என்பவரையும் சுப்பிரமணி கத்தியால் வெட்டினார்.

    இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் காந்தி தனது கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியின் பின்பக்க தலையில் தாக்கினார். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி. செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேண்டா அமிர்தம், சுப்பிரமணி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×