search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கொலை"

    • செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி.

    நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார்.

    அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ் (வயது23). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு 8.30மணி அளவில் ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகர் 5-வது தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டி சென்ற கும்பல் ராஜேசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்,கோயம்பேடு துணை கமிஷனர் குமார், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்ட ராஜேசுக்கும், திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நெற்குன்றம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தங்கையின் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது சுரேசை, ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர்.
    • காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் அவ்வை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). இவரது நண்பர் பிரபாகரன் (25).

    ரவுடிகளான இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (50) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரவியிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், ரவியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை பார்த்த ரவியின் உறவினர்கள் மற்றும் அவரது 3 மகன்களும் சேர்ந்து யோகேஸ்வரன் மற்றும் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர். செங்கலால் தாக்கப்பட்ட யோகேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    தொடர்ந்து ரவியின் உறவினர்கள், அவரை தாக்கியதால் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரவியின் உறவினர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    இறந்தவரின் உறவினர்கள் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். யோகேஸ்வரன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யோகேஸ்வரனை தாக்கியதாக ரவியின் மகன்கள் 3 பேர் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த புத்தாண்டு அன்று அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரபாகரன் தான் ஜெயிலுக்கு செல்ல ரவி தான் காரணம் என நினைத்து அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரவியை பழிவாங்க வேண்டும் என்று கருதிய பிரபாகரன், நேற்று நண்பர் யோகேஸ்வரனுடன் அரிசிபாளையம் வந்த நிலையில் அங்கு ரவியின் உறவினர்கள் தாக்கியதில் யோகேஸ்வரன் இறந்ததும் பிரபாகரன் காயம் அடைந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
    • போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து,ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமலின் மோட்டார் சைக்கிளை அந்த 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை சுற்றிவளைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர்.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்துபோன விமலும், விமலின் அண்ணன் வினோத் இருவரும் புதுச்சேரி மாநிலம் ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்தவர்கள். 2019-ஆண்டு ரவுடி சோழன் குரூப்பிற்கும் மற்றொரு ரவுடி ஜனாகுரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்த வினோத்தை ஜனா குரூப்பினர் வெட்டிக் கொன்றது. இதனால் வினோத்தின் சாவிற்கு பழிக்குப்பழி தீர்ப்பதற்காக வினோத்தின் தம்பி விமல் ஜனாவை கொல்வேன் என்று அனிச்சகுப்பத்தில் உள்ள ஜனாவின் மாமாவிடம் சென்று கூறினார். உடனே ஜனாவின் மாமா இந்த செய்தியை ஜனாவிடம் கூறினார்.

    இதனால் ஜனா முதற்கட்டமாக விமலை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவெடித்து ஜனா குரூப்பை சேர்ந்த கீழபுத்துப்பட்டு செல்வராசு மகன் ஜனா (வயது 32), ரவி மகன் அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டை தண்டபாணி மகன் உதயகு மார் (26), நாகராஜ் மகன் கார்த்திகேயன் (32), பவழ நகர் சரவணன் மகன் லோகேஷ் (23), காலாப்பட்டு ஜில்பட் மகன் தாமஸ் (23), ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒரு வாரமாக விமல் எங்கெங்கு செல்கிறார் என்று நோட்டமிட்டு நேற்று விமலை சுற்றிவளைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனிப்படை அமைத்து அந்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முந்திரிதோப்பிற்கு விரைந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனா, அரவிந்த், உதயகுமார், கார்த்திகேயன், லோகேஷ், தாமசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர் பாண்டியனுக்கும், பாபி கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்று ராமர் பாண்டியன் ஆதரவாளர் காளி என்பவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பாபி கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த ராமர் பாண்டியன் மற்றும் சிலர் பாபி கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாபி கார்த்திக் தனது வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர் பாண்டியன் உள்பட 14 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 பேருக்கும் பிரச்சினை முற்றவே ராமர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் பாபி கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று வெட்டி கொலை செய்தது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பாபி கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய தனசேகரன், வேல்பிரதாப், சுந்தர பாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ராயபுரம்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கிற பம்ப் அஜய் (வயது 23). ரவுடி. இவர் மீது 3 கொலை, கொள்ளை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன.

    நேற்று நள்ளிரவு அவர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் அஜயை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரவுடி அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தபோது பை ஒன்றை கொண்டு வந்து இருந்தார். மதுபோதையில் அந்த பையை நண்பர்கள் மறைத்து வைத்து விளையாடி உள்ளனர். அங்கிருந்து அஜய் புறப்பட தயாரானபோது பை காணமால் போய் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் நண்பர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளாளல் அஜய்யை வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சங்ககிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திலக். பிரபல ரவுடி.

    இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா என்கிற அமைப்பின் நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஓசூர் மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த முனிராஜ் மகன் சசிகுமார் (24) என்பவர் நேற்று சங்ககிரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா முன்னிலையில் சரணடைந்தார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமார், சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கான ஆவணங்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

    • சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் கைதானார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்த இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

    பின்னர் அயோத்தியாப்பட்டணம் அருகில் உள்ள மாசிநாயக்கன்பட்டியில் தனது 2-வது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடையாப்பட்டி வேடியப்பன் கோவில் எதிரே உள்ள சாக்கடை பள்ளத்தில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று ரஞ்சித்தை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 27), சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி (30), சேலம் குகையை சேர்ந்த பிரியாணி மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் மதன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
    • திகார் சிறையில் பிரபல தாதா அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான்.

    ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. யோகேஷ் துண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் அவனை அடித்து கொன்றனர்.

    திகார் சிறையில் பிரபல தாதா அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ரவுடி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது ஜெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்ட போது குறைந்தது 10 போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. அம்பலமாகி உள்ளது.

    கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இது தொடர்பாக திகார் ஜெயில் நிர்வாகம் இதுவரை 30 உதவி கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்துள்ளது.

    தமிழக சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 7 பேர் சஸ்பெண்டு ஆனார்கள். அவர்கள் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ஒரு அறிக்கையை திகார் ஜெயில் நிர்வாகம் டெல்லி துணை நிலை கமிஷனருக்கு சமர்ப்பித்துள்ளது.

    • ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.
    • பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.

    பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த அவர் 2-வது மனைவி பிரியாவுடன், மாசிநா யக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி உடையாப்பட்டி பகுதியில், ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ரஞ்சித்குமாரை விட்டு பிரிந்து தற்போது கள்ளக்கா தலனுடன் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித்குமா ருக்கும், முதல் மனைவியுடன் வசித்து வருபவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக, அவருடை நண்பர்க ளான சேலம் அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்த மகி என்கிற மகேந்திர பூபதி (23), ஓமலூரை சேர்ந்த புகழேந்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இக்கொலையில் தொடர்பு டைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கோட்டார் பட்டக சாலியன்விளை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29).

    இவரது வீட்டிற்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்தனர். இதுகுறித்து ரஞ்சித்தின் தாயார் சாந்தி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சிவசங்கர் உட்பட அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சித் அவரது நண்பர் விக்னேஷ் (29) இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரிய விளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிவசங்கர் இருவரையும் வழிமறித்தார். அப்போது ரஞ்சித்திடம் என் மீது எப்படி நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த அவரது நண்பர் விக்னேசுக்கும் காயம் ஏற்பட்டது. ரஞ்சித், விக்னேஷின் சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விக்னேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து சிவசங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது சில வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
    • ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால்.

    பதவியேற்ற ஒரு மாதத்தில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இதில் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்தது.

    அஸ்ரப்பின் அண்ணன் அதிக் அகமது பிரபல தாதா ஆவார். ரவுடியான இவர், சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையிலான ரவுடிகள்தான் ராஜ்பால் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அதிக் அகமதும், அவரது சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அஸ்ரப் உள்பட 40 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.

    கடந்த வாரம் உமேஷ்பால் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிக் அகமதின் கும்பல்தான் அவரை கொன்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து, பிரயாக் ராஜ் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், முக்கிய சாட்சி உமேஷ்பாலை மிக அருகில் நின்று சுட்டுக்கொன்ற குற்றவாளியான விஜயக்குமார் என்ற உஸ்மான் சவுத்ரி பிரயாக் ராஜ் நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று இரவு அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உஸ்மான் பற்றி தகவல் தெரிவித்தால், ரூ.2.5 லட்சம் பரிசு தருவதாக உத்தரபிரதேசம் போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×