search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து பிரசார வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    2024 மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை பாரதிய ஜனதா கட்சி இன்று தொடங்கியுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் சாதனைகளை விளக்கும் விதமாக பிரசார வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அயோத்தி ராமர் கோவில், சந்திரயான் 3 விண்கலம் உள்ளிட்ட மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் பல்வேறு சாதனைகளாக பல்வேறு அம்சங்கள் பிரசார வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த பிரசாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக, பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதை விட கூடுதல் வெற்றி இனி வரும் தேர்தலில் பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.

    • ஐபிஎல் போட்டி மார்ச் முதல் மே வரையில் நடத்தப்படுவது வழக்கம்.
    • பாராளுமன்ற தேர்தல் இருப்பதால் போட்டிக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் இருக்கிறது பிசிசிஐ.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் ஐ.பி.எல். அட்டவணை பற்றி விவாதித்தோம். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தகவலுக்காக காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஐ.பி.எல். போட்டி நடைபெறும் நேரத்தில்தான் தேர்தல் வருகிறது.

    ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும். வேறு நாட்டுக்கு மாற்றுவது பற்றி எந்த யோசனையும் இல்லை. தேர்தல் தேதிக்காக காத்திருக்கிறோம். ஏனென்றால் அதன் அடிப்படை பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

    முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3.14 கோடி பெண் வாக்காளர்கள். 3.03 கோடி ஆண் வாக்காளர்கள். 8294 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
    • 5 லட்சத்து 26 ஆயிரத்து 265 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளரக்ள் பட்டியலை தலைமை தேர்தல் அதிகார சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.

    அதன்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள். 3.03 கோடி ஆண் வாக்காளர்கள். 8294 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 5 லட்சத்து 26 ஆயிரத்து 265 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

    69 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்று முதல் வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
    • "வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்"

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின. இண்டியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று(ஜன.15) அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன், 2007-ல் உ.பி.யில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம், அதனால்தான் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம் என தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
    • ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. தற்போது தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டணியின் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பதும் முடிவு செய்ய இருப்பதாக தெரிகிறது.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என விரும்புகிறது. அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

    இந்தியா கூட்டணி உருவாவதற்கு நிதிஷ் குமார்தான் முக்கிய காரணம். இதனால் கடந்த கூட்டத்தின்போது ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தின் பாதிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் நிதிஷ் குமார் கட்சியினர் அதை மறுத்தனர்.


    கடந்த கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சி டிசம்பர் மாதத்திற்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ்க்கு கடும் சவாலாக இருக்கும்.

    • மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இரண்டு கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.
    • ஆம் ஆத்மி ஆளும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை.

    இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் போட்டியிடும் இடங்களை பிரித்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    நேற்று இருகட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் வீட்டில் நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தை குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சதா கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இது கிரிக்கெட் போட்டி போன்றது கிடையாது. கிரிக்கெட்டில் பந்துக்கு பந்து வர்ணனை வழங்கப்படும். இங்கு அப்படி வழங்க முடியாது. காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உங்களிடம் விரிவாக பேசியுள்ளார்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    டெல்லியில் 7 மக்களவை இடங்களும், பஞ்சாப் மாநிலத்தில் 13 இடங்களும் உள்ளன. இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜனதா டெல்லியில் ஏழு இடங்களிலும் வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த இரண்டு மாநிலங்களை தவிர்த்து குஜராத், கோவா, ஹரியானா மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ்க்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு.
    • காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவதால் காங்கிரஸ்- மம்தா கட்சி இடையே மோதல் ஏற்படும் நிலை.

    2024 மக்களவையில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் INDIA (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி- Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    இந்தியா கூட்டணியில் 26 கட்சிகளுக்கு மேல் இடம் பிடித்துள்ளன. விரைவில் தேர்தல் வர இருப்பதால் 543 தொகுதிகளில், எத்தனை இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.

    ஏனென்றால் பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு சிக்கல் மேற்கு வங்காளத்தில் எதிரெலிக்கிறது. 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கறாராக தெரிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியோ நாங்கள் பிட்சை கேட்கவில்லை. எங்களுடைய முழுப்பலத்துடன் போட்டியிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநில கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வருகிறது.

    அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்த கொள்ளமாட்டார்கள். எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என திரிணாமுல் கட்சி கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால் இரண்டு கட்சிகளும் அங்கே எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 22 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    • உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • 48 இடங்களை பிரித்துக் கொள்வதில் மூன்று கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய மாநிலமாக கருதப்படுவது மகாராஷ்டிரா மாநிலம். இந்த மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கட்சிகளுக்கு இடையே இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இன்று முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்கள் தொடர்பாக வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆலோசனையில் அது சரி செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    • நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை.
    • நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

    மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பங்கேற்று பேசியதாவது:-

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த மேடைதான் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு எல்லா மதத்தலைவர்களும் இருக்கிறார்கள்.

    நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

    நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் வந்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையில் முதல்-அமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சிபெறும். ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சி பின்னுக்கு தள்ளப்படும்.

    நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜனதா.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இனி பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம். இதனை முதல்-அமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வையும், பா.ஜனதாவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

    நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை (ஓ.பன்னீர்செல்வம்) அ.தி.மு.க.வில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

    வரும் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு, நிறைய கட்சிகள் வர உள்ளன. எனவே நாங்கள் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார்
    • மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சிகள் துவங்கியுள்ளன

    அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குஜராத் செல்கிறார்.

    புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அவர் எந்த நேரத்திலும் கை செய்யப்படலாம் என்ற சூழல் நிழவி வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அவர் நாளை(ஜன.7) குஜராத் செல்கிறார்.

    மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கெஜ்ரிவால், அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த இரண்டு நாள் சுற்று பயணத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம் எல் ஏ சைத்ரா பசவானையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமலாக்கத் துறையின் 3 சம்மனுக்கும் ஆஜராகாததால் அரவிந்த் கேஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    • நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
    • 2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மாகராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான ஷீரடியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

    நாட்டின் தற்போதைய சூழ்நிலை பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

    பா.ஜனதா அதிகாரத்தில் உள்ளது. அவர்கள் தீவிரமான பிரசார அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜெர்மனியில் ஹிட்லருடைய பிரசார அமைப்பை போன்று பா.ஜனதா பணியாற்றி வருகிறது.

    ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இல்லை.

    2022-ம் ஆண்டு விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால் இதில் 50 சதவீதத்தை கூட நாம் எட்டிப்பிடிக்கவில்லை. எனவே இதுவும் ஒரு வெற்று வாக்குறுதிதான்.

    2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜனதா அரசு பல திட்டங்களை அறிவித்தது. பல உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்தாமல் ஏமாற்றியது. மக்கள் இதனை தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர். பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

    வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இளைய தலைமுறையினர் கவலையில் உள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் சிலர் பாதுகாப்பை மீறி நுழைந்தனர்.

    எரிபொருள் விலை சாதாரண குடிமக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×