search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94542"

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நீடாமங்கலத்தில் வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #ttvdinakaran
    மன்னார்குடி:

    காவிரியில் நீர் கரை புரண்டோடும் நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள்,குளங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும்  பலலட்சம் ஏக்கர் பாசனப்பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளது. ஆறு, குளங்கள், ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெறாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காவிரி எஸ்.ரெங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்த முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் எம்,ரெங்கசாமி , திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், கட்சியின் அமைப்புச்செயலாளர் சிவா.ராஜ மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கு.சீனிவாசன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர், நகர செயலாளர் எஸ்.சங்கர்  மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைக்கும் பணி , வாகனங்கள் நிறுத்து மிடங்களையும் தேர்வு செய்து பார்வையிட்டனர். #ttvdinakaran 
    பெருந்துறையில் 1 மணி நேரம் கொட்டிய மழையால் ரோடுகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஈரோடு:

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வெப்ப சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது.

    நேற்று 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 24 மி.மீட்டர் மழை பெய்தது.

    மாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 4.30 மணி வரை 1 மணி நேரம் கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளிலும் மிதமாக மழை பெய்தது. ஈரோடு, சென்னிமலை, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடுமுடி -14.8

    வரட்டுப்பள்ளம் அணை -6.8

    ஈரோடு -5.

    போச்சம்பள்ளி பகுதியில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளன.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக "மா'' சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் மா விளைச்சளில் போச்சம்பள்ளி தாலுக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகாவில் மழை பொய்தாலும் கேரளாவில் மழை புரட்டி போட்டது. ஆனால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உள்ள போச்சம்பள்ளி, வெப்பாலம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த பகுதிகளில் மழை இல்லாததால் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில்  உருவாகியுள்ளது. 

    இந்த நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மா மரங்களை காப்பாற்றினாலும் சில வாராங்களில் மீண்டும் தண்ணீர் இல்லாமல் மா மரங்கள் காய்ந்து விடுகிறது. மேலும், மற்ற பயிர்களை காப்பாற்ற, பாலேகுளி ஏரியில் இருந்து  கூடுதலாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பினால், ஆண்டு முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும். 

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி கால்வாய்களை சீரமைத்து போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தற்பொழுது வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளான கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பெரும் பகுதியான வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்தக்தின் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராமையன், உடையப்பன்,  ஸ்ரீதர், துரைச்சந்திரன், அய்யாவு, அன்பழகன்,  பாலசுந்தரமூர்த்தி, தங்கப்பா, மணிவேல், இளவரசு, பிரபாகர், சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
    பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகக்கூடாது. அவ்வாறு பருகுவது ஒருசில உடல் உபாதைகள் ஏற்பட வழிவகுத்துவிடும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    அன்றாட உணவு பழக்க வழக்கங்களுடன் பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. தொடர்ந்து பழங்கள் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அதேவேளையில் பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகக்கூடாது. அவ்வாறு பருகுவது ஒருசில உடல் உபாதைகள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

    அதுபற்றி பார்ப்போம்:

    * அனைத்து பழங்களிலும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளன. அவை செரிமானம் ஒழுங்காக நடைபெறுவதற்கு உதவுகின்றன. உடல் அமைப்பும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன.

    அதிலும் வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்யும். ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.

    * வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவற்றை சாப்பிட்டதும் செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மெதுவாக நடைபெறும். அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். அதிக நீரை ஈடு செய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

    * பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவது செரிமான உறுப்புகளின் பி.எச். அளவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.எச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகினால் அமிலத்தின் அளவை குறையச் செய்து செரிமானத்தை பலவீனமாக்கும்.

    * பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும்.

    * இரைப்பை நொதிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான நொதிகள் உற்பத்தியாகவில்லை என்றால் நெஞ்ெசரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    * செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழங்கள் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவது நல்லது. 
    சடையனேரி கால்வாய்க்கு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பி விட கோரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    சாத்தான்குளம்:

    தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு சமூக ஆர்வலரும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவருமான தேவதிரவியம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் தாலுகா கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் இப்பகுதியில் உள்ள அனைத்துக்குளங்களும் வறண்டு போய்விட்டன. தாலுகா முழுவதும் அனைத்து கிணறுகளும், போர்களும் தண்ணீர் இல்லாமல் வாழை பயிர்களும், தென்னை மரங்களும் பட்டுப் போய் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படும் நிலை உள்ளது.

    தற்போது பாபநாசம் அணை நிரம்பி பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. எனவே அரசும், அதிகாரிகளும் உடனடியாக சடையனேரி கால்வாய்க்கு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பி விட வேண்டும். இதன்மூலம் இப்பகுதியில் புத்தன்தருவை, வைரவன் தருவை குளங்கள் நிரம்பி விவசாயத்திற்கும், குடி தண் ணீருக்கும் ஏதுவாக அமையும். எனவே விவசாய குடும்பங்களை காப்பாற்றிடவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் கண்மாய்கள், ஊரணிகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழை இல்லாததால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் கட்டாந்தரையாக காட்சி அளிக்கின்றன.

    குடிக்கக்கூட தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வரும் நிலை உள்ளது. நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளும், பறவைகளும் குடிக்க தண்ணீர் இல்லை.

    3 பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் பெரும்பாலும் உப்புத் தண்ணீரே கிடைத்து வருகிறது.

    முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதி களிலுள்ள ஆறுகள், கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மண்மேடுகளால் தண்ணீர் செல்ல முடியாமலும், தேக்க முடியாமலும் மழைநீர் வீணாகி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கலெக்டர் ஆயிரத்து 100 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ராமநாதபுரத்திற்கு வைகை தண்ணீர் கிடைக்க அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உணர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வைகை அணையில் இருந்து 1800 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்து விட பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை விரைவில் வெளியிடப்பட்டு ராமநாதபுரத்திற்கு விரைவில் வைகை தண்ணீர் வந்தடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மணல் கொள்ளைக்காக கடலில் கலந்த தண்ணீரை தமிழக அரசு தடுக்கவில்லை என்று காங்கிரஸ் பொது செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
    கரூர்:

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கோவா மாநில பொறுப்பாளருமான டாக்டர் செல்லக்குமார் கரூர் காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையின் காரணமாக காவிரி மூலமாக 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் செய்த தவறே காரணம். இதில் தமிழகத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். 

    வாய்க்கால்களை தூர் வாருகிறோம் என பல நூறு கோடி மக்களின் வரிப்பணத்தை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்து கடைமடை வரை கொண்டு செல்ல பல ஆண்டுகளாக காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. ஆனால் தற்போது தண்ணீரை கடலில் கொண்டு சேர்ப்பதில்தான் அரசு தீவிர ஆர்வம் காட்டியது. காரணம் மணல் கொள்ளைக்காக தான் இந்த வேகம். 19-ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் 20-ந்தேதிக்கு பிறகு தூர்வார நிதி ஒதுக்குவதாக  அறிவிக்கிறார்.  

    இது யாரை ஏமாற்றுவதற்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மத்திய பா.ஜ.க.  அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 8 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி அளித்தது. இது வரை 8 லட்சம் பேருக்கு கூட அவர்கள் வேலை கொடுக்க வில்லை. மோடி அரசு ராணுவ விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்திருக்கிறது. அதனால் தான் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரதமரால் பதிலளிக்க இயலவில்லை.

    பிரதமர் மோடி தான் செய்த  குற்றத்தை ஓப்புகொண்டு தானாகவே பதவியில் இருந்து விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் சின்னசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க். சுப்பிரமணி, செய்தி தொடர்பாளர் ஜோதிமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.
    பேராவூரணி அருகே கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு கடைவீதியில் சொர்ணக்காடு, வீரக்குடி மணக்காடு, ரெட்டவயல் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடைமடை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

    விவசாய சங்க பொறுப்பாளர் கருப்பையன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர்வேலுச்சாமி, ராஜாமுகமது, நெல்லியடிக் காடு சேகர், மணக்காடு ஜெகநாதன், கருப்பையா, ரவிச்சந்திரன், ரெட்டவயல் கண்ணன், சின்ன ரெட்டவயல் ராஜேஷ் கண்ணா, கீழ மணக்காடு, கோவிந்தராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் எல்.பாஸ்கரன், பட்டுக்கோட்டை போலீஸ் உதவி சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வீரக்குடி, சொர்ணக்காடு கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து, முழு கொள்ளளவான 50 கன அடி தண்ணீர் முறை வைக்காமல் வழங்குவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    கர்நாடகாவில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளது. #KarnatakaRains #cauverywater
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2.26 லட்சம் கன அடி வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணையும் நிரம்பி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இதனால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 16 கண் பாலம் மதகு வழியாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மேட்டூர் அணையின் 84 ஆண்டு கால வரலாற்றில் 3-வது முறையாக நேற்று 2 லட்சத்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் மழை சற்று தணிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.


    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை மேலும் குறைக்கப்பட்டு கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறையத்தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. நேற்று 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இருந்தாலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று 42-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 1.80 லட்சம் கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 2 லட்சத்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை இது 1.80 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் வரத்தைவிட கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் ஒருவாரத்திற்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 119.53 அடியாக குறைந்தது.

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதனால் காவிரி ஆற்றில் தற்போது பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் படிப்படியாக சீராகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. #KarnatakaRains #cauverywater
    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

    இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.

    இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பட்டுக்கோட்டை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 28 நாட்களாகியும் இன்னும் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

    தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால் மூலம் தாமரங்கோட்டை தெற்கு, வடக்கு, பரக்கலக்கோட்டை, தம்பிக்கோட்டை மறவக்காடு, வடகாடு உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

    இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாமரங்கோட்டையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தண்ணீர்விடக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த ஆர்.டி.ஓ. மகாலெட்சுமி, டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 25-ம் தேதிக்குள் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    ×