search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95142"

    சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நம்பியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது62). விவசாயி. இவர் நேற்று சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் இரும்பறை ரோட்டில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகம் வந்தபோது அந்த வழியே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுமேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளோடு பள்ளத்தில் விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பண்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் காட்டையன் (வயது 43). சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற் சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு, அவர் வேலை முடிந்து கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காட்டையன் வந்தார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பண்பாக்கம் நோக்கி அவர் புறப்பட்டுச்சென்றார்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து தச்சூர் வரை சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடை பெறுவதால் ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன

    இந்த நிலையில், கவரைப்பேட்டை பழைய போலீஸ் நிலைய கட்டிடம் எதிரே மேம்பால பணி நடைபெறும் இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    அந்த சாலையில் காட்டையன் வந்த போது தடுப்பு இல்லாததால் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற பள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் இன்று அதிகாலை வரை காட்டையன் பலியாகி கிடப்பதை யாரும் கவனிக்க வில்லை. காலையில் விடிந்ததும் அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்துக்கு காரணமான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் மீது கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    வாகன போக்குவரத்தை மாற்றுவழியில் செல்லும் பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் அறிவுறுத்தும் வகையில் எந்தவித தடுப்போ அல்லது முறையான அறிவிப்பு பலகையோ அப்பகுதிகளில் வைக்கப்படுவது இல்லை. 

    இதனால் இந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே வாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் அ.தி.மு.க.வினர் 3 பேர் பலியானார்கள்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மங்கநல்லூரில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    இதேபோல் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு லோடு ஆட்டோவில் தங்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வேன் இரவு 10.30 மணி அளவில் மங்கநல்லூர்-கோமல் சாலையில் உள்ள அனந்தநல்லூர் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கந்தமங்கலத்தை சேர்ந்த விநாயகராஜா (வயது 45), சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அருள்தாஸ் (38), தனபால் (55) ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் பலியான 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

    இந்த விபத்து குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 3 பேர் பலியான சம்பவத்தால் மங்கநல்லூர் கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.

    வாய்மேடு அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாய்மேடு:

    திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகரத்தினம் (வயது 30). தொழிலாளி. இவர் வாய்மேடு கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாய்மேடு துணை மின் நிலையம் அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி முருகரத்தினம் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த தாய்-மகன் மீது வாகனம் மோதியது. இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சங்கராபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் இவரது மனைவி ஜாக்குலின் (வயது 33).

    இவர்களது மகன் மரியசெல்வம் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் இருந்து வந்தான். ஜான்பீட்டர் தற்போது பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தாயும், மகனும் பெங்களூரு சென்று ஜான்பீட்டரை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று காலை மைக்கேல்புரம் பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜாக்குலின், மரியசெல்வம் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாயும்-மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து சங்கராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே கறம்பக்குடியில் செயல்படும் ஒரு ஓட்டலில் வடமாநில்ததை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பட்டிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற தென்னை மரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவோணம் சப்- இன்ஸ் பெக்டர் மேகநாதன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பலியான வாலிபரின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி அருகே பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வினித்கிருஷ்ணன் (வயது 35). இவர் திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா குழந்தைகளுடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.

    வினித்கிருஷ்ணன் திண்டுக்கல்லில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை ஊருக்கு வந்து சென்றார். கடந்த 6-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு பஸ்சில் வந்தார். தோவாளையை அடுத்த நாக்கால் மடம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது ஓடும் பஸ்சில் இருந்து வினித் கிருஷ்ணன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் வினித்கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினித்கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான வினித்கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

    வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் கீழப்பிடாகையை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜ்குமார் (வயது 25) விவசாயி. நேற்று ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் பள்ளம் செம்பிய வேலூர் பகுதியை சேர்ந்த வேதையன் மகன் செந்தாமரை கண்ணன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரையும், செந்தாமரை கண்ணனையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    பின்னர் செந்தாமரை கண்ணனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (38). இவர் பெரியபாளையம் அடுத்து உள்ள மஞ்சாங்காரணையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். லட்சிவாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் ஜானகிராமன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை கலெக்டர் ஆசியா மரியம் மீட்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (45). இவர்கள் ரெட்டிப்புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் 12.30 மணி அளவில் இருவரும் கடையில் இருந்து ஒரு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    களங்காணியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் கங்காதரன், நிர்மலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேந்தமங்கலத்தில் நடக்கும் பயிற்சியை பார்வையிட சென்றார்.

    அந்த நேரத்தில் விபத்து நடந்ததால் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்ட கலெக்டர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார். 108 ஆம்புலன்சு வர சற்று தாமதம் ஆனதால், செய்தி மக்கள் தொடர்பு துறையினர் சென்ற ஜீப்பில், படுகாயம் அடைந்த இருவரையும் ஏற்றி, உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

    அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த கங்காதரன் மற்றும் அவரது மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சிலம்பரசன் (வயது 24).
    இவர் கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை காரணமாக சொந்த ஊரான மொரப்பூருக்கு சிலம்பரசன் வந்தார். சிலம்பரசன் அதே பகுதியில் உள்ள அவரது நண்பர் அரவிந்தனுடன்  இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார்.

    இந்த நிலையில் மொரப்பூரில் இருந்து அரூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவகள் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் அரவிந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிலம்பரசன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லாவரம் அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    வண்டலூரில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் ரேடியல் சாலையை இணைக்கும் மேம்பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடிரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் பஸ்சின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த பூமா(66) என்ற பெண் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர்.

    ×