search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னை, மேல்பாடி தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையில் இருந்தும் மற்றும் கிளை ஆறுகளில் இருந்தும் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் பொன்னை ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருகிறது. இதனால் பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பொன்னை அருகே ஆற்றில் வெள்ளம் செல்வதை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பொன்னை ஆற்றை ஆய்வு செய்தார்.

    பொன்னை ஆற்றிலிருந்து 60 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் நேற்று அதிகாலை சுமார் 1 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்றின் கரையோரம் 100 நபர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கால்நடைகளும் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக, நேற்று அதிகாலை பொன்னை அருகே உள்ள பொன்னையாற்றின் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடி உயர அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் பொன்னை போலீசார் பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் இத்தரை பாலத்தின் 5-வது கண்ணுக்கு அருகில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது..

    மேலும் மேல்பாடி அருகே உள்ள பொன்னையாற்று பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை கடக்க உதவும் மேல்பாடி தரைப்பாலத்தின் மீதும் பாலமே தெரியாத அளவில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பாலத்திலும் வெள்ளப் பெருக்கு காரணமாக, உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    பொன்னை அருகே இரும்புக் கூரை போட்ட பழைய இரும்பு கடை சாய்ந்து விழுந்தது. இதேபோல் பொன்னை- லாலாபேட்டை சாலையில், கீரைசாத்து அருகே சென்ற ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அமைச்சர் துரைமுருகன் நேற்று திருவலம் அருகே பொன்னை ஆற்றில் வெள்ளம் செல்வதை நேரில் ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    அரியாங்குப்பம்:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக புதுச்சேரி-கடலூர் சாலையில் அரியாங்குப்பம் போலீஸ்நிலையம் அருகே சாலையின் இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி வழிகிறது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் பழையகுற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #OldCoutralam
    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும் நெல்லை மாவட்டத்தில் இன்னும் பருவமழை முழுமையாக பெய்யவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின் போது அணைகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதமாகவே வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பழைய குற்றால அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவு தண்ணீர் விழுந்தது.



    இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அகஸ்தியர் அருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #OldCoutralam

    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #Nallathangalodai
    பழனி:

    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள நீர் நிலைகள் மட்டுமின்றி பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

    முதலில் வரதமா நதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து பாலாறு-பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் கோடை கால நீர் தேக்கம், குதிரையாறு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாய பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனியை அடுத்துள்ள கோம்பை பட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காட்டாற்று வெள்ளம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் வெள்ளம் வந்ததை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். பாலத்தை கடந்த செல்பவர்கள் எச்சரிக்கையுடன செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    இரவு முழுவதும் நீடித்த மழை காலையில் ஓய்ந்தது. அதன் பிறகே வெள்ளப்பெருக்கும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீண்டும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது.

    எனவே இப்பாலத்தை சீரமைத்து கரையை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Nallathangalodai
     


    பெண்ணாடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டியது. வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் நள்ளிரவில் உடைந்தது. #Rain #Flood
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெண்ணாடம் அருகே சமுத்திரசோழபுரம் கிராமத்தில் வெள்ளாறு செல்கிறது.

    இந்த வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் கோட்டைகாடு கிராமத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி, ஆதானகுறிச்சி, முதுக்குளம், பாசிக்குளம் மற்றும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட 60 கிராம மக்கள் சென்று வந்தனர். இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர்.

    கடந்த 3 நாட்களாக பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஆனை வாரி ஓடை, உப்புஓடை ஆகிய ஓடைகளில் இருந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வெள்ளாற்றில் கலந்தது. இதனால் வெள்ளாற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி தரைப்பாலம் நள்ளிரவு 12 மணியளவில் அடித்து செல்லப்பட்டது.

    வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மேலும் உடைந்தது.

    தரைப்பாலம் உடைந்ததால் 60 கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உடைந்த தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்பு உடைந்த தரைப் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    பெண்ணாடத்தில் வீட்டின் சுவர் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது வீடு மழையில் நனைந்து இருந்தது. இதன் காரணமாக அவரது வீட்டின் சுவர் நேற்று மாலை இடிந்து விழுந்தது.

    இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #Rain #Flood


    தேவதானப்பட்டி பகுதியில் கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் நாசமானது. #sugarcanedamage #gajastorm #rain

    தேவதானப்பட்டி:

    நாகை அருகே மையம் கொண்ட கஜா புயல் தேனி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. சுருட்டி வீசிய சூறாவளியால் விளை நிலங்கள் நாசமானது. தேவதானபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கரும்பு மற்றும் வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டது.

    கஜா புயலால் வராகநதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், மேல்மங்கலம், வடுகபட்டி பகுதியில் கரையோர இருந்து விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நெற்பயிர்கள் சேதமானது.

    மஞ்சளாறு அணை அருகே சட்டமாவு, காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாசன பகுதியில் 800 ஏக்கரில் வாழை- செங்கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. இதில் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

    கொடைக்கானல் மலை பகுதியில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் கரும்பு, வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. இதனால் 800 ஏக்கர் நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.

    வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஓரளவு விளைச்சல் வரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நாசமானதால் விவசாயிகள் என்ன செய்வது என தவித்தபடி உள்ளனர்.  #sugarcanedamage  #gajastorm #rain

    களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய இடி- மின்னலுடன் கனமழை பெய்ததால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #heavyrain #flood #northeastmonsoon
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய இடி- மின்னலுடன் கனமழை கொட்டியது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்தது.

    இதையடுத்து களக்காட்டில் ஓடும் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய் ஆகிய ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இன்று அதிகாலை முதல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்குநேரியான் கால்வாயில் உள்ள மூங்கிலடி, சிதம்பரபுரம், குடில்தெரு, கருவேலங்குளம் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

    பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    களக்காட்டில் ஏற்கனவே பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் களக்காடு-நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் சிதம்பரபுரம் வழியாகவே சென்று வந்தன. இந்நிலையில் சிதம்பரபுரம் செல்லும் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் களக்காடு-நாகர்கோவில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

    பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து சிதம்பரபுரம், மூங்கிலடி, மஞ்சுவிளை, கீழப்பத்தை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தவிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பல்வேறு இடங்களில் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    விளை நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது. களக்காடு பேரூராட்சி நிர்வாகத்தினர் ஜே.சி.பி மூலம் வெள்ளத்தை வடிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரை புரள்வதால் அங்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    திருக்குறுங்குடி, திருமலைநம்பி கோவில் செல்லும் வழியில் உள்ள நம்பியாற்று பாலமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். களக்காடு அருகே கீழவடகரையின் பச்சையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்தது. #heavyrain #flood #northeastmonsoon 
    கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் போது கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர். தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் எதிரொலியாக குளு பகுதியில் வெள்ளப்பெருக்கில் பஸ்,லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. #Schoolsclosed #HPrains
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில்  சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 

    கடந்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் திக்குமுக்காடிய இமாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.

    குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த குளு மற்றும் மனாலி பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல பகுதிகளில் கரை புரண்டோடும் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

    இன்றும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குளு மற்றும் கின்னவுர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Schoolsclosed  #HPrains
    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது.

    இதனால் கேரளாவுக்கு கோவை வழியாக செல்லும் ரெயில்களின் சேவை கடந்த 4 நாட்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சில ரெயில்கள் ஈரோடு, மதுரை, நெல்லை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

    எனவே சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் ரெயில் சேவை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரம் வருமாறு

    கண்ணூர்- ஆலப்புலா எக்ஸ்பிரஸ், கண்ணூர்- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- கண்ணூர் எக்ஸ்பிரஸ், மங்களூர்- நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ், கொச்சிவேலி-யஸ்வந்பூர் எக்ஸ்பிரஸ்,

    எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் வீடுகளை முற்றிலுமாக சூழ்ந்தது. இதனால் பலர் தங்களது வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
    கீழணையில் இருந்து அதிகபடியான தண்ணீர் திறக்கப்பட்டதால் பழைய கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, மேலக்குண்டலப்பாடி, அக்கரைஜெயங்கொண்ட பட்டினம், மரத்தான்தோப்பு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கடந்த 6 நாட்களாக இந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று கீழணையில் இருந்து 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.

    தெருக்களில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் கிராம மக்கள் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்களை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

    இதனை தொடர்ந்து மீட்பு குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து படகுகள் மூலம் அவர்களை மீட்டனர். 3,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாகவும், 5 ஆயிரம் வீடுகள் பாதியளவும் தண்ணீரால் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்தன.

    வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதால் பலர் தங்களது வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.

    பெரம்பட்டு பகுதியில் பல்நோக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3,600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும் உணவு பொருட்கள் வழங்கினர்.

    வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

    கீழணையில் இருந்து முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று தண்ணீரை அதிகளவு திறந்து விடுகிறார்கள். இதனால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எப்போது என்ன நடக்கும் என்ற அசத்திலேயே நாங்கள் உள்ளோம்.

    எங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குகிறார்கள். நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு உணவு கிடைக்காமல் தவிக்கின்றன. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில அரித்து செல்லப்பட்டது. #Thamirabaraniriver
    ஏரல்:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவை குண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது.

    ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழமைவாய்ந்த தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் அரித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர், பாலம் அரித்து செல்லப்பட்ட இடத்தில் ஜல்லி கற்கள் மற்றும் சரள் மண்ணை நிரப்பி சீரமைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைவாக சென்றது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. எனவே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் வெள்ளம் அரித்து சென்ற பகுதியை காங்கிரீட் கலவையால் முறையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Thamirabaraniriver

    ×