search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிக்காய்ச்சல்"

    • பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கேரள மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மழை காலங்களில் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கம் போல் பெய்யாமல் ஏமாற்றினாலும், பருவ மழை பெய்ய தொடங்கிய போது அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவியது.

    மேலும் அங்கு பறவை காய்ச்சலும் பரவியதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

    கண்ணூர் மாவட்டம் கேணிச்சார் மலையம்பாடி பகுதியில் உள்ள 2 பன்றி பண்ணைகளில் மாவட்ட கால்நடை நல அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த பண்ணைகளை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பரப்பளவை பாதிக்கப்பட்ட பகுதியாகவும், 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளை கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த பகுதிகளில் பன்றி இறைச்சி வினியோகம் செய்யவும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பன்றிகளை கொண்டு செல்வதற்கும், பிற பகுதிகளில் இருந்து கண்காணிப்பு மண்டல பகுதிகளுக்கு பன்றிகளை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை 3 மாத காலம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்ரிக்க காய்ச்சல் பாதிப்பு இருக்கும் 2 பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்ல கண்ணூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அது மட்டுமின்றி கொல்லப்படும் பன்றிகளின் உடல்களை விதிமுறைப்படி அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியிருப்பது அந்த மாவட்டம் மட்டுமின்றி, கேரள மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சளி, இருமல், தொண்டை வலி, தொடர்ந்து காய்ச்சல், காலையில் லேசான காய்ச்சல் இருந்து மாலையில் திடீரென அதிகமாவது, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    கோவை:

    கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண், ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவரால், ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மற்றொருவருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், அவசியம் என்றால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொது வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தியுள்ளோம்.

    கொரோனா வைரஸ்

    அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய இரு வைரஸ் பரவலுக்கும் ஒரே மாதிரியான தடுப்பு பணிகள், பரிசோதனை முறைகளே பின்பற்றப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சளி, இருமல், தொண்டை வலி, தொடர்ந்து காய்ச்சல், காலையில் லேசான காய்ச்சல் இருந்து மாலையில் திடீரென அதிகமாவது, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு ஆகியவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #SwineFlu
    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.  3 ஆயிரத்து 504 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்தில் 71 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில் 7 பேர் இறந்துள்ளனர். 2 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டனர்.

    பஞ்சாப்பில் 31 பேரும், ம.பி.யில் 30 பேரும், இமாசலப்பிரதேசத்தில் 27 பேரும், ஜம்மு காஷ்மீரில் 22 பேரும், மகாராஷ்டிராவில் 17 பேரும், தலைநகர் டெல்லி மற்றும் அரியானாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரத்து 191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 103 பேர் பலியானதாகவும், 14 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹெச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #SwineFlu 
    ராஜஸ்தானில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. #SwineFlu
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் சிட்டோர்கர் ஆகிய பகுதிகளில் நேற்று 5 பேர் பலியாகினர். இதன்மூலம் இந்த ஆண்டின் துவக்கம் முதல் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  

    இதுதவிர நேற்று மட்டும் 79 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜெய்பூரில் 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பார்மரில் 9 பேர், ஜுன்ஜுனுவில் 4 பேர்,  டவுசா, பிகானர், கங்காநகர் மற்றும் உதய்பூரில் தலா 3 பேர், சிகார், ஜோத்பூர், ஜெய்சால்மர், கோட்டா, நாகவுர், அஜ்மீர் மற்றும் ராஜ்சமந்த் பகுதிகளில் 14 பேர், பில்வாரா, பரான், பரத்பூர் மற்றும் அல்வர் பகுதிகளில் 4 பேரும் பன்றிக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #SwineFlu  
    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பிப். 5-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 5-ம் தேதிவரை 2,522 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு இன்றுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகமாக ஜோத்பூரில் 28 பேர் இறந்துள்ளனர் என்றும், 11, 811 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 2,522 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது என்றும் என அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    மராட்டியத்தில் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. #Maharashtra #SwineFlu
    புனே:

    மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் 20 நாட்களில் புனேயை சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். இந்த நிலையில், அகமதுநகர் மாவட்டம் ராகுரி பகுதியை சேர்ந்த 48 வயது நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புனேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. புனேயில் மேலும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சேலத்தில் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகினர். சுகாதார குழுவினர் இப்பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu
    சேலம்:

    சேலம் குகை சிவனார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம்மாள் (வயது39). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எந்த முன்னேறமும் இல்லாததால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    சேலம் அன்னதானப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகனார் (வயது 75). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10 நாட்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சுகாதார குழுவினர் அந்த பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராணிக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. #Swineflu
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் பணிகளை நேரடியாக மேற்கொண்டு வருகிறார்.

    இதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருக்கும் வீடுஜ கடைகள்- வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 139 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த செல்வராணி (வயது42) என்ற பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அவருக்கு சிறப்பு வார்ட்டில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை டெங்கு என அனுமதிக்கப்பட்ட 26-க்கும் மேற்பட்டவர் களுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது ஒரு பெண்ணுக்கு மட்டும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Swineflu

    தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளனர். இதனையொட்டி டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் இதர காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக திருவண்ணாமலைக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

    அப்போது ‘மே ஐ ஹெல்ப் யூ’ மையத்தில் இருந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கவும், பொது இடங்களில் லைசால் மூலமாக சுத்தம் செய்யும், கை கழுவும் பழக்கத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் உருவாக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பிலும், அரசு அலுவலகங்களிலும் தேவையற்று கிடக்கும் பொருட்களிலும் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் போலி மருத்துவர்களிடம் செல்லக் கூடாது. அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சல்களை தடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு ‘டாமி புளூ’ என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்த நோயை எளிதாக குணப்படுத்தலாம்.

    அரசு மருத்துவ நிலையங்களில் 19.75 லட்சம் ‘டாமி புளூ’ மாத்திரைகள் இருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் தேவைப்பட்டாலும் வாங்கி கொள்ளலாம்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 23 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 66 பேர் உயிரிழந்து உள்ளனர்.



    இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெற்ற நல்ல நிலையில் வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 3 ஆயிரத்து 800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பிரச்சினை இதுவரை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu
    பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான சிவகாசி அச்சக தொழிலாளி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகாசி:

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் அருள் (வயது 32). இவர் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு பிரேமா என்கிற கார்த்திகா என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் திருத்தங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் அச்சக தொழிலாளி அருளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், கடுமையான காய்ச்சல் இருப்பதால் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு காய்ச்சலின் தன்மை குறித்து அறிந்து கொள்ள வற்புறுத்தி உள்ளனர். அதன் பேரில் அருள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்து தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அருளுக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் அவர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் நகராட்சி சுகாதார அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள வேலவன் நகர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள மக்களிடம் பன்றிக்காய்ச்சல் நோய் பரவும் விதத்தையும், தடுப்பு முறைகளையும் விளக்கினர். தொழிலாளி ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து நகராட்சி கமிஷனர் சுவாமி நாதன் கூறியதாவது:-

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 55 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளில் 6 நாட்களுக்கு ஒரு முறை கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகிறது. அதேபோல் கழிவுநீர் செல்லும் வாருகால்களை சுற்றி 15 நாட்களுக்கு ஒரு முறை கொசுபுழு உற்பத்தியை தடுக்கும் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால் இங்கு டெங்கு பாதிப்பு இல்லை.

    பன்றிக்காய்ச்சலால் அச்சக தொழிலாளி ஒருவர் இறந்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் ஆய்வு செய்தோம். அந்த வாலிபர் உசிலம்பட்டி சென்று இருந்த போது அங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இறந்த அருளின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

    திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் செண்பகாதேவி கூறியதாவது:-

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாதாரண காய்ச்சல் காரணமாக தான் சிலர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். மற்றபடி டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புக்கு யாரும் சிகிச்சை பெற வில்லை. நோய் பாதிப்பு இருந்தால் அவர்கள் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான அனைத்து வசதிகளும் ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ளது. தற்போது 3 படுகைகள் அந்த தனி வார்டில் உள்ளது. ஆனால் யாரும் பன்றிக்காச்ச்சல் மற்றும் டெங்கு நோய்க்கு இங்கு தங்கி சிகிச்சை பெற வில்லை என்றார்.

    சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ் கூறியதாவது:-

    சிவகாசி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 12 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் திருத்தங்கல் பகுதியில் முத்துலட்சுமி, அருள் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்துள்ளனர். மற்றவர்கள் நோயின் பிடியில் இருந்து மீண்டு வருகிறார்கள். தற்போது ராஜபாளையத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். வேறு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் தாலுகா அளவிலான அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருந்துகள் உள்ளது. தனி வார்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
    முசிறி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியானார்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 67), விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையாக காய்ச்சல் இருந்துவந்தது. இதையடுத்து அவர் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் நாகமுத்துவை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று நாகமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பெரும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிராமங்கள் தோறும் சுகாதார பணிகளை மேம்படுத்துவதோடு மருத்துவ குழுவினர்கள் சார்பில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சையும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை பன்றிக்காய்ச்சலுக்கு 1020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Swineflu #Radhakrishnan
    வேலூர்:

    தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். இதை தடுக்கும் நோக்கில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், பஸ் ஆட்டோக்களில் நோய் தடுப்பு மருந்து தெளித்தும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பின்னர் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அக்டோபர் மாதத்தில் காய்ச்சல் நோய் அதிகமாக இருந்தது. போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை படிப்படியாக குறைந்துள்ளது. பெரும்பாலும் இந்த காலங்களில் ஏற்படும் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். போலி டாக்டர்களிடம் செல்லக் கூடாது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக பன்றிக்காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் நோய் தடுப்பு மருந்தான ‘லைசால்’ வைத்து பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களான சினிமா தியேட்டர், திருமண மண்டபம் பஸ், ஆட்டோக்களில் மருந்து தெளிக்கப்படுகிறது.



    மாநிலம் முழுவதும் 416 பெரிய வாகனங்கள், 710 சிறிய வாகனங்களில் நடமாடும் முகாம், 1,700 காய்ச்சல் முகாம்கள் அமைத்து நோயை கட்டுப்படுத்தி வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டு காலதாமதமாக வரக்கூடாது. மக்கள் கூடும் இடங்களில் ‘லைசால்’ மருந்து தெளிப்பதால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலால் கடந்த ஆண்டு 3,800 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 1,020 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் 12 பேர் இறந்துள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் 259 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா முழுவதும் 8,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நோக்கம் இறப்பை தடுப்பது தான். பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் டாமி புளு மாத்திரைகள் 19.75 லட்சம் இருப்பில் உள்ளது.

    ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கடந்த 5 நாட்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கூடுதல் மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் 35 சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Swineflu #Radhakrishnan

    ×