search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98028"

    செங்கல்பட்டு அருகே போலீஸ் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயக்குமார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஜெயக்குமார் தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதில் எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரது நண்பர்கள் குறித்து போலீசார் அவரிடம் அடிக்கடி விசாரித்தனர். அவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஜெயக்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் மிரட்டியதால் தான் ஜெயக்குமார் தற்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை-திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

    டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஜெயக்குமாரின் உறவினர்கள் கூறும்போது, “போலீசாரின் மிரட்டலால்தான் ஜெயக்குமார் தற்கொலை செய்து உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    ஆலந்தூர் அருகே போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடமிருந்து 87 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.
    ஆலந்தூர்:

    சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.

    எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.

    அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.

    மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
    கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாக போலீசாரை தரக்குறைவாக பேசி இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் (வயது 25) என்பவர் கடந்த 25-ந்தேதி சென்னையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ராஜேஷ் வீடியோ பதிவு செய்திருந்தார். இது இணையதளத்தில் பரவியது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இணைய தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பேசிய ஒரு வாலிபர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாகவும் போலீசாரை தரக்குறைவாகவும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் செந்தில் (23) என்பவர்தான் போலீசாரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இவர் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    திண்டுக்கல்லில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் காப்பாற்றினர்.
    குள்ளனம்பட்டி:

    ஒட்டன்சத்திரம் அருகே கருப்பணபுரத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி கல்பனா (வயது21). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த கல்பனா தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

    பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்வதற்கு முயன்ற கல்பனாவை ரெயில்வே போலீசார் வடிவேல் மற்றும் சபீதா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

    மேலும் கல்பனாவின் தாய் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கல்பனாவை ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசாரை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார். #tamilnews
    சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் கரூப்பூர் ரெயில் நிலையம் - தின்னப்பட்டிக்கு இடையே நாலுக்கால்பாலம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபரின் சட்டை பையில் ஆதார் கார்டு இருந்தது. அதை பார்த்த போது அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்திரன் மகன் சுஜீஸ் என இடம் பெற்றிருந்தது.இதனால் இறந்தது சுஜீஸ்தானா? என்பது குறித்தும், அவர் எப்படி இறந்தார்? ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இன்று சென்னை போலீசாரை கண்டித்து வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காவேரிப்பட்டணம்:

    சென்னையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராஜேஸ் ரெயில் தண்டவாளம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னை போலீசாரை கண்டித்து அவர் பேசிய வீடியோ வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டத்தில் இன்று வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா கார்கள் இன்று ஓடவில்லை. #tamilnews
    அமெரிக்காவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் 2 பேரை சக போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வழிப்புறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் காவேரிமணியன் (வயது 33). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார். இந்நிலையில் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகியோர் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வாகன சோதனை என்று அவர்களை வழிமறித்து, 2 பவுன் செயின் மற்றும் 4 கிராம் மோதிரம் ஆகியவற்றை போலீஸ்காரர் காவேரி மணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து பறித்துள்ளார். இதில் செந்தில்குமாரும், செல்வியும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து காவேரி மணியனை சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

    இதேபோல் கழுகுமலையில் இருந்து இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்களிடம் 11.5 பவுன் நகை பறித்தது மற்றும் கோவில்பட்டி தனியார் நகைக்கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த கயத்தாறை சேர்ந்த முருகானந்தத்தை அரிவாளை காண்பித்து மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்தது ஆகிய புகார்கள் தொடர்பாக காவிரி மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் அவரது கூட்டாளிகளான வெங்கடேஷ், கணேசன், சுடலை மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் காவலர் காவேரி மணியன் பணிநீக்கமும் செய்யப்பட்டார். இந்த 3 வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் குமார், செல்வியிடம் நகை பறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் காவேரி மணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் தீர்ப்பளித்தார். மற்ற இரு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் அவரது கூட்டாளிகள் மூவரும் அனைத்து வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து காவிரி மணியனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். #tamilnews
    புதுவையில் 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீசில் 8 சூப்பிரண்டுகள் இடம் காலியாக இருந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த மாறன், பாஸ்கர்,, ஜிந்தா கோதண்டராமன் உள்பட 8 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர்.

    இதையடுத்து அந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடங்கள் காலியாக இருந்தது. அந்த இடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப முடிவு செய்தனர்.

    அதன்படி சப்-இன்ஸ் பெக்டர்களாக பணிபுரிந்த சுப்பிரமணியன், ஜபாஹிரில்லா, சந்திர சேகரன், வெற்றிவேல், சேகர், பேட்ரிக், ரகுபதி, தியாகராஜன் ஆகிய 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

    இந்த உத்தரவை போலீஸ் தலைமையக போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார். இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தர விடப்பட்டுள்ளது.

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #RepublicDay #Merina
    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி(சனிக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் குடியரசு தின விழா மெரினா கடற்கரை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி இன்று (சனிக்கிழமை), 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), 24-ந்தேதி (வியாழக்கிழமை) ஆகிய 3 நாட்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே குடியரசு தினத்தன்றும், அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    * அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    பிராட்வே செல்லும் வழி

    * அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். பின்னர் லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை நீல்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    * டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண், ‘27 டி’ ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

    அண்ணாசாலை வழி

    * மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழிதடம் எண், 21 ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    * மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் 45 பி மற்றும் 12 ஜி ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடையலாம்.

    ஐஸ் அவுஸ் நோக்கி...

    * டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    * டாக்டர் நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ்அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

    * டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

    * பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

    * வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும், மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

    * அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.

    அடையாறு சென்றடையலாம்

    * பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, ஒயிட்ஸ் ரோடு, அண்ணா சாலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன், காரணீஸ்வரர் பகோடா தெரு சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.

    * வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ராமாவரம் போலீஸ் அதிகாரியிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் வைகை தெரு சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

    கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி உமாசங்கர் கிண்டி போரூர் டிரங்க் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3பேர் கும்பல் உமாசங்கர் பைக் மீது மோதினர்.

    இதை தட்டி கேட்ட உமாசங்கரிடம் குடிபோதையில் இருந்த 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர். தீடீரென உமாசங்கரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    போலீஸ் அதிகாரியை தாக்கி செல்போன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உத்தரவிட்டார்.

    ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் கார் எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பறித்து சென்ற செல்போனை அவர்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து உமாசங்கரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்த கமலக்கண்ணன், சங்கர், ராஜ்குமார் என்பது தெரிய வந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
    சிவகாசி :

    கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:-

    நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

    அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 25), தங்கேஸ்வரன் (23), ராமச்சந்திராபுரம் குருமகன் (24), சுப்பிரமணியபுரம் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
    ×