search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன்"

    பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்தநிலையில் அந்த மாணவன் வீடியோவை தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக மாணவர்களுக்கு உற்சாகமாக அனுப்பியுள்ளனர். இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவன், மாணவி மற்றும் வாட்ஸ்அப்பில் பரவ விட்ட மாணவன் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிரடியாக 3 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கூடம் திறந்ததால் ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்து சக மாணவிக்கு விளையாட்டாக தாலி கட்டியதாகவும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை விட்டு விடுங்கள், இனிமேல் இதுபோன்றதொரு தவறு நடக்காது என அந்த மாணவன், போலீசாரிடம் கெஞ்சினான்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் இந்த விஷயத்தை இதற்குமேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பும்படியும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசாரும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



    7ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்து, மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் பிற மாணவர்களுடன் வெளியே உல்லாசப்பயணம் சென்றிருந்தான். அப்போது அந்த மாணவன் பிஸ்கெட்டை திருடியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தண்டனையாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அந்த குறிப்பிட்ட மாணவனை பள்ளிக்கூடத்தில் வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவன் சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவனது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அந்த மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்து விட்டனர். இதில் பள்ளி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் 10-ந் தேதி நடந்துள்ளது.

    இதுகுறித்து உத்தரகாண்ட் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவனத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து பள்ளி மேலாளர், வார்டன், விளையாட்டு ஆசிரியர், 2 மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூரில் மெழுகுவர்த்தியால் 4-ம் வகுப்பு மாணவனுக்கு சூடு வைத்ததது குறித்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளியின் 9 வயது மகன் கோல்டன் நகரில் உள்ள பாரத் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல மாணவன் தயாரானான். அப்போது அவனின் இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். உடனடியாக அவனிடம் விவரம் கேட்டனர்.

    அப்போது அவன், பள்ளி ஆசிரியை தன்னை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாக பெற்றோரிடம் கூறினான். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் தனது மகனுடன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்து புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பள்ளியில் 4-ம் வகுப்பு ஆசிரியையாக உள்ள ரம்யா(வயது 22) அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் மாணவன், வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் நோட்டுகளை வாங்கி பார்த்த ரம்யா, கோபத்தில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவனின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், ஆசிரியை ரம்யா மீது சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். ரம்யா அந்த பள்ளி தாளாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சூடுவைத்ததால் காயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    வேதாரண்யத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவன் ஒருவருக்கு பாதி அளவே கைகள் உள்ளன. ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்காத அவன், ஊனம் ஒரு தடையில்லை என்கிறான்.
    வேதாரண்யம் :

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நல்லத்தன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வேதாரண்யத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை ஆணாக பிறந்த மகிழ்ச்சியில் இந்த தம்பதியினர் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்கவில்லை.

    காரணம், இந்த குழந்தையின் இரண்டு கைகளும் முழங்கை வரையில் பாதி அளவே இருந்தன. விரல்கள் இல்லை. இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த இந்த தம்பதியினர், தங்களுக்கு ஆண்டவன் கொடுத்த பாக்கியம் இவ்வளவுதான் என்று மனதை தேற்றிக்கொண்டனர். தங்கள் மகனுக்கு துர்கேஸ்வரன் என்று பெயர் சூட்டினர். பிறவி ஊனம் தங்கள் மகனை எந்தவிதத்திலும் பாதித்து விடாத வகையில் துர்கேஸ் வரனை சுரேஷ்-சுகன்யா தம்பதியினர் வளர்த்து வருகிறார்கள்.

    தற்போது துர்கேஸ்வரனுக்கு 7 வயதாகிறது. இவன் வடமழை ரஸ்தா பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற குழந்தைகளைப்போல் தனக்கு இரண்டு கைகளும் முழுமையாக இல்லையே என்று துர்கேஸ்வரன் கவலைப்பட்டதே இல்லை. உள்ளதைக்கொண்டு நல்லதை செய்வோம் என்றபடி தனக்கு இருக்கும் கைகளை வைத்துக்கொண்டு பள்ளியில் கற்பிக்கப்படும் கராத்தே, நடனம், கணினி உள்ளிட்டவற்றை கற்று வருகிறான் துர்கேஸ்வரன்.

    மற்றவர்களுக்கு தான் எந்தவிதத்திலும் சளைத்தவன் அல்ல என்ற ரீதியில் தனது ஊனத்தை சிறிதளவும் பொருட்படுத்தாமல் வகுப்புஅறையில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனித்து படித்து வருகிறான். விரல்கள் இல்லாத நிலையில், ஆசிரியர், கரும்பலகையில் எழுதி போடுவதை தனது முழங்கைகளுக்கு நடுவில் எழுதுகோலை பிடித்து நோட்டில் எழுதுகிறான். சக மாணவர்களுடன் உற்சாகமாக கற்று தேர்ச்சி அடைந்து, விரைவாக முன்னேறி வரும் துர்கேஸ்வரனுக்கு அவனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சிங்கார வடிவேலும், ஆசிரியை கஜலட்சுமியும் ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

    ஆசிரியர்களுடன் துர்கேஸ்வரன்.

    இதுகுறித்து துர்கேஸ்வரன் கூறியதாவது:-

    எங்கள் பள்ளியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி ஆகியவையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனக்கு முன்னங்கைகள் இல்லை. கல்வி மற்றும் விளையாட்டில் எனக்கு உள்ள ஆர்வத்தை பார்த்த ஆசிரியை கஜலட்சுமி, தலைமை ஆசிரியர் ஆகியோர் எனக்கு பாடம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    இதனால் நான் தன்னம்பிக்கையுடன் பயின்று வருகிறேன். என்னுடைய ஊனத்தை நான் ஒரு போதும் தடையாக நினைத்து பார்த்தது கிடையாது. என்னால் முடிந்தவரை மற்றவர்களை எதிர்பார்க்காமல் எனக்கு தேவையானவற்றை செய்து வருகிறேன். சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை.

    மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக எனக்கு செயற்கை முன் கைகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கண்டிப்பாக நான் கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பேன்.

    இவ்வாறு அவன் கூறினான்.

    கைகள் முழுமையாக உள்ளவர்களே உழைப்பதற்கு யோசிக்கும் இந்த காலத்தில் பாதி அளவே உள்ள கைககளை வைத்துக்கொண்டு சாதனை படைப்பேன் என்று கூறும் மாணவன் துர்கேஸ்வரனுக்கு அப்பகுதி மக்கள் பெரிதும் ஊக்கம் அளித்து வருகிறார்கள். நாமும் அவருக்கு ஒரு சபாஷ் போடலாமே!
    ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்ட அரசு பள்ளிக் கூடத்தை திறக்கக்கோரி 8-ம் வகுப்பு மாணவன் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 550 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் முதல் ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கூடம் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் குறுக்குச்சாலையை சேர்ந்த சந்திரனின் மகன் சந்தனகுமார்(வயது 13) நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்தான். ஆனால், பள்ளிக்கூடம் மூடப்பட்டு இருந்தது. இதனால் ஒரு அட்டையில், பள்ளிக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாசகங்களை எழுதி கையில் பிடித்துக்கொண்டு பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினான்.

    இதுபற்றி அவன் கூறும்போது, ‘காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது. தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கூடத்தை உடனடியாக திறக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றான்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ், போலீசார் பள்ளிக்கு சென்று மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அந்த மாணவன் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றான். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    அரவக்குறிச்சி அருகே மாணவன் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி புது பட்டாணி தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவரது மகன் யாசர்அராபத்(வயது 9). இவர் பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் பள்ளப்பட்டி உருசு மைதானம் பின்புறம் நங்காஞ்சி ஆற்றின் அருகே உள்ள ஊர் பொது கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் தனது மகன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அப்துல்ரகுமான் சம்பந்தப்பட்ட கிணற்றிற்கு சென்று பார்த்தார். அப்போது கிணற்று மேட்டில் யாசர்அராபத்தின் ஆடைகள் மட்டும் இருந்தன. இதனால் தனது மகன் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கருதினார்.

    பின்னர் இதுகுறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாசர்அராபத்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    டெங்கு குறித்த கேள்விக்கு சரியான பதில் அளித்த மாணவன் மணிகண்டனுக்கு கலெக்டர் மகேஸ்வரி தனது பேனாவை பரிசாக அளித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். #Collector #Dengue
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள சதுரங்கபேட்டை அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் பூண்டி நெய்வேலி கிராமத்தில் இன்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது நெய்வேலி கிராமத்தில் உள்ள தெருக்குழாய்களில் உள்ள குறைகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குடிநீர் தொட்டிகளில் உள்ள குடிநீரில் குளோரின் அளவுகளை ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து வீடு, வீடாக சென்று குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி புழுக்கள் உள்ளதா? என்றும் வெட்டவெளிகளில் கிடக்கும் டயர், தேங்காய்மற்றும் தொட்டிகளை பார்வையிட்டார்.

    அப்போது வீட்டில் படித்துக் கொண்டிருந்த பாபு என்பவரின் மகன் மணிகண்டனை அழைத்து டெங்கு குறித்த கேள்வியை கலெக்டர் மகேஸ்வரி கேட்டார். இதற்கு சரியான அவன் சரியான பதிலை கூறினான்.

    இதைத் தொடர்ந்து மாணவன் மணிகண்டனுக்கு கலெக்டர் மகேஸ்வரி தனது பேனாவை பரிசாக அளித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மணிகண்டன் பூண்டியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இதைத் தொடர்ந்து சதுரங்கப்பேட்டை அரசு பள்ளியில் உள்ள மேல்நிலை தொட்டி மற்றும் கழிவறையை கலெக்டர் பார்வையிட்டார். அங்கு பணியில் இருந்த துப்புரவு பணியாளர்களை கையுறை அணிந்து வேலை செய்யுமாறு எச்சரித்தார்.

    டெங்கு கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார். ஆய்வின் போது நிலவேம்பு குடிநீரை அவர் வழங்கினார்.

    அப்போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், வட்டாட்சியர் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், திருவள்ளூர் துணை வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #Collector #Dengue
     
    அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியான வழக்கில் இழப்பீட்டு தொகை செலுத்தாததால் சேலம் கோட்டம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 14). புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 2008-ம் ஆண்டு மாலை பள்ளியிலிருந்து புறப்பட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது திருப்பத்தூரிலிருந்து வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பஸ் சைக்கிள் மீது மோதியதால் மாணவன் படுகாயம் அடைந்தார். பின்னர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சில நாட்களில் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக இறந்த மாணவனின் தந்தை சாமு என்கிற முருகேசன் வாணியம்பாடி கோர்ட்டில் இழப்பீட்டுத்தொகை வழங்ககோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு இறந்த மாணவனுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதுவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரூபாயை சேலம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் இருந்து வந்தது.

    இதுகுறித்து முருகேசன் வாணியம்பாடி கோர்ட்டில் மீண்டும் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராமசந்திரன் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி பஸ் நிலைத்திற்கு வந்த சேலம் கோட்டம் அரசு பஸ்சை கோர்ட்டு பணியாளர்கள், வக்கீல் குணசேகரன் முன்னிலையில் ஜப்தி செய்தனர். #tamilnews
    மணப்பாறை அருகே நள்ளிரவில் 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கார்த்தி (வயது 15). அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற அவன், இரவு அங்கு நண்பர்களுடன் சாலையோரம் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு காரில் சிலர் வந்தனர்.

    திடீரென காரை நிறுத்திய அவர்கள், கார்த்தியை அழைத்து, ஒரு முகவரியை கூறி அங்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். கார்த்தி, எப்படி செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பார்த்து, காரில் வந்தவர்கள், கார்த்தியின் முகத்தை கைக்குட்டையால் பொத்தியுள்ளனர்.

    அதன் பின்னர் அவன் மயக்கமடையவே, அவனை யாருக்கும் தெரியாமல் காருக்குள் தூக்கிப்போட்டு கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதனிடையே இரவு ஆகியும் கார்த்தி வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன் எங்கு சென்றான் என்று பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கருங்குளம் பகுதியில் உள்ள 45 அடி ஆழ கிணற்றில் இருந்து சிறுவனின் சத்தம் கேட்டது.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்வையிட்ட போது அங்கு சிறுவன் ஒருவன் 5 அடி தேங்கியிருந்த தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் கிணற்றுக்குள் இருந்து சிறுவனை மீட்டனர்.

    பின்னர் போலீசார் விசாரிக் கும் போது அந்த சிறுவன் மாயமான கார்த்தி என்பது தெரியவந்தது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். நல்ல வேளையாக பொதுமக்கள் பார்த்து சொன்னதால் கார்த்தியை காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் இரவு முழுவதும் அவன் கிணற்றுக்குள்ளேயே கிடந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியிருக்கும்.

    தொடர்ந்து கார்த்தியிடம் விசாரிக்கும் போது, காரில் வந்தவர்கள் தனது முகத்தை கர்ச்சிப்பால் மூடியதும் மயக்க மடைந்ததாகவும், அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும், கிணற்றுக்குள் கிடந்ததாகவும் தெரிவித்தான்.

    காரில் வந்த கும்பல் கார்த்தியை மயக்கமடைய செய்து கடத்தி சென்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அந்த கும்பல் குழந்தைகள் கடத்தலை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? அல்லது ஏதாவது முன்விரோதம் காரணமாக? கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நரபலி கொடுப்பதற்காக சிறுவனை காரில் கடத்தி சென்ற நிலையில், அவன் மயக்கம் தெளிந்து சத்தம் போடவே, பொதுமக்களுக்கு பயந்து கிணற்றுக்குள் வீசிச் சென்றனரா? என்றும் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. #tamilnews
    மதுரையில் விடுமுறை என்று சகமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.

    பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவன் மீது ஒழுங்கீன புகார் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது செல்போனை பயன்படுத்துதல், சக மாணவர்களை செல்போனை பார்க்க வைத்து தொந்தரவு செய்வது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் கேலி, கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார்.

    இந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் நேற்று பள்ளிக்கு வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலர் சி.டி.வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை பரிதா பிரேமா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபாபதி, துணைத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கல்வி அலுவலர் வீரமணி கூறுகையில், ’பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்றது. விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். #tamilnews
    கரூர் மாவட்டத்தில் ஓரின சேர்க்கையில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள விசுவநாதபுரி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சிரஞ்சீவி (வயது 13). இவன் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற சிரஞ்சீவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகர் வாய்க்கால் அருகே உள்ள வனப்பகுதியில் மாணவன் சிரஞ்சீவி பிணமாக கிடந்தான். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் க.பரமத்தி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் விசுவநாதபுரி சலைவைக்கல் தெருவைச் சேர்ந்த மினி பஸ் கண்டக்டர் பிரதீப் என்பவர் (19) அன்று மாலை சிரஞ்சீவியை அழைத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவன் சிரஞ்சீவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவர் போலீசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-


     எனக்கு ஓரினசேர்க்கையில் ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிரஞ்சீவியை நைசாக பேசி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். பின்னர் அவனை மிரட்டி ஓரினசேர்க்கைக்கு இணங்க வைத்தேன். அப்போது அவன் கதறி அழுதான். மேலும் அவனது அம்மா, அப்பாவிடம் சொல்லி விடுவேன் எனக் கத்தினான்.

    இதனால் பயந்து போன நான் குடிபோதையில் எனது சட்டையை கழற்றி அவனது வாய், மூக்கை அமுக்கினேன். இதில் அவன் இறந்துவிட்டான்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    ×