என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தக்காளி"
- தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
- தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-
தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.
அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
- தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.
ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.
நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்துக்கு நிகராக தக்காளிக்கு மவுசு கூடி உள்ளது. இந்த நிலையில் தக்காளியை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.
பெங்களூரு அருகே உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ். இவர் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். விளைச்சல் அதிகரித்த நிலையில் அவற்றை அறுவடை செய்தார். இதில் அவருக்கு 2 டன் தக்காளி சேர்ந்தது. பின்பு அவற்றை கோலார் மாவட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு எடுத்து வந்தார். பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வந்தபோது ஒரு இடத்தில் தக்காளி வாகனத்தை அவரும், டிரைவரும் டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழி மறித்தனர். தங்களது மோட்டார் சைக்கிளில் சரக்கு வாகனம் மோதியதாக கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கூட்டாளிகள் 3 பேர் அங்கு வந்தனர். 5 பேரும் சேர்ந்து பின்னர் மல்லேசையும், டிரைவர் சிவண்ணாவையும் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தக்காளி இல்லாமல் வாகனம் மட்டும் தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையில் சரக்கு வாகனத்துடன் தக்காளியை கடத்தியது தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), அவரது மனைவி சிந்துஜா(36) உள்ளிட்ட 5 பேர் கும்பல் என்று தெரிந்தது. தக்காளியை வாகனத்துடன் கடத்திய கும்பல் அதை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சென்னையில் 2 டன் தக்காளியையும் ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். மேலும் அந்த பாஸ்கர், சிந்துஜா உள்ளிட்ட உள்பட 5 பேரும் பணத்தை ஆளாளுக்கு பிரித்துக்கொண்டனர். அதன்பின்னர் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், சிந்துஜாவை வாணியம்பாடிக்கு வந்தனர். அங்கு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது.
- தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.
ஓமலூர்:
ஓமலூர்,காடையாம் பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகள வில் செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை
காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. அதனால், பெரும்பா லான விவசாயிகள் குறு கிய கால பயிர்களை தவிர்த்து நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து காய்கறி வருகின்றனர்.
இந்த நிலையில் குறைந்த நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருந்ததால் விவசாயிகள் தக்காளி அதிகளவில் பயிரிடுவதை தவிர்த்து வந்தனர். சில விவசாயிகள் மட்டும் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். அதனால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.
கடந்த மாதம் தக்காளி விலை பன்மடங்கு உயர்ந்து தற்போது கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. அதனால் மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்குகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஓமலூர் வட்டாரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நாட்டு தக்காளி தற்போது நல்ல விளைச்சல் கொடுத்து வருகிறது. இந்த தக்காளி அளவில் சிறியதாக இருப்பதாலும், 4,5 நாட்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்பதாலும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.
விலை குறைவு மற்றும் நாட்டு தக்காளி என்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
- ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.
பவானி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.
அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.
மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.
அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
- தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
தக்காளி விலை உயர்வின் காரணமாக, அவற்றை மர்ம நபர்கள் திருடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சுழற்சி முறையில் காவல் காத்து வருகின்றனர்.
மேலும் தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
- ஓசூர் பகுதியில் அதிக வெயில் மற்றும் நோய் தாக்கம் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
- மானிய விலையில் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு விளையும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களுக்கும் கர்நாடக, கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. இப்பகுதியில் கடந்தாண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டி ருந்தது.
வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தக்காளி சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம் கட்டி வரும் நிலையில், கடந்த காலங்களில் பசுமைக் குடில்களில் 50 பைசா-வுக்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நாற்று தற்போது, ரூ.1 முதல் ரூ.2 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் நாற்றுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், இலவசமாக நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அலுவலர் கூறுகையில் ஓசூர் பகுதியில் அதிக வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
விலை உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தக்காளி நாற்று தேவை அதிகரித்துள்ளதால், பசுமைக் குடில்களில் நாற்றின் விலை கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்கவும், தக்காளி உற்பத்தியை அதிகரிக்கவும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக நாற்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும் நிலையில், ஓசூர் பகுதியில் முதல்கட்ட பருவத்துக்கு 100 ஹெக்டேருக்கு தேவையான 15 லட்சம் நாற்றுகள் மற்றும் இயற்கை உரத்தை இலவசமாக வழங்க உள்ளோம். இந்த நாற்றுகள் மூலம் 45 நாட்களில் விளைச்சல் கிடைக்கும் என அவர்கள் கூறினர்.
- கடந்த 20 நாட்களுக்கு பிறகு தக்காளி விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 36 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.
போரூர்:
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்பட்டது.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்ததால் கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து திடீரென குறைய தொடங்கியது. இதனால் இந்த விலை உயர்வு என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1-ந்தேதி முதல் தக்காளியின் விலை தாறுமாறாக உயரத்தொடங்கியது. கோயம்பேடு மார்கெட்டில் அன்று சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், வெளிமார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ரூ.130-யை கடந்தும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வந்தது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வந்ததால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்தனர். இதையடுத்து தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் வெளிமார்கெட்டில் தக்காளியின் விலை குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு பிறகு தக்காளி விலை சற்று குறைய தொடங்கி உள்ளது. இன்று கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கு விற்கப்படுகிறது.
சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 36 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன. இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை படிப்படியாக குறையும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- ரேஷன் கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு தமிழக அரசின் உத்தரவு பேரில் விற்பனை செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் அதிக அளவில் அந்த கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.
கடலூர்:
தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் என பெரும்பாலான காய்கறி விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் இஞ்சி கிலோ 250 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரையிலும், தக்காளி 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விலை உயர்வானது தற்போது வரை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதோடு காய்கறியை வாங்குவதை குறைத்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு தமிழக அரசின் உத்தரவு பேரில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் முதுநகர் சாலைக்கரை பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில், கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தக்காளி விலை தொடர்ந்து குறையாத காரணத்தினால் இன்று ஒரு கிலோ தக்காளியை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் அந்த கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர். ஆனால் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. தக்காளி அனைத்தும் சுமார் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இதே வியாபாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 20 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
- ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது.
ஆற்காடு:
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
ஜூலை மாதம் தொடக்கத்தில் உயரத் தொடங்கிய தக்காளி விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதனால், சமையலில் தக்காளி பயன் படுத்துவது குறைந்துள்ளது.
இந்நிலையில் தக்காளி விலை உயரும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் சோபகிருது தமிழ் ஆண்டின் 34, 35 பக்கங்களில் ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்க்காண கணிப்பில் இந்த தகவல் உள்ளது.
அறிவியலை மீறி வாழ்வியல் சாஸ்திரமான பஞ்சாங்கத்தில் மழை, புயல், வானிலை, விளைச்சல் குறித்த தகவல்கள் துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆற்காடு ஜோதிடர் சுந்தர்ராஜன் கூறுகையில்:-
ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறியபடி தற்போது தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் டெல்லி ஒரிசா மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மணல் பிரசனை தீரும். கட்டிட உபகரணங்கள் விலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது என்றார்.
- சில மாநிலங்களில் 1 கிலோ தக்காளி ரூ.300-க்கு விற்கப்படுகிறது.
- விலை உயர்வை கேலி செய்யும் வகையில் சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சில மாநிலங்களில் 1 கிலோ தக்காளி ரூ.300-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வை கேலி செய்யும் வகையில் சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தக்காளி குறித்த பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அதில், எனது சகோதரி விடுமுறைக்காக அவரது பிள்ளைகளை அழைத்து கொண்டு இந்தியா வந்தார். அப்போது அவர் துபாயில் இருந்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என எனது தாயாரிடம் கேட்டார். அதற்கு எனது தாயார், 10 கிலோ தக்காளி வாங்கி வருமாறு கூறினார். அதன்படி எனது சகோதரி 10 கிலோ தக்காளியை பார்சல் செய்து சூட்கேசில் கொண்டு வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 600-க்கு மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. இதனை பார்த்த பயனர்கள் தக்காளி கொண்டு வந்த சகோதரியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
- 2 வாரங்களாகியும் தக்காளி விலை குறையவில்லை.
- வெளி மார்க்கெட்டுகளில் இதைவிட விலை அதிகமாக உள்ளது.
மதுரை
இந்தியர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தி வருவதும், பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பொருளாகவும் உள்ள தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 20 முதல் 30 வரை விற்பனை செய்து வந்த தக்காளி தற்போது கிலோ ரூ. 140 வரை விற்பனையாகிறது.
தமிழ கத்தின் தக்காளி தேவை அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் தக்களாளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளிக்கு பற்றாக்குறை நிலவியது.
தேவை அதிகம் காரணமாக அதன் விலையும் நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது.
தொடக்கத்தில் கிலோ ரூ. 80-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.130 முதல் 140 வரை விற்பனையாகிறது.
இந்த திடீர் விலையேற்றம் நடுத்தர, ஏழை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அன்றாடம் சமையல் பயன்படும் தக்காளியை தவிர்க்க முடியாத காரணத்தில் விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். தமிழக அரசும் தக்காளியை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்தது. ஆனால் விலை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2 வாரங்களாகியும் தக்காளி விலை தற்போது வரை குறையவில்லை. இதனால் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்துவம் சில மாநிலங்களில் நடந்து வருகிறது. 2 வாரத்திற்கு முன்பு சரியாக விளைச்சல் செலவு கூட கிடைக்காத தக்காளி பயிரிட்ட விவசாயிகளை இந்த விலையேற்றம் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாவும் மாற்றி உள்ளது.
மதுரையை பொருத்த வரை தக்காளி விலை குறைந்தபாடில்லை. அதற்கு மாறாக நாள்தோறும் விலையேறிக் கொண்டு உள்ளது. தக்காளி மட்டுமின்றி சின்னவெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், மிளகாய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலையும் ரூ. 100-ஐ தாண்டி உள்ளது.
மதுரை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-
புடலங்காய்-ரூ.24, பூசணி-ரூ.25, கொத்தவரங்காய்-ரூ.35, குடைமிளகாய்-ரூ.90, முருங்கைகாய்-ரூ.45, கொத்தமல்லி-ரூ.40, சேனைகிழங்கு-ரூ.50, கருணைகிழங்கு-ரூ.95, சீனிகிழங்கு-ரூ.40, மரவள்ளிகிழங்கு-ரூ.30, பெரிய வெங்காய்-ரூ.28, புதினா-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.30, பாகற்காய்-ரூ.50, மலைப்பூண்டு- ரூ.200, கேரட்-ரூ.50, பச்சை பட்டாணி-ரூ.180, மொச்சை-ரூ.50, பீட்ரூட்-ரூ.42, இஞ்சி-ரூ.160. இதே போல் பலசரக்கு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
உழவர் சந்தையில் மேற்கண்ட விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் இதைவிட விலை அதிகமாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்