என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 98643"
- பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
- கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.
நெல்லை:
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.
இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
- மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 மீனவர்களுடன் பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் வலை வீசி நண்டு பிடித்தார். அப்போது அவர்களது வலையில் டிரோன் ஒன்று சிக்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் டிரோனை சோதனை செய்த போது, அது 2 அடி நீளம், 1 அடி உயரமாக இருந்தது. 6 இறக்கைகளும் காணப்பட்டன. மேலும் அதில் சாகர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது கடலோர காவல் படைக்கு இன்னும் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த டிரோன் குறித்து போலீசார் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த டிரோனை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிக்கு பறக்க விட்டபோது தொழில் நுட்ப கோளாறால் கடலில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இன்னும் 10 நாளில் மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளது.
- மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேராவூரணி:
தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி முடிய 60 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க நடைபெற மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிபட்டினம் துறைமுகத்தில் 147 விசைப்படகுகள் உள்ளது. விசைப்படகுகள் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்னும் 10 நாளில் மீன் பிடி தடைக் காலம் முடிய உள்ள நிலையில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து புதிய வர்ணம் பூசும் பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
- 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
- துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழையாறு துறைமுகம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 50 விசைப்படகுகள், 450 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக கருதப்படும் இந்த பழையாறு துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வருடந்தோறும் மீன் இனவிருத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் மாதம் தொடங்கி 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விசைப்படகுகள் 61 நாட்களுக்கு கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்துக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது.
இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது விசைப்படகுகளை பழையாறு துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும், அதனை ஒட்டி செல்கின்ற பக்கிங்காம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தற்போது இந்த தடைகாலத்தில் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி மற்றும் புதுப்பிக்கும் பணி, வலை பின்னுதல், வலைகளை பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் பழையாறு துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் கருவாடு காய வைத்தல் மற்றும் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 'மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் நிவாரண தொகையாக மீனவ குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. மேலும் படகு பராமரிக்க தேவையான உபகரணங்கள், பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு உள்ளோம். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும்போது எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றார்.
- மீனவர்களிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டன.
- ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட 4 சக்கர வாகனம் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பவர்பாயின்ட் வாயிலாக மீனவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் தங்களது மீனவ கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க அறிவுருத்தினார்.
அதனை தொடர்ந்து மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம்கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து 62 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், உதவி இயக்குநர் (மீன்வளம்) ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இரட்டைமடி வலைகள் மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாகப்ப ட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கிராம நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால் விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்து றையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது எனவும், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வழங்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி தொழில் செய்தால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் வரும் 14ம் தேதி முதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தனர்.
- கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டனர்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது40). இவருக்கு சொந்தமான நாட்டு படகு நாகசாமி(58), வடிவேலு(32), அருண் குமார்(22), சதீஸ்குமார்(22), கிருஷ்ணகுமார்(22) ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களுடன் செல்வ ராஜூம் சென்றார். அவர்கள் நடுக்கடலில் சென்றபோது திடீரென படகில் இருந்த என்ஜீன் பழுதானது.
இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் தத்த ளித்தனர். இதுபற்றி மீன்வ ளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து கப்பலில் சென்று பாம்பன் கடற்கரை விளக்கம் பகுதியில் இருந்து 10நாட்டிக்கல் தூரத்தில் பழுதாகி நின்ற படகில் இருந்த 6 மீனவர்களையும் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உணவு வழங்கினர்.
பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் பழுதான நாட்டு படகை ரோந்து கப்பலில் கட்டி இழுத்து வந்து மண்டபம் வடக்கு மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
- கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
- மீனவர்கள் எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்
கன்னியாகுமரி :
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் நேர்கல்லுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணி 14-3-2022 அன்று தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து 5 மாதங்களாக பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட அதிகாரிகள் மேல்மிடாலம் ஊர் நிர்வாகிகள் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் மே மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு செய்து விடுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட் டது. அதன் பின்னரும் பணிகள் சீராக நடைபெறவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அக்கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எந்திரங்களை எடுத்து செல்ல கண்டெய்னர் லாரியை கொண்டு சென்று உள்ளனர். இதனை கடலோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து உள்ளனர்.
அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவல் அறிந்து வந்த மீனவர்கள் எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் நள்ளிரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று பொதுப்ப ணித்துறை அதிகாரி ஒருவர் சென்று மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வேறு எந்திரங்கள் கொண்டு வந்து பணி தொடங்குவதாக கூறி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மீனவர்கள் மீன் இறங்குதளம் பணி நிறைவடையாமல் வாகனங்களை விடுவிக்க மறுத்து உள்ளனர். இதனால் வந்த அதிகாரி திரும்பி சென்றுள்ளார். எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன.
- 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வங்க கடல் பகுதியில் புதிய மோக்கா புயல் உருவாக இருப்பதால் கடலில் பலத்த காற்ற வீசகூடும் என்பதால் மறு அறிவிப்பு வருவரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
கடலுக்கு செல்லாததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர்.
- மீன்பிடி தடை காலத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தையொட்டி உள்ள கடல் பகுதிகளில் 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக பகுதிகளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மீன்பிடி தடை காலத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் திசைமாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும் ராமேசுவரத்தையொட்டி உள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
எனவே ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மாற்று இடங்களில் கடைகள் வைக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.
- அதிகாரிகள் வசம் உள்ள எங்களது மீன் வெட்டும் பலகை, பாத்திரங்கள் போன்றவற்றை திருப்பி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையையொட்டி பட்டினப்பாக்கம் லூப் சாலையில் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்றினர்.
இதற்கு மீனவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும் மீன் கடைகள் அகற்றப்பட்டு மீனவர்கள் பயன்படுத்திய பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டு லாரிகளில் அள்ளிச் செல்லப்பட்டன.
இந்நிலையில் மீனவர்கள் தங்களது உடைமைகளை அதிகாரிகள் தூக்கிச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக பாதிப்புக்கு உள்ளான மீனவர்கள் கூறும்போது, நாங்கள் காலம் காலமாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தநிலையில் அதிகாரிகள் அதனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எங்களை வெளியேற்றி இருக்கிறார்கள்.
நாங்கள் மீன் வியாபாரத்திற்காக பயன்படுத்தி வந்த மீன் வெட்டும் பலகைகள் மற்றும் பாத்திரங்களையும் அதிகாரிகள் லாரிகளில் தூக்கி போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள் நாங்கள் பயன்படுத்திய பொருட்களையும், தூக்கி சென்றுவிட்டதால் மாற்று இடங்களில் கடைகள் வைக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.
இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் வசம் உள்ள எங்களது மீன் வெட்டும் பலகை, பாத்திரங்கள் போன்றவற்றை திருப்பி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாற்று இடங்களிலாவது நாங்கள் கடைகளை அமைத்து மீன் வியாபாரம் செய்யமுடியும் என்றனர்.
இதையடுத்து மீனவர்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது.
- கடந்த ஒரு வாரமாக நடந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று மீன்களை அள்ளி வந்தனர்.
- ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கு மீன்களும் வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்குஞ்சுகளை விட்டு மீன்களைபிடித்து வந்தனர். வைகைஅணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு பங்கீடு அடிப்படையில் மீன்பிடிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. மீன்வளத்துறை சார்பில் வைகை அணையில் மீன்பிடிக்கும் ஒப்பந்தப்புள்ளி மூலம் கடந்த 1-ந்தேதி முதல் தனியாருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்ததாரர் சார்பில் மீன்பிடிப்பதற்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை என்றும் , சம பங்கீட்டில் மீன்கள் வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா, டி.எஸ்.பி ராமலிங்கம், எம்.எல்.ஏ மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அணையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு இயற்கையாக வளரும் ஜிலேபிரக மீன்களை சமபங்கு என்ற அடிப்படையிலும், கட்லா, ரோகு, மிருகால் போன்ற வளர்ப்பு மீன்களை 3ல் ஒரு பங்கு என்ற அடிப்படையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் பிரித்து வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நடந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று மீன்களை அள்ளி வந்தனர். ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கு மீன்களும் வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். போராட்டத்தால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி கிடந்த வைகை அணை பகுதி இன்று மீண்டும் களைகட்டியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்