search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99198"

    போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு கைதான மாணவி வளர்மதி புழலில் உள்ள பெண்கள் சிறையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #valarmathi
    செங்குன்றம்:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

    இதற்காக, இந்த அமைப்பினர் நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே தாரை தப்பட்டை முழங்க பாட்டுபாடி உண்டியல் வசூல் செய்தனர் இதை உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் செல்போனில் படம் பிடித்தார்.

    இதற்கு உண்டியல் வசூலில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அவர்தொடர்ந்து படம் பிடித்தார். இதனால் ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஏட்டு ஸ்டாலினுக்கு அடி- உதை விழுந்தது. இதையடுத்து, அவரது புகாரின் பேரில் உண்டியல் வசூல் நிகழ்ச்சியில் பங்கேற்பு பொதுநல மாணவர் இயக்கத்தின் செயலாளரான மாணவி வளர்மதி(23) மற்றும் இந்த இயக்கத்தை சேர்ந்த அருந்தமிழன், காளிமுத்து, சாஜன், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 6-ந்தேதி வரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி வளர்மதி புழலில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இவர், நடந்த சம்பவத்துக்கு காரணமான உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #valarmathi
    வத்தலக்குண்டுவில் முகவரி கேட்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பாலகவின், விஜய் அழகன். இவர்கள் கணவாய் பட்டி பகுதிக்கு சென்றனர். அங்கு சரண்குமார், அஜித்குமார் ஆகியோரிடம் ஒரு குறிப்பிட்ட முகவரி மற்றும் அதில் இருக்கும் ஆட்கள் குறித்து கேட்டுள்ளனர்.

    வெளியூரில் இருந்து வந்து தங்களிடமே விசாரிப்பதா? என அஜித்குமார் மற்றும் சரண்குமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது மோதலாக மாறியது. 4 பேரும் ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலகவின், விஜய் அழகன், சரண்குமார், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து எதற்காக பிரச்சினை ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி அரண்மனைபுதூர் முல்லைநகரை சேர்ந்த செந்தில்ராமன் மனைவி வித்யா (வயது36). இவரும் சமதர்மபுரம் பி.டி.ஆர். தெருவை சேர்ந்த வீரமணிகண்டன் (33) என்பவரும் கூட்டாக ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தனர். இதில் வித்யாவிற்கு உரிய பங்கு தொகையை செலுத்தவில்லை என அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முருகேசனும், வீரமணிகண்டனும், வித்யா வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு ஊமையன்தொழு பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவர் தனது மருமகன் ராஜசேகர் (38) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜசேகரன் கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவு தோட்டத்தில் புகுந்த ஒரு கும்பல் மணியை தாக்கி காயப்படுத்தி சென்று விட்டனர். இது குறித்து அவர் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரக்கோணத்தில் நேற்று இரவு சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் எம்.ஆர். கண்டிகையில் நேற்று அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. அங்குள்ள அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் ஆடிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.

    கட்டை, அரிவாளால் தாக்கி கொண்டனர். இதில் மணிவண்ணன் (வயது 22), லோகேஷ்குமார் (34), சம்பத் (43), பாலு (44) ஆகியோருக்கு அரிவால் வெட்டு விழுந்தது.

    படுகாயமடைந்த அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.ஆர். கண்டிகையில் போலீசார் குவிக்கபட்டனர். 4 பேரை வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
    பண்ருட்டி அருகே தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர வடிவேல். இவர் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

    சுந்தர வடிவேலும், சதாசிவமும் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை அருகே உள்ள தொரப்பாடி மாரியம்மன்கோவில் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவின்போது சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது புதுப்பேட்டை போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்பு 2 பிரிவினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் அண்ணன் ராஜாராமின் வீடு சூறையாடப்பட்டது.

    அதுபோல சுந்தர வடிவேலின் தம்பி வெங்கடேசன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. சுந்தர வடிவேலுவின் ஆதரவாளர்கள் சதாசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் மகன் ராஜ்குமார் தாக்கப்பட்டார்.

    படுகாயம் அடைந்த ராஜ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

    இந்த மோதல் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். அதன்பேரில் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் சுந்தர வடிவேல், தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சதாசிவம் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

    தி.மு.க.வினரிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதி கொண்டதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். அதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் எல்லை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரெங்கநாதன் மற்றும் தர்மலிங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருப்புலிக்குறிச்சி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். #arrestcase

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகண்ணன் (வயது26), மறவபட்டியை சேர்ந்வர் அய்யர்சாமி (27) கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

    எனவே முன்விரோதம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று அய்யர்சாமி மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்தகண்ணன் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    இது கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தகண்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யர்சாமி, ஜெயகாந்தன், ஆதி, பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதேபோல் அய்யர்சாமி கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தகண்ணனின் நண்பர் சதுரகிரி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய பிரகாஷ், சிவக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நன்னிலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    திருவாரூர்:

    நன்னிலம் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் இரவு மோட்டார் சைக்கிளில் வந்தபோது கைகாட்டியில் கோவில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்ட பந்தலில் மோதி உள்ளார். இதில் பந்தல் சரிந்துள்ளது.

    இதனை கண்ட சீதா (52).அவரது மகன் ராஜா மற்றும் தினேஷ் ஆகியோர் குணசேகரனிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த குணசேகரன், ராஜாவை தாக்கி உள்ளார்.

    இது தொடர்பாக குணசேகரன் நன்னிலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சீதா, ராஜா, தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார். இதே போல் ராஜா கொடுத்த புகாரின் பேரில் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் நன்னிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. #WomenHockey #WorldCup2018 #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அயர்லாந்து அணி ‘நாக்-அவுட்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறும். கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக ‘சி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்ஆப்பிரிக்கா (மாலை 6.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    இன்றைய போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அது எங்களுக்கு நல்ல தொடக்கமாகும். அந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் பல நேர்மறையான எண்ணங்களை பெற்று இருக்கிறோம். அது இந்த போட்டி தொடரில் வரும் ஆட்டங்களில் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நமது அணியின் ஆட்ட திறன் எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் அந்த ஆட்டத்தின் வீடியோவை அணியினர் அனைவரும் பார்த்ததுடன், இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பது குறித்து ஆலோசித்தோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்கலாம் என்பதே எங்கள் எண்ணமாகும்.

    அமெரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் வீடியோ பதிவையும் நாங்கள் பார்த்தோம். அந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே நல்ல முன்னிலை பெற்றதுடன் அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது. கடந்த 3 நாள் ஓய்வில் எங்களுக்குள் சில பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டோம். கோல் அடிப்பது குறித்து வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்தோம். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் எதிரணிக்கு நெருக்கடி அளிக்க வேண்டும். அடுத்த சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WomenHockey #WorldCup2018 #India #Ireland 
    காரியாபட்டி அருகே இருதரப்பினர் மோதலால் கிராமத்தில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏ.முக்குளத்தை அடுத்துள்ள ஆவாரங்குளம் (பிள்ளை யார் குளம்) கிராமத்தில் நேற்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர்.

    அப்போது திட்ட பணிகள் சரிவர செய்வது இல்லை என முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசன் (வயது 42) அதிகாரிகளிடம் புகார் கூறினார்.

    இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பணி பொறுப்பாளர் சசிகுமார் (32) என்பவர் அதிகாரிகளிடம் புகார் கூற வேண்டாம் என சீனிவாசனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு சீனிவாசன் தரப்பினரும், சசிகுமார் தரப்பினரும் திடீரென்று மோதிக் கொண்டனர். ஒருவரையொருவர் கம்பு, கற்கள் போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர், வீடுகளும் சூறையாடப்பட்டன. இதில் இருதரப்பை சேர்ந்த பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து சீனிவாசன், சசிகுமார் ஆகியோர் ஏ.முக்குளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் இருதரப்பினர் மோதலால் ஆவாரங்குளம் கிராமத்தில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba
    புதுடெல்லி:

    டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார்.  #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews 
    மதுரையில் இன்று டிராபிக் ராமசாமியுடன், அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

    இன்று காலை அந்தப்பகுதிக்கு வந்த பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது செல்போனில் பிளக்ஸ் பேனர்களை படம் பிடித்தார். மேலும் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.

    பொதுமக்களுக்கான நடைபாதையில் எவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து டிராபிக் ராமசாமி அதிகாரியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். ஒருசிலர் நடுரோட்டில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்த சம்பவத்தால் மதுரை-அழகர்கோவில் சாலையில் இன்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை சந்தித்து பேசினார்.

    உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.
    ×