search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99437"

    • பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார்.
    • வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    தெப்பக்காடு, அபயராண்யம் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த யானைகளை அங்கு வசித்து வரக்கூடிய பாகன்கள் பராமரித்து வருகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவினை உருண்டையாக உருட்டி கொடுத்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்வது, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது என பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (வயது54). என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை பராமரித்தார்.

    இவர் தினமும் காலையில் அந்த யானைக்கு, ராகி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பார். பின்னர் அந்த யானையை அங்குள்ள பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார். பின்னர் மீண்டும் முகாமுக்கு அழைத்து வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலை பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார். பின்னர் அந்த உணவினை எடுத்து கொண்டு மசினி யானையின் அருகே சென்றார்.

    பின்னர் அந்த யானைக்கு உணவை கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மசினி யானை பாகனை தாக்கி விட்டது. இதில் பாகன் பாலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சக பாகன்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த பாலனை தூக்கி கொண்டு வனத்துறை வாகனத்தில் கூடலூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீர்வழி பாதையில் வனவிலங்குகள் ஆங்காங்கே நிற்கின்ற நீரினை பருகி தாகம் தீர்த்து வருகிறது.
    • ஒற்றை யானை ஒன்று மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு மலைப் பகுதியில் அமைந்துள்ளது மணியாச்சி பள்ளம் நீர் ஓடை. இந்த ஓடையில் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீரானது பாலாற்றின் வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

    இந்த நீர்வழி பாதையில் வனவிலங்குகள் ஆங்காங்கே நிற்கின்ற நீரினை பருகி தாகம் தீர்த்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் செல்வது குறைந்தது.

    இருப்பினும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வனவிலங்குகள் குடித்து தாகம் தணித்து வருகின்றது. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது.

    பின்னர் தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள பாலத்தில் சென்ற சிலர் செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்துக் கொண்டும் சென்றார்கள்.

    கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் அவ்வப்போது சாலைகளில் நிற்பது அதிகரித்து உள்ளது. எனவே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் செல்போனில் படம் எடுப்பது, செல்பி எடுப்பது ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துவிடும்.

    எனவே இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
    • தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.

    இந்த யானை, அந்த பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    இதுகுறித்து செந்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள், சின்னத்தண்டா கிராமத்தில் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் தொட்டியில் இறங்கி பார்வதி யானை உற்சாக குளியல் போட்டது.
    • இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் பார்வதி என்ற பெண் யானை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு பார்வதி யானைக்கு கண்களில் வெண்புரை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை குறைபாடு உருவானது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதன் விளைவாக கண்புரை நோய் முற்றிலும் குணமாகி, பழைய நிலைக்கு வந்தது. மேலும் பார்வதி யானைக்கு மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி தரப்பட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானை நீச்சல் அடித்து குளிக்க வசதியாக, குளியல் தொட்டி (தெப்பம்) கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் வளா கத்தில் யானை தெப்பம் கட்டப்பட்டது.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது பார்வதி யானைக்காக கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள யானை தெப்பம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் பார்வதி யானையை அழைத்து வந்தனர்.

    தண்ணீரைப் பார்த்ததும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது. தொட்டியில் இறங்கிய பார்வதி யானை உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி உற்சாக குளியல் போட்டது. இது பார்வை யாளர்களை கவர்ந்தது.

    • 6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர்.
    • 2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் 2 முறை காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    திருமலை:

    திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்று யானை கூட்டம் வந்தது.

    6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

    காட்டு யானைகளின் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அந்த வழியாக பைக்கில் செல்லும் பக்தர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் 2 முறை காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகுபலி காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும், மனித-வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜக்கனாரி வனப்பகுதியில் பாகுபலி யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.

    அதிகாலை நேரங்களில் மேட்டுப்பாளையம் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி யானை பகல் நேரங்களில் குரும்பனூர், சமயபுரம், கிட்டம்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பின்னர், மாலை அல்லது இரவு நேரங்களில் சமயபுரம் பகுதி வழியாக மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

    வனத்துறையினரும் தொடர்ந்து அந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து பாகுபலி காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதுவரை இந்த பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும், மனித-வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாகுபலி யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த வண்ணமாகவே உள்ளனர்.

    • தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன.
    • யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன வில ங்குகள் நீர், உணவு தேடி மலையடிவார பகுதி கிராம ங்களுக்கும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் அதிகாலை, குட்டியுடன் கூடிய, யானை க்கூட்டம் திருமூர்த்தி மலை, கன்னிமார் ஓடை வனப்பகுதி வழியாக திருமூர்த்தி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

    வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 250 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்ப ட்டிருந்த கம்பி வேலி, 50க்கும் மேற்பட்ட வேலி கற்களை உடைத்து, உள்ளே நுழைந்த யானைக்கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன. தொடர்ந்து உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டை கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், பயிர்கள் மற்றும் குழாய், மோட்டார், போர்வெல் உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை சேதப்படு த்தியுள்ளன.இது குறித்து தகவல் கிடைத்ததும், உடு மலை வனத்துறையினர் ஆய்வு செய்ததோடு, யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகை யில், பெரிய தந்தங்களுடன் கூடிய ஆண் யானை, சில மாதங்களே ஆன குட்டியுடன் கூடிய பெண் யானை கொண்ட கூட்டம், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருமூர்த்திமலை கோவில், நீச்சல் குளம், ஆய்வு மாளிகை பகுதிகளில் யானை கூட்டம் வந்துள்ளன. குட்டியுடன் உள்ளதால் அது பெரிதாகும் வரை அவற்றை விரட்ட முடியாது.விவசாய பயிர்கள், கட்டமை ப்புகள் சேதம டைவதோடு உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அமராவதி அணையை நோக்கி வன விலங்குகள் ரோட்டை கடந்து வருகின்றன.
    • உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.பருவ மழை குறைந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அமராவதி அணையை நோக்கி யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ரோட்டை கடந்து வருகின்றன.இந்நிலையில் ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில் ஒற்றை ஆண் யானை மட்டும் நீண்ட கொம்புகளுடன் முகாமிட்டுள்ளது.இவ்வழியே வரும் பஸ், லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும் கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வறட்சி காரணமாக வன விலங்குகள் ரோட்டை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யானை கூட்டத்தில் இருந்து விலகி வந்த நீண்ட தந்தங்களுடன் கூடிய ஓர் ஆண் யானை மிகவும் கோபமான மன நிலையில் ரோடு பகுதியில் முகாமிட்டு வாகனங்களை தாக்கி வருகிறது.சில நாட்களில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனவே இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • யானை அப்பகுதியில் வந்த போது அங்கிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் யானைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோடைகாலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உணவுக்காக யானைகள் அவ்வப்போது வெளியேறுவது வாடிக்கை.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட வட்டக்காடு என்ற கிராமத்தில ஒற்றை ஆண் யானை ஒன்று சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றது.

    இந்த காட்சி அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. யானை அப்பகுதியில் வந்த போது அங்கிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.

    அப்போது ஒற்றை யானையைக் கண்ட பயத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • நடுரோட்டில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை திடீரென டிப்பர் லாரியை நோக்கி வந்தது.
    • சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடுமலை:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு லாரி ஒன்று வந்தது.அதனை அமீன் என்பவர் ஓட்டினார்.

    மறையூர்- உடுமலை இடையே சின்னார் வனப்பகுதியில் செல்லும்போது அங்கு நடுரோட்டில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை திடீரென டிப்பர் லாரியை நோக்கி வந்தது.

    உடனே டிரைவர் அமீன் சுதாரித்து லாரியை பின்னோக்கி நகர்த்தினார். இருப்பினும் யானை லாரியை நோக்கி வந்தது. பின்னர் தந்தத்தால் லாரியின் முன்பகுதியில் குத்தியது. இதில் அந்த வழியாக வந்த 2 கார்கள் லாரியின் பின்புறம் மோதியது. 3 வாகனங்களும் சேதமடைந்தன.

    நீண்ட நேரமாக ஒற்றை யானை அங்கேயே நடுரோட்டில் நின்று கொண்டு இருந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த யானைக்கூட்டத்துடன் ஒற்றை யானை திரும்பி சென்றது. அதன்பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியதுடன் பொதுமக்கள், பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    கோடை வெயில் தாக்கத்தால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் தண்ணீருக்காக சாலை பகுதிக்கு வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், யானைகளுக்கு எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் ஒற்றை யானை லாரியை வழி மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
    • கடந்த ஒரு மாதமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்படி வரும் யானைகள் பயிர்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகள் அவ்வப்போது சாலைகளிலும் சுற்றி திரிந்து வாகனங்களை மறித்து வந்தன. இந்த பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.

    இதனால் யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அப்படி திரியும் யானைகள் பலாப்பழத்தை ருசித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் வனத்தையொட்டி குடியிருப்புக்குள்ளும் நுழைந்து வந்தது.

    இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே யானைை இங்கு இருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டு பணியில் ஈடுபட்டனர். நேற்று அந்த காட்டு யானைகளை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    அப்போது யானைகள் அங்குள்ள சாலையை கடந்து மரப்பாலத்தை அடுத்த கே.என்.ஆர். பகுதிக்குள் நுழைந்தது. அப்போது அங்கு இருந்த பலா மரத்தை பார்த்ததும் யானைகள் துள்ளி குதித்து மரத்தை நோக்கி ஓடின.

    அங்கு சென்றதும் 3 யானைகளில் ஒரு யானை தனது காலை தூக்கி மரத்தின் மீது வைத்து, துதிக்கையால் மரத்தில் இருந்த பலாப்பழத்தை பறித்து சுவைத்தது. இதனை அந்த வழியாக சென்றவர்களும், வனத்துறையினரும் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
    • விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, ஈசல்திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    அதற்குத் தேவையான இடுபொருட்களை வாங்கவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அடிவாரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. வனப்பகுதியில் பாதை இல்லாததால் சில சமயத்தில் விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈசல்திட்டை சேர்ந்த சின்னக்கா என்பவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். இத்திபாழி என்ற இடத்தில் சென்றபோது புதரில் மறைந்து இருந்த யானை ஒன்று திடீரென வெளிப்பட்டது. இதனால் அச்சமடைந்த சின்னக்கா தப்பி ஓட முயற்சித்த போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    அதைத் தொடர்ந்து உடன் வந்த மலைவாழ் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜல்லிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இது குறித்து உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சின்னக்காவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே மலைவாழ் மக்கள் சென்று வரும் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றுவனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் மின்கம்பங்களினால் யானைகள் இறப்பதை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனைமலை தாலுகாவில், வேட்டைக்காரன்புதுார், அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, காளியாபுரம், கோட்டூர், பெரியபோது ஆகிய கிராமங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களில் வட்ட நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வனவர் அல்லது வனக்காப்பாளர், போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இதில் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளாக அறிவிக்கப்பட்ட வனங்களில் இருந்து, ஐந்து கி.மீ., வரையுள்ள பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கண்டறியப்படும் மின்கம்பங்களின் அச்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை கண்டறியப்பட வேண்டும்.

    பழுதடைந்த மின்கம்பங்கள், உயரம் குறைவாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் வனங்களுக்குள் செல்லும் மின்கம்பங்கள் என வகைப்பாடு செய்து சம்பந்தப்பட்ட புலப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டும். கண்டறியப்பட்ட மின்கம்பங்களை மின்வாரியத்தின் வாயிலாக அவற்றின் தன்மைக்கேற்ப அகற்ற அல்லது மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனப்பகுதிக்குள் செல்லும் மின்கம்பிகளை உயர் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மின்கம்பங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தல், முள்வேலி அமைத்தல் போன்ற பணிகள் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு மின்கம்பிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயர்ரக காப்பு கம்பிகள் மற்றும் உரையிடப்பட்ட கம்பிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மின்கம்பங்களினால் மின்சாரம் கொண்டு செல்வதற்கு பதிலாக மாற்று வழிமுறை அல்லது மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.கிராமங்களில் வட்ட அளவில் தாசில்தார்களும், குறு வட்ட அளவில் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலும் பணிகளை ஒருவாரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடித்ததை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதி செய்து கோவை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×