என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99437"
- திடீரென இவ்வளவு யானை கூட்டம் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
- யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை:
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி தண்ணீர் மற்றும் குடிநீரை தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. அப்போது குடியிருப்பையொட்டி விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை மதுக்கரை வனத்தை விட்டு 6 காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறின. அந்த காட்டு யானைகள் நேராக மதுக்கரை வனத்தில் இருந்து பச்சாபாளையம் நோக்கி வந்தன.
அதிகாலையில் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் கோவைப்புதூர் அருகே உள்ள பச்சாபள்ளியில் குடியிருப்பு பகுதிக்குள் 6 யானைகளும் குட்டியுடன் நுழைந்தது.
ஊருக்குள் குட்டியுடன் யானை புகுந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியே தெருவில் நடந்து சென்ற யானை கூட்டத்தை பார்த்தனர்.
திடீரென இவ்வளவு யானை கூட்டம் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானை கூட்டம் அதிகாலை 3 மணி வரை அங்கேயே சுற்றியது. அதன் பிறகு யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவைப்புதூர் பகுதியில் யானை கூட்டம் நுழைந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- யானை நடமாட்டம் காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை ஆனைகட்டி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.
இந்த யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. யானை நடமாட்டம் காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாங்கரை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் மகேஷ்குமார் (வயது38) என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார்.
அப்போது அந்த பகுதியில் யானை சுற்றி திரிவதை பார்த்ததும் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தாக்கியது.
மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். மேலும் யானை அங்கிருந்து நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு யானை அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்றது. இதன் பின்னர், அவரது மனைவியும், தந்தையும் அருகே சென்று பார்த்தனர். அப்போது மகேஷ்குமார் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி இறந்த மகேஷ்குமார் கோவையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரநிதியாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- தென்னை மரங்களை தொடர்ந்து பல நாட்களாக யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரம் கானாவூர் அருகிலுள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.
இந்த தோட்டத்திற்குள் இன்று காலை ஒற்றை யானை ஒன்று புகுந்தது. பின்னர் 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை பிடுங்கித் தின்றுள்ளது.
மாதாபுரம் பெட்ரோல் பங்கில் இருந்து கடவாக்காடு செல்லும் சாலையில் உள்ள பனைமரத்தை ஒன்றை யானை பிடுங்கி குருத்தைத் தின்றுவிட்டு மரத்தைப் முறித்து விட்டு சென்று விட்டது. அதற்கு அருகில் உள்ள வெய்க்கால்பட்டி பரமசிவன் என்பவருடைய தோட்டத்தில் வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது.
அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் விளைநிலங்கள் உள்ள பகுதிகளை சுற்றி தொடர்ந்து சுற்றி வந்தது.
தகவல் அறிந்ததும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச்சரக வனச்சரகர் கருணாமூர்த்தி ஆலோசனையின் பேரில் வனக்காப்பாளர் ஆறுமுக நயினார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடையம் பகுதியில் திரவியம் நகர், பெத்தான் பிள்ளை குடியிருப்பு, மேலாம்பூர், ஆம்பூர், மாதாபுரம் போன்ற பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை தொடர்ந்து பல நாட்களாக யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.
- பரிசோதனை முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
அப்போது கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இதனை பார்த்து வன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
யானையில் உடலை வன அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆனால் யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லை.
இந்த ஆண் யானை எப்படி இறந்தது என்பதை கண்டு பிடிப்பதற்காக இன்று உடற்கூறாய்வு பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர் வயல் கிராமம் உள்ளது.
- இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர் வயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வாடிக்கையாகி வருகிறது.
அல்லூர் வயல் கிராமத்தை சேர்ந்தவர் கரும்பன்(70). இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென கரும்பனை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரும்பனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். கரும்பனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து அழுதனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து உடலை எடுக்க சென்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, பலமுறை ஊருக்குள் யானை வருகிறது என கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உயிரிழப்பு சம்பவம் நடந்து விட்டது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.
- ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானையை வனத்துறையினர் பராமரிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
- யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்த வர் சேக் முகமது. இவர் 56 வயதான லலிதா என்ற யானையை வளர்த்து வருகிறார்.
கடந்த ஜனவரி 1-ந் தேதி இந்த யானை தேனி மாவட்டத்தில் இருந்து கோவில் விழாவிற்காக விருதுநகர் கொண்டு வரப்பட்டது. அந்த யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது. இதில் யானைக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த வனத்துறையினர், யானையை உரிமையாளர் ராஜபாளையத்திற்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கவில்லை. அந்த யானையை விருதுநகர் ரெயில்வே காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டிவைத்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அதன் காயங்கள் ஆறாமல் உள்ளது என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரகர் துணை இயக்குநர் திலிப்குமாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த யானையை பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையா ளரிடம் இருந்து அபராதமாக பெற்று விருதுநகரிலேயே யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்தநிலையில் விருதுநகரில் சிகிச்சை பெற்று வரும் யானையை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். அப்போது அவர் யானையின் பராமரிப்பு, அதற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார்.
- காட்டு யானை இவரை விடாமல் துரத்தி வந்து தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் நெஞ்சு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
- சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட உலியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(58). விவசாயி.
இவர் உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென ராதாகிருஷ்ணனை தாக்க முயற்சித்தது. யானை வருவதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்.
ஆனாலும் காட்டு யானை இவரை விடாமல் துரத்தி வந்து தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் நெஞ்சு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்வேலியில் சிக்கி உயிருக்குப் போராடிய காட்டு யானையை பந்திப்பூர் வனத்துறை காப்பாற்றியது.
- இதையடுத்து, பந்திப்பூர் வனத்துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பாரகி அருகே பந்திப்பூர் வனப்பகுதி எல்லைக்குட்பட்ட ஓம்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், காட்டு யானைகளிடம் இருந்து பயிரைக் காப்பாற்ற தனது தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த விவசாயியின் தோட்டத்துக்குள் செல்ல முயன்றது. அந்த யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியது.
அப்பகுதி மக்கள் உடனடியாக பந்திப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் பந்திப்பூர் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு அதேப்பகுதியில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவ குழுவினரின் 10 மணி நேர தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த காட்டு யானை உயிர் பிழைத்தது. இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மேலும் அந்த யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். Also Read - எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் - நிதிஷ்குமார் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கும், மருத்துவ குழுவினருக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், காட்டு யானையின் உயிரைக் காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினரையும், மருத்துவ குழுவினரையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் படத்தை பதிவிட்டு, இதனைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகள். நம்முடைய மக்கள் இத்தகைய பரிவு காட்டுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என பதிவிட்டிருந்தார்.
இதேபோல், மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவும் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- ஒற்றைக் காட்டு யானை நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
- ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள வன பகுதியில் அந்த யானையை விரட்டிச் சென்று விட்டுள்ளனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இந்த ஒற்றைக் காட்டு யானையை காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஒற்றைக் காட்டு யானை தாசம்பட்டி, கோடுபட்டி, பகுதியில் இருந்து சின்னாறை யொட்டி வனப்பகுதி வழியாக பெண்ணாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்குந்தி பகுதிக்குள் புகுந்தது.
தொடர்ந்து போடூர் வழியாக வந்து கூத்தப்பாடி, ஜக்கம்பட்டி, கிராம பகுதியில் நுழைந்தது. கடந்த சில மாதங்களாக இரண்டு காட்டு யானைகள் ஒன்றிணைந்து பாப்பாரப்பட்டி, ஆலாமரத்துபட்டி, இண்டூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி விவசாய பயிர்களை உணவாக உட்கொண்டு வந்தன. இந்த இரண்டு யானைகளும் அவ்வப்போது ஊருக்குள் வருவதும் பொதுமக்கள் விரட்டி அடிப்பதுமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கும்கி யானையை வரவழைத்து இரண்டு யானைகளில் ஒரு யானையை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிக்கிலி அருகே பிடித்தனர்.
பின்பு டாப்ஸ்லிப் மேற்கு தொடர்ச்சி மலையில் வாகனத்தின் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். தற்போது பென்னாகரம் அருகே கூத்தப்பாடி கிராமத்தில் நுழைந்த இந்த யானையை வன பகுதிகளுக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் அருகில் ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள வன பகுதியில் அந்த யானையை விரட்டிச் சென்று விட்டுள்ளனர்.
இந்த காட்டு யானை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரம், மேல் சவுளுப்பட்டி கிராமங்களுக்கு நேற்று 5 காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, தக்காளி, நெல் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர் செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதற்கிடையே வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு காட்டுக்கு விரட்டினாலும் யானைகள் தண்ணீர், உணவு தேடி மீண்டும் கிராமங்களுக்கு வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. தற்போது அமானி மல்லாபுரம், மேல் சவுளுப்பட்டியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது.
- காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மஞ்சூர் பகுதிக்கு வந்த காட்டு யானை அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் மற்றும் காய்கறி தோட்டங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. மேல்குந்தா பகுதியை சேர்ந்த குமார் என்ற விவசாயியின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கேரட் பயிர்களை தின்று மிதித்தும் நாசம் செய்தது. இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை அதிகாலையிலேயே தோட்டத்தில் இருந்து வெளியேறியது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மேல்குந்தா பகுதியில் இருந்து பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொட்ட கம்பை சேரனூர் பகுதிக்குள் விழுந்து அங்கும் மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் பட்டாசுகள் வெடித்தும் தகரங்களை தட்டியும் சத்தம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒற்றை காட்டு யானை என்பதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்திலிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டு யானையால் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து சீனிவாசன் கூறுகையில் கேரள மாநிலம் இணைய சீகை பகுதியில் இருந்து தனியாக வந்துள்ள இந்த காட்டு யானைக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம், இரவு நேரத்திற்குள் தோட்டத்திற்குள் வந்து கேரட் பயிர்களை சாப்பிட்டு விட்டு பகல் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இருந்தாலும் அந்த யானையை அடர்ந்த விரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- வெளியேறும் உபரி நீர் தொட்டியில் நீர் அருந்திவிட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
- ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் சாலையை கடந்து செல்லும் யானையை ஆர்வத்துடனும் பயத்துடனும் அங்கேயே காத்திருந்து பார்த்து செல்கின்றனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், சுற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு வனப்பகுதியாக உள்ளது. இங்குயானைகள், காட்டெருமைகள், மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
கோடை காலத்தில் தான் யானைகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறும் யானைகள் நடமாட்டம் பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளது.
இவ்வாறு வரும் இந்த யானைகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையை கடந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் தொட்டியில் நீர் அருந்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
இவ்வாறு யானைகள் வரும் நேரங்களில் அவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை கடந்து செல்லும் யானையை ஆர்வத்துடனும் பயத்துடனும் அங்கேயே காத்திருந்து பார்த்து செல்கின்றனர்.
- காட்டு யானைகள் விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
- ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
பாப்பாரப்பட்டி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் விளைப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்திருந்தனர். காட்டு யானைகள் விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையி்ல் அச்சுறுத்தி வந்த காட்டுயானைகளை பிடிக்க வனத்துறையினர் தி்ட்டமிட்டு, ஆனைமலை யானைகள் முகாமிலிருந்து சின்னதம்பி என்ற கும்கி யானையினை இரண்டு நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டிக்கு வரவழைத்தனர்.
பின்னர் காட்டு யானைகளை பிடிக்கும் பணியினை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளான இன்று காலை பெரியூர் அருகே ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
யானை மயக்கமடைந்ததும் கும்கி யானை உதவியுடன் காட்டு யானையினை தயாராக இருந்த வாகனத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஏற்றி முதுமலை காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்