search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite"

    தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம், குழந்தை தெரசம்மாள் தெருவைச் சேர்ந்த ரஹீம் என்பவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் சென்று சங்கு குளிக்கும் தொழிலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கடந்த 11-ந் தேதி அவர் தனது நாட்டுப்படகில் திரேஸ்புரத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரோடு 11 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அன்று வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. 

    தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்த போது சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக கடலில் அலையின் வேகம் அதிகரித்தது. 

    இந்த நிலையில் கரை திரும்ப இருந்த நேரத்தில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் ரஹீம் மற்றும் 11 மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்க தொடங்கியது. செய்வதறியாது திகைத்த நிலையில் படகு சிறிது,சிறிதாக கடலுக்குள் மூழ்கியது.படகில் சென்ற மீனவர்கள்  கடலுக்குள் தத்தளித்த நிலையில் சற்று தொலைவில் வேறொரு நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

     அதன் பின்னர் ஒரு சில நாட்களுக்கு பின் கடலில் மூழ்கிய நாட்டுபடகு விசைப் படகு மற்றும் எந்திரம் மூலமாக மீட்டெடுக்கப்பட்டு திரேஸ்புரம் கடற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.  

    இந்த படகை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்த ரஹீம் படகில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக மன உளைச்சல் அடைந்தார்.அவருடைய வாழ்வாதாரமாக இருந்த படகை சரி செய்ய பணமின்றி தவித்தார்.

    அவருக்கு எந்த ஒரு அமைப்பு உட்பட யாரும் எந்த உதவியும் அளிக்கவில்லை என்ற நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.1  லட்சம் நிதி உதவி வழங்கி படகை சரி செய்து கொடுத்துள்ளது.

     நிறுவனமும் எந்த ஒரு அமைப்பும் தனக்கு நிதியுதவி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த இந்த நிதி உதவிக்கு சங்குகுளி மீனவர் ரஹீம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர். 

    தூத்துக்குடி மக்களின் துயர்துடைப்பதில் ஸ்டெர்லைட் நிறுவனம் என்றும் துணைநிற்கும் என அந்நிறுவன சமூக செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • கைத்தொழில்  திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, சங்கரபேரி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்லாநத்தம், ராஜாவின் கோவில், சாமிநத்தம், குமாரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், நடுவக்குறிச்சி, குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை அளிக்கும் பிரதான நிறுவனமாக செயல்பட்டு வந்தது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை வழங்கியது. கைத்தொழில்  திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.

    பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விளையாட்டில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வந்தது.

    ஆனால் இந்த ஆலை மூடப்பட்டதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.

    இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.

    தஞ்சாவூா்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 5-ம் ஆண்டு நினைவு நாள் மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.

    இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்த ப்பட்டன.

    இதில் ஆதித்தமிழர் பேரவை இளைஞர் இயக்க நிர்வாகி பிரேம்குமார்நிவாஸ், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க ஏ. ஐ .டி .யு.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜோசப், சேகர், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிர் இழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
    • மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிர் இழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று கவர்னர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.

    வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்.

    அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், ''ரவி பவன்'' அல்ல என்பதை மாண்புமிகு ஆளுநர் நினைவில்கொள்ள வேண்டும்.

    • மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
    • 2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக் கழிவால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 2018-ம் ஆண்டு நடந்த தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் கலவரம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கூறி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் ஆலையை திறக்க தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னால், அந்நிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக 'தி அதர் மீடியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளனவா என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரன்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு நேற்றுமுன்தினம், மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    "தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'தி அதர் மீடியா', ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது. இதில் ரூ.2.79 கோடியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மீதான குற்றாச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டி ருந்த, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்".

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.
    • 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    சென்னை:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் 2-வது சுரங்கத்தை விரிவாக்கும் பணியை நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    இந்த விரிவாக்கத்தால் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அந்த பகுதியில் நிலங்களை சமன்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்கள்.

    பொதுமக்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க. அழைப்பு விடுத்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    என்.எல்.சி.யால் காற்று மாசடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை.

    கடலூரில் இன்று நடந்து வரும் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தாலும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக பா.ம.க. இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவே இந்த போராட்டம்.

    இந்த பகுதியில் உள்ள விவசாயத்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட கலெக்டரும் என்.எல்.சி.க்கு ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க. இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியாருக்கு கொடுக்க துடிப்பது ஏன்? இன்னும் ஒரு வருடத்தில் என்.எல்.சி. தனியார் மயம் ஆக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் ஏன் இந்த அவசரம்.

    இது பா.ம.க.வின் பிரச்சினை அல்ல. எல்லா கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். சில கட்சியினர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். இந்த பிரச்சினை கடலூர் மாவட்ட பிரச்சினை மட்டுமல்ல. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

    இன்று நடப்பது ஒரு அடையாள போராட்டம் தான். இன்னும் போராட்டம் தீவிரமாகும். இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.
    • வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.

    புதுடெல்லி :

    ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அவர், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே, நவம்பர் 30-ந்தேதி நடைபெறும் விசாரணை தேதியை எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என முறையிட்டார்.

    அதை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திட்டமிட்டபடி வருகிற 30-ந்தேதி எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    • ஸ்ரீபேராட்சி செல்வி அம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
    • சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முழுவதும் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களில் தசரா பண்டிகை நடைபெற்றது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் சப்பர பவனி நடைபெற்றன.

    தூத்துக்குடி கடலோர பகுதி மக்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் மட்டக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபேராட்சி செல்வி அம்மன் கோவிலில் தசரா பண்டிகை 10-ம் திருநாள் அன்று ஸ்டெர்லைட் சார்பில் பல்வேறு சிறப்பு யாகங்கள் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. 10-ம் திருநாள் சிறப்பு பூஜையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும், ஸ்டெர்லைட் அனைத்து ஊழியர்களும் நலம் பெற வேண்டும் என்று என வேண்டுதல்கள் வைக்கப்பட்டன.

    இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மட்டக்கடை பகுதியிலுள்ள ஒரு பகுதி மக்கள், ஸ்டெர்லைட் நிறுவன அலுவலர்கள் ஏராளமானவர் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    • ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம்.
    • தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மூடப்பட்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட கலெக்டரிடம் பலர் தனித்தனியாக மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை மாசுவின் காரணமாக தூத்துக்குடியில் பாதிப்பு ஏற்பட்டது என்று தவறான தகவல்களை பரப்பியதால் நாங்கள் போராட்டத்திற்கு சென்றோம். இந்த ஆலையால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் கடலில் மீன்வளம் குறைவாக உள்ளது என்று எங்களுக்கு தவறாக வதந்தி பரப்பப்பட்டது.

    ஆனால் கடந்த 4 வருடம் ஆலை மூடப்பட்டுள்ள நிலையிலும் கடலில் அதே அளவு தான் மீன்வளம் கிடைக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். அது மட்டுமின்றி தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • கொரோனா காலத்தின்போது ஸ்டெர்லைட் நிறுவனம் தாமாகவே முன்வந்து ஆக்ஜிஜன் உற்பத்தி செய்து அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாகவே வழங்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்திற்கு எதிராக போராடியவர்களால் ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இதனால் இந்த தொழிற்சாலையை நம்பி இருந்தவர்கள் மட்டுமின்றி தொழிற்சாலையை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொழிற்சாலையானது தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மூலமாக மூடப்பட்டு இருந்த போதும், தொடர்ந்து இந்த நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் மூலமாக சுற்றியுள்ள கிராமமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை இப்போது வரை செய்து வருகிறது.

    கொரோனா காலத்தின்போது பொதுமக்களின் உயிரினை பாதுகாப்பதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் தாமாகவே முன்வந்து ஆக்ஜிஜன் உற்பத்தி செய்து அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாகவே வழங்கியது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தால் நிலம், நீர், காற்று என எதுவும் மாசுபடவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நிறுவனம் ஆலையை விற்பனை செய்யப்போவதாக எடுத்துள்ள தனது முடிவினை மறுபரிசீலனை செய்திடவேண்டும்.

    தமிழக அரசானது வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் மதிப்பீட்டு குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் மூலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கோரிக்கையை கேட்டு அது குறித்து முழுமையாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த நிறுவனம் தொடர்பான ஆய்வுகள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் முடித்து அரசிடம் அறிக்கை அளித்திட வேண்டும். இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்படுவது குறித்து அரசு முடிவு எடுத்திடவேண்டும்.

    மேலும், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக சுற்றியுள்ள கிராமங்களில் இன்று முதல் கையேந்தி தொடர் பட்டினி போராட்டம் நடத்திடவும் தீர்மானித்துள்ளோம். எங்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு அனுமதி தராவிட்டாலும் தடையை மீறி எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் தியாகராஜன், கணேசன், தனலெட்சுமி, தாமோதரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார். #Mukilan #Sterlite
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முகிலன் சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் ரெயில் திண்டிவனம் சென்றபோது முகிலனை திடீரென காணவில்லை.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 40 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதுடன், 251 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.

    முகிலன்

    இந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி (42) சென்னிமலையில் நேற்று நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “எனக்கும், முகிலனுக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முகிலன் டி.எம்.இ. படித்துள்ளார். எங்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.

    திருமணத்திற்கு முன்பே எனது கணவர் முகிலன் புரட்சிரக இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். என்னை விட அவருக்கு 10 வயது அதிகம். ஆனாலும் அவருடைய சமூக அக்கறை காரணமாக அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களுக்கு கார்முகில் (21) என்ற ஒரே மகன் உள்ளார்.

    கார்முகில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உள்ளூரில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முகிலன் கலந்துகொண்டுள்ளார். நானும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்.

    எங்கள் குடும்ப வருமானத்திற்காக மட்டுமின்றி சமூக போராட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக 1998-ம் ஆண்டு அச்சகம் அமைத்து 2 வருடங்கள் அச்சகத்திலேயே முகிலன் இருந்தார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அதன்பிறகு வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார்.

    2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறை சென்றார். புரட்சிகர இளைஞர் முன்னணி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கூட்டியக்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தினார்.

    அதனால் இவர் மீது 100-க்கும் மேற்பட்ட போராட்ட வழக்குகள் இருந்தது. 2014-ம் ஆண்டில் முகிலனே வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து திருச்சி சிறையில் 6 மாதம் இருந்தார். பின்னர் நீதிபதியே சொந்த ஜாமீனில் இவரை வெளியே விட்டார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் முகிலன் கைது செய்யப்பட்டு 379 நாட்கள் சிறையில் இருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.

    இந்த போராட்டத்தில் முகிலன் மிக தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.

    சி.டி. வெளியிட்ட அன்றே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர் முகிலனிடம், தூத்துக்குடி கலவரம் குறித்த சி.டி. ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் கொடுங்கள் என்றும், இதை ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள்? என்றும் கேட்டுள்ளதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார்.

    முகிலன் காணாமல் போனதற்கு ஓரிரு நாள் முன்பு காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். முகிலன் கலந்துகொண்ட போராட்டத்தில் பெண்களும் கலந்துகொள்வது உண்டு. அதுபோல நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.

    என்னுடைய கணவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சில அரசியல்வாதிகள், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி உடன் இருந்தவர்களும் அவர் மீது தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதுபோல இவருடன் போராடிய பெண்ணோடு இணைத்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு எதிராக எனது கணவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்துள்ளார். அதனால் இனி வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம்.

    கடந்த 2013-ம் ஆண்டுகூட ஒரு போராட்ட வழக்கில் போலீசார் இவரை யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர்.

    இதுவரை பொது வாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்த முகிலன் மீது உடன் இருப்பவர்களே பரப்பி வரும் அவதூறுகளை முறியடித்து அவரை மீட்க போராடி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்” என்றார். #Mukilan #Sterlite
    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீரென மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SterlitePlant #Mukilan
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் மாயவன்.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார்.

    இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் கூறினார்.

    பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.



    இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாததால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    முகிலன் கடத்தப்பட்டதாக அச்சப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    எனவே முகிலனை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோல் முகிலன், சதீஷ் ஆகியோர் திடீரென மாயமானார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து முகிலனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். #SterlitePlant #Mukilan
    ×