கிரிக்கெட் (Cricket)

சதத்தை தவறவிட்ட மார்ஷ்: 3-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா

Published On 2023-12-28 08:17 GMT   |   Update On 2023-12-28 08:17 GMT
  • மிட்செல் மார்ஷ் 96 ரன்களிலும் ஸ்மித் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
  • பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்தது.முகமது ரிஸ்வான் 26 ரன்னும், அமீர் ஜமால் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியா ஸ்கோரை விட 54 ரன் குறைவாகும். அப்துல்லா ஷபீக் 62 ரன்னும், கேப்டன் ஷான் மசூத் 54 ரன்னும், முகமது ரிஸ்வான் 42 ரன்னும், அமீர் ஜமால் 33 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயனுக்கு 4 விக்கெட் டும், ஹாசல்வுட்டுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.

54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணி 16 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது.

உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும், லபுஷேன் 4 ரன்னிலும் ஷகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டம் இழந்தனர். வார்னர் 4 ரன்னிலும், டிரெவிஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமலும் மிர் ஹம்சா பந்தில் அவுட் ஆனார்கள்.

இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் சுமித்-மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 96 ரன்னில் அவுட் ஆனார். 3-ம் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News