வீரர்களை கிண்டலடித்த ரசிகர்கள்: பயிற்சி போட்டிக்கு அனுமதி மறுத்த பிசிசிஐ
- முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.
அடிலெய்டு:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அடிலெய்டில் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும்போது குறைந்தது 3,000 ரசிகர்கள் திரண்டு வந்தனர். இந்திய வீரர்களை தொந்தரவு செய்யும் வகையில் சில ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, சில ரசிகர்கள் ரோகித் சர்மாவையும், ரிஷப் பண்டையும் உடல் பருமனாக இருப்பதைக் குறிவைத்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதனால் வீரர்கள் ஒழுங்காக பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இனி எந்த ஒரு பயிற்சி போட்டிக்கும் ரசிகர்கள் வந்துபார்க்க அனுமதி வழங்கப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் பிசிசிஐ தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.