டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை தகர்ப்பாரா ஜெய்ஸ்வால்
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார்.
- இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 3 சதம், 7 அரை சதத்துடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார்.
அடிலெய்டு:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 7 அரை சதத்துடன் 58.18 சராசரி மற்றும் 72.52 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் குவிப்பு 214 ஆகும்.
அதன்படி, காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு மேலும் 282 ரன்கள் தேவையாக உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் சச்சின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம், 5 அரை சதத்துடன் 1,562 ரன்களை 78.10 சராசரியுடன் குவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள ஜெய்ஸ்வாலுக்கு தற்போது இந்த சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த சாதனை, பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசப் வசம் உள்ளது. அவர், 2006ல் 11 போட்டிகள், 19 இன்னிங்சில் 1,788 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.