கிரிக்கெட் (Cricket)

யாரும் எதிர்பார்க்கல.. டி20 உலகக் கோப்பையில் அரங்கேறும் அடுத்தடுத்த "டுவிஸ்ட்" சம்பவங்கள்

Published On 2024-06-12 02:30 GMT   |   Update On 2024-06-12 02:31 GMT
  • முதல் போட்டியில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
  • தொடரில் ஒரு அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. முதலில் நடைபெறும் லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும். 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடரில் ஒரு அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.

அந்த வகையில், இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்று போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கிய முதல் போட்டியில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகளின் முடிவுகள் அமைகின்றன.

 

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 194 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 197 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணி 194 ரன்களை குவித்ததும், அமெரிக்கா அணி வெறும் 17.4 ஓவர்களில் 197 ரன்களை விளாசி வெற்றி பெற்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே தொடரின் 2-வது போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களில் பப்புவா நியூ கினியாவை சுருட்டியது. எனினும், இரண்டாம் பாதியில் 137 துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை 18 ஓவரின் கடைசி பந்தில் தான் எட்டியது. மேலும், எளிய வெற்றி இலக்கை துரத்துவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது.

 

ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ஓமன் மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஓமன் 109 ரன்களை அடித்தது. 110 ரன்களை துரத்திய நமீபியா அணியும் 20 ஓவர்களில் 109 ரன்களை அடிக்க சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதலவாது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நமீபியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை விளாசியது. 22 ரன்களை துரத்திய ஓமன் அணி 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் நமீபியா அபார வெற்றி பெற்றது.

அடுத்ததாக இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய தொடரின் 4-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெறும் 77 ரன்களில் ஆட்டமிழந்தது. 78 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டியது. குறைந்த ரன்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி கடைசி வரை நீடித்தது.

 

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டியின் போது கொண்டுவரப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை அடித்தது. 160 ரன்களை துரத்திய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 159 ரன்களை அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.

இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது. 19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 


தொடரின் 16 ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. 104 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்து தென் ஆப்பிரிக்கா அணி போராடி வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் போராடி வென்றது வியப்பை ஏற்படுத்தியது.

டி20 தொடர் என்றாலே சுவாரஸ்யத்திற்கு குறையில்லை என்ற வகையில், நடப்பு உலகக் கோப்பை தொடரும் அதற்கு உதாரணமாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் அணிகள் தடுமாறுவதும், சிறிய அணிகளாக பார்க்கப்படும் அணிகள் அபாரமாக விளையாடி வருவதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.

Tags:    

Similar News