கிரிக்கெட் (Cricket)
null

தடுமாறினால் என்ன.. விமர்சிக்காமல் நம்பிக்கை வையுங்கள்.. கோலி குறித்து கவாஸ்கர் கருத்து

Published On 2024-06-13 14:11 GMT   |   Update On 2024-06-13 14:17 GMT
  • 3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல.
  • நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இதுவரை 10 ரன்கள் கூட தாண்டாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அவர் 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் விராட் கோலீயை 3-வது இடத்தில் களமிறங்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மீண்டு வருவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாட்டுக்காக விளையாடும் எந்த வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். அதை நீண்ட காலமாக செய்து வரும் விராட் கோலி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் நாம் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். இன்னும் சூப்பர் 8, அரையிறுதி, இறுதி போட்டி வரவுள்ளன. எனவே விராட் கோலி தற்போதைக்கு அமைதியாக இருந்து தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை சந்திப்பீர்கள். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

Tags:    

Similar News