செய்திகள் (Tamil News)

மதுரை அருகே ரூ.5 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-05-15 10:24 GMT   |   Update On 2018-05-15 10:24 GMT
மதுரை அருகே ரூ.5 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தென்கரையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் மதுமிதா (வயது 20). விவசாய கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட, சாந்தி வங்கிக்கு சென்று விட்டார். வீட்டில் மதுமிதா மட்டும் தனியாக இருந்தார்.

சிறிது நேரத்தில் சாந்தி வீட்டுக்கு வந்தபோது மதுமிதா மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சாந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகளை கடத்தி இருக்கிறோம். ரூ. 5 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் என்று மிரட்டி விட்டு செல்போன் அழைப்பை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி மிரட்டல் குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் வந்த செல்போன் எண் ஹரீஷ் என்பவரது முகவரியில் வாங்கியிருப்பது தெரியவந்தது. மதுமிதா உண்மையில் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News