செய்திகள்

தொழிலாளி கொலை- மகளை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொன்றோம்- கைதானவர் வாக்குமூலம்

Published On 2018-07-07 11:05 GMT   |   Update On 2018-07-07 11:05 GMT
அஞ்சுகிராமத்தில் மகளை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தொழிலாளியை கொன்றதாக கைதானவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலைநம்பி (வயது 45), தொழிலாளி.

குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்திற்கு நேற்று திருமலைநம்பி வந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திருமலைநம்பியின் உறவினர் செம்புக்குட்டியும், அவரது மகன் சுயம்புலிங்கம் (26) ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறு மூண்டது.

இதில் செம்புக்குட்டியும், அவரது மகன் சுயம்புலிங்கமும் சேர்ந்து திருமலைநம்பியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். 13 இடங்களில் வெட்டுப்பட்ட திருமலை நம்பி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் அவர், துடி துடித்து இறந்தார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் செம்புக்குட்டியும், அவரது மகன் சுயம்புலிங்கமும் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

அஞ்சுகிராமத்தில் தொழிலாளி ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். கன்னியாகுமரி டி.எஸ்.பி. முத்துபாண்டியன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம், அஞ்சுகிராமம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.

மேலும் திருமலைநம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரை கொலை செய்தவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர்.

இதில், சுயம்புலிங்கத்தின் தந்தை செம்புக்குட்டியை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை அஞ்சு கிராமம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர், திருமலை நம்பியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

திருமலைநம்பியும், நானும் உறவினர்கள். அவரது மகளை, எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு நான், மறுப்பு தெரிவித்தேன். ஆனால் திருமலைநம்பி தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகனும், மகளும் மூலக்கரைப்பட்டி சென்றனர். அவர்களிடமும் இத்திருமணம் குறித்து திருமலைநம்பி பேசி உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எனது மகனை தாக்கினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று மாலையில் அஞ்சு கிராமம் டாஸ்மாக் கடை அருகே திருமலைநம்பி நிற்பதை பார்த்தேன். அவரிடம் இதுபற்றி கேட்டேன். அப்போது எங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திருமலைநம்பி என்னை தாக்கினார். அந்த நேரம் எனது மகன் சுயம்புலிங்கம் அங்கு வந்தார். அவரும் திருமலைநம்பியை தட்டிக் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் வெட்டினோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

திருமலைநம்பி கொலையில் தலைமறைவாக உள்ள சுயம்புலிங்கத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News