மோதல் வழக்கு: பா.ஜனதா-காங்கிரஸ் நிர்வாகிகளை வரவேற்க ஜெயில் முன்பு திரண்ட தொண்டர்கள்
- எதிர் தரப்பில் இருந்த காங்கிரசார் வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தி என கோஷம் எழுப்பினர்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
நெல்லை:
நாகர்கோவிலில் கடந்த 3-ந் தேதி பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட சென்ற காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நெல்லை மாவட்ட முன்னாள் பா.ஜனதா தலைவர் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து பாளை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பாளை ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர்களை வரவேற்க குமரி, நெல்லை மாவட்ட பா.ஜ.கவினர் மற்றும் காங்கிரசார் மத்திய சிறைச்சாலை முன் குவிந்தனர்.
முதலில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர்களை சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது எதிர் தரப்பில் இருந்த காங்கிரசார் வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தி என கோஷம் எழுப்பினர். பா.ஜ.க.வினரும், காங்கிரசாரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் தலைமையில் போலீசார் இரு கட்சி நிர்வாகிகளையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து 2 கட்சி தொண்டர்களும் கலைந்து சென்றனர்.