மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம்-காந்தவயல் இடையே மோட்டார் படகு போக்குவரத்து தொடக்கம்
- படகு போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 2-வது வார்டில் லிங்காபுரம், காந்தவயல், காந்தையூர், ஆலூர், மேலூர், உலியூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் லிங்காபுரம், காந்தவயல், காந்தையூர், ஆலூர், மேலூர், உலியூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இதில் லிங்காபுரம் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் காந்தவயல், காந்தையூர், ஆலூர், மேலூர், உலியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலி தொழிலாளர்கள். இதனிடைய லிங்கபுரத்திற்கும்- காந்தவயலுக்கும் இடையே பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பின் பகுதியாக உள்ளது. இந்த அணையின் நீர்த்தேக்கத்திற்கு ஆண்டுதோறும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், கூடலூர், ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் கேரள மாநில பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் இந்த அணைக்கு வந்தடைகின்றன.
இதனிடையே அணையின் நீர்மட்டம் தற்போதும் 103 அடியை எட்டியுள்ளதால் நீர்த்தேக்க பகுதிகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் காந்தையூர், காந்தவயல், ஆலூர் மேலூர், உலியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் வசித்து வரும் மக்கள் தங்களது விளைப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றன.
இதில் கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் தண்ணீர் தேக்கம் அதிகரித்து உள்ளதால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் லிங்காபுரம் -காந்தவயல் இடையிலான தரைவழி போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார்படகு போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதில் பயணம் செய்ய பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்கள் சென்று வர ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பழங்குடியின கிராம மக்கள் இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் தங்களுக்கு தண்ணீர் தேங்கும் காலகட்டத்தில் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.
மோட்டார் படகு போக்குவரத்து தொடக்க நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், செயல் அலுவலர் திருமூர்த்தி, 2-வது வார்டு உறுப்பினர் சுப்புலட்சுமி பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஜி.எஸ்.ரங்கராஜ், தேன்மொழி, உமாராணி தினேஷ்குமார், ரியாஸ், அஞ்சலி ராம்குமார், சூரியகலாரங்கராஜ், கங்காதரன், கே.எஸ்.குமார், சூர்யாபிரகாஷ், சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.