உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

Published On 2023-08-07 07:40 GMT   |   Update On 2023-08-07 07:40 GMT
  • வருகிற 10-ந்தேதி நடக்கிறது
  • ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும்

கன்னியாகுமரி :

நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். பூஜையில் வைக்கப்படும் நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல்மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 10-ந்தேதி நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலையம் அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

தொடர்ந்து 5.45 முதல் 6.15-க்குள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News