ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் மேற்கூரை அமைத்து மேம்படுத்த பயணிகள் கோரிக்கை
- வெயிலில் காய்ந்து, மழையில் நனைகிறார்கள் நிற்பதாக பயணிகள் குற்றச்சாட்டு
- சுற்றுலாமையங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை
திருச்சி,
108 வைணவ திருத்த–லங்களில் முதன்மையா–னதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். உலகெங்கிலும் இருந்தும், இந்தியா முழுவதும் இருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு தினந்தோறும் வந்த வண்ணம் இருப்பார்கள்.நெடுந்தூரம் பயணித்து வருபவர்கள் பெரும்பாலும் விரும்புவது ெரயில் பயணம் தான். மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த துறையூர், முசிறி, தொட்டியம், மண்ணச்சனல்லூர், லால்குடி ஆகிய ஊர்களை சேர்ந்த மக்கள் சென்னை செல்வதற்கும், திண்டுக்கல் வழியாக மதுரை, திருநெல்வேலி, குருவாயூர் செல்வதற்கும் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் பற்றிய அதிக அளவு தகவல்கள் பொதுமக்களிடம் சென்று சேராததால் இன்றளவிலும் பிரபலம் இல்லாமல் உள்ளது துரதிருஷ்டமே. இங்கு நான்கு நடைமேடைகள் அமைக்கப்பட்டு ெரயில் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 24 பெட்டிகள் கொண்ட ெரயில்கள் நிற்கும் நடைமேடையில் ஆறு இடங்களில் மட்டுமே சிறிய அளவில் மேற்கூரை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்கள் மேற்கூரை வசதி இல்லாமல் உள்ளது.இதனால் ெரயில் பயணிகள் வெயில் நேரங்களில் நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். குறிப்பாக முன் பதிவில்லா பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் ெரயில் ஏறும் இடம் ெரயில் நிலையம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை மேற்கூரை போடப்படாமல் இருப்பது பயணிகளிடம் பேசும் பொருளாகியுள்ளது. மழை என்றால் நனைய வேண்டும், வெயில் என்றால் காய வேண்டும் என்ற நிலையில் தான் ெரயில் பயணிகள் உள்ளார்கள்.சுற்றுலாத் துறை, ெரயில்வே துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள வழிபாட்டுத்தலங்களான சமயபுரம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, திருப்பட்டூர், திருவெள்ளரை முதலான முக்கிய வழிபாட்டுத்தலங்கள், கல்லணை, முக்கொம்பு, புளியஞ்சோலை, பச்சைமலை போன்ற சுற்றுலா தலங்கள் பற்றிய குறிப்புகள், தூரம், பயண வழிமுறைகளை முன்னிலைப்படுத்தி, அடிப்படை வசதிகளுடன், மேம்பட்ட வசதிகளை செய்து கொடுத்து, ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்தை தரம் உயர்த்தி தர, ெரயில் பயணிகள் சார்பில் சம்பந்தப்பட்ட ெரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.