உள்ளூர் செய்திகள் (District)

காந்திபுரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண் யார்? இன்ஸ்பெக்டர் தலைமையில் தீவிர விசாரணை

Published On 2023-05-13 09:05 GMT   |   Update On 2023-05-13 09:05 GMT
  • 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
  • அந்த பகுதியில் திரியும் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை,

கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த ெபண் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

அந்த பெண்ணை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த இடத்தை மது குடிப்பதற்கும், பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு யாராவது அழைத்து வந்து உல்லாசமாக இருந்து விட்டு அந்த பெண்ணை கொலை செய்தார்களா என்றும் தெரியவில்லை.

இதனால் அந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளங்களை அனைத்து போலீஸ்நிலையங்களுக்கும் அனுப்பி பெண் மாயம் தொடர்பாக வழக்கு எதுவும் உள்ளதா என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண் சிவப்பு மற்றும் தங்க நிற ஜரிகை போட்ட ஜாக்கெட்டும், ஊதா நிறத்தில் வெள்ளை கோடு போட்ட துணியும் அணிந்துள்ளார். உடல் தீயில் கருகியதால் வேறு எந்த அடையாளங்களையும் போலீசாரால் தெரிவிக்க முடியவில்லை.

இதுதவிர அந்த பகுதியில் திரியும் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தன்று அந்த பகுதிக்கு சென்றது யார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் தெரிந்தால் தான் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியும் என ரத்தினபுரி போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News