கதம்பம்

ஆடிப்பெருக்கின் மகத்துவம்

Published On 2023-07-27 11:08 GMT   |   Update On 2023-07-27 11:08 GMT
  • ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.
  • ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

தமிழ் வருடத்தின் 12 மாதங்களிலும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான பண்டிகைகள் நட்சத்திரத்தின் அடிப்படையிலோ திதியின் அடிப்படையிலோ கொண்டாடப்படுகின்றது.

நட்சத்திரம் மற்றும் திதி தவிர்த்து தமிழ் தேதியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சித்திரை முதல் நாள், ஆடி 18 ம் பெருக்கு, தைப் பொங்கல் ஆகும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆகிய இவ்விரு நாட்களும் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டிற்கு மட்டுமின்றி சுப காரியங்கள் செய்வதற்கும் உகந்த நாள் ஆகும்.

ஆடி 18 ம் தேதியோடு மட்டும் தான் பெருக்கு என்ற வார்த்தை இணைகிறது. ஜோதிட ரீதியாக ஆராயும் போது இதற்கு பெரிய காரணங்கள் ஏதும் கூறிவிட முடியாது. ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.

இயற்கை தனது இடையறாத பணியைச் செய்து விவசாயம் செழித்து மக்கள் வளமான வாழ்வு வாழ சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க அக்காலத்தில் காவிரியின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகவே இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் காவிரி ஆறு ஆரம்பமாகும் இடத்தில் மழை செழித்து தமிழகத்தில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கை நமக்கு வழங்கும் கொடை ஆகும்.

ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை ஆகும். எனவே நமது வளமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறும் விதமாக காவிரித் தாயானவள் பெருக்கெடுத்து ஆடியும் ஓடியும் வரும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கையின் அமைப்பு. இதற்கு வேறு எந்த கற்பனையான காரணங்களையும் கூறி விட முடியாது.

இந்நாள் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாளாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். இந்நாளில் பூஜை புனஷ்காரங்களுடன் காவிரித்தாயைப் போற்றி வணங்கும் மரபை தொன்று தொட்டு ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இன்றும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. காவிரிக்கரையோரங்களில் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கை சீர் மிகும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இங்கு கூடும் மக்கள் தீபமேற்றி காவிரித்தாயைப் போற்றிப் பணிகின்றார்கள். பெண்கள் திருமாங்கல்ய சரடு அல்லது கயிற்றை பிரித்து மாற்றிக் கொள்கிறார்கள்.

தமிழர்களாகிய அனைவரும் இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் இந்நாளை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கலாம். வீட்டிற்குத் தேவையான புதிய டீவி, ப்ரிட்ஜ், பீரோ போன்ற பொருள்கள் வாங்கலாம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். சாப்பாட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கலாம். தங்கம் வாங்கலாம்.

திருமணம் தவிர்த்து வாஸ்து பூஜை, கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பித்தல், கிரஹப் பிரவேசம், வேறு வீடு மாறுதல், திருமணம் பேசி முடித்தல், குழந்தைக்கு பெயர் சூட்டல், வளைகாப்பு போன்ற சுப காரியங்களையும் இந்நாளில் செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் வெற்றியே உண்டாகும். இவ்வருடம்(2023)வரக்கூடிய ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

ஜோதிட கலாமணி

கே. ராதா கிருஷ்ணன்.

Tags:    

Similar News