கதம்பம்
null

தையலைப் போற்றுவோம்!

Published On 2023-03-08 16:29 GMT   |   Update On 2023-03-09 04:11 GMT
  • உலகில் வாழும் 90% மக்கள் பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
  • அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது.

பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் கனிந்து வருவது ஆரோக்கியமான விசயம். +2 தேர்வு முடிவுகளைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஐ.டி கம்பெனிகளை எட்டிப் பார்த்தால் இளம்பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். கார்ப்ரேட் ஆஸ்பிடல்களில் பெண் டாக்டர்களே அதிகம்.

இந்நிலையில், இப்போது யார் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள்? என்கிறார்கள். சமீபத்தில் ஐநா ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உலகில் வாழும் 90% மக்கள் (இதில் பெண்களும் சேர்த்து) பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இதில் அதிக அளவில் பாலின பேதத்தை கடைபிடிக்கும் நாடாக ஜிம்பாவேவையும், பாகுபாடு குறைந்த அளவில் கடைபிடிக்கும் நாடாக ஐரோப்பிய நாடான ஆண்ட்ரோராவையும் அடையாளம் கண்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு, கடமையுணர்வு, தொழில்துறை அறிவு போன்றவை ஆண்களுக்கு உரித்தானது என 70% இந்திய ஆண்கள் இவ்வாய்வில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

உலகில் 231 நாடுகள் உள்ளன. இதில் 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகளே அரசியலில் பிரகாசிக்கின்றனர். நாகரிகத்தில் முன்னேறியவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள், பெண்களை அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்று கருதுகின்றனர்.

அதேவேளை கடந்த கோவிட் தொற்று காலம், இத்தகைய நிலையை சிறிது கலைத்தது.பெண் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, தைவான், நார்வே போன்ற நாடுகளில் கோவிட்-உயிரிழப்புகள் குறைவாக இருந்தன.

பெண் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, கோவிட்டுக்கு எதிராக போராடிய முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டப்பட்டதில் 70% பேர் பெண் மருத்துவர்கள். 90% செவிலியர்கள் பெண்கள். 80% தூய்மைப் பணியாளர்கள் பெண்கள்.

இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் தங்களை நிரூபித்து வந்திருக்கிறார்கள். அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களும் இன்னும் குறைந்தபாடில்லை! என்பதையும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது.

உலக அளவில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.

இந்தியாவில், 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். பெண்கள் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, எய்ட்ஸ் நோய், பெண் சிசுக்கொலை, புறக்கணிக்கப்படுவது, பணி இடங்களில் அவமதிப்பு, என பல இன்னல்களை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

அதுபோல் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையில் 193 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியா 149வது இடத்தில்தான் இருக்கிறது.

இதனால் பெண்களை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, வலிமையாக எதிர்த்து குரலெழுப்ப முடியாத நிலை உருவாகிறது. உதாரணமாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டபோது பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.

இந்தியாவில் பெண்களின் நிலை முன்னேறி உள்ளது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் யதார்த்த நிலவரம் வேறு. கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் (கேரளா விதிவிலக்கு) 10.16% பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பது, கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொடுப்பது சுமையென ஆணாதிக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.

கிராமப்புறங்களில் நிலவும் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் கற்றல் இடைநிறுத்தப்படுகிறது.பெரும்பாலான பணியிடங்களில் குறைந்த கூலிக்கே பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. காந்தி கனவு கண்டமாதிரி, இரவு நேரங்களில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடப்பது இருக்கட்டும், இணையத்தில் உலவமுடிகிறதா?

எனவே, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதென்பது, மானுடத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சுதந்திரத்தை, பாதுகாப்பை, மாண்பை, சுயமரியாதையை உறுதி செய்தவதாகும்.

-கரிகாலன்

Tags:    

Similar News