செய்திகள் (Tamil News)

மனம் ஒப்பாமல் மோடியுடன் கை குலுக்கிய இம்ரான்கான், பாக். பிரதமரான பின்னர் எப்படி?

Published On 2018-07-29 10:14 GMT   |   Update On 2018-07-29 10:14 GMT
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக உள்ள இம்ரான்கான், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உடன் கை குலுக்கிய சம்பவத்தில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. #ImranKhan #PMModi

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தெஹரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. அந்த கட்சியின் தலைவரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கான் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

புதிய பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் அமைதி முயற்சியைத் தொடர விரும்புவது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் ராணுவமும், புதிய அரசும் தீவிரவாதத்தை குறித்து எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்ற போதும், தெற்காசியாவை பயங்கரவாதம் மற்றும் வன்முறையற்ற பிரதேசமாக்க ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாழ்த்து இரு நாடுகளுக்கு இடையே தற்போது உடைந்து கிடக்கும் உறவை ஒட்ட வைக்கவும் வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், இம்ரான்கான் - மோடி ஏற்கனவே சந்தித்து கை குலுக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கை குலுக்கல் சம்பவத்தை விட அது நடந்த போது இருந்த சூழலே இங்கு முக்கியமானது.

கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, இம்ரான்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பதை அறியாத இம்ரான்கான் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். 

திடீர் அதிர்ச்சியாக இம்ரான்கானுக்கு வலது பக்கத்தில் மோடி வந்து அமர்ந்துள்ளார். அதன் பிறகே இருவருக்கும் ஒரே நேரம் ஒதுக்கப்பட்டுள்ள செய்தி இம்ரான்கானுக்கு தெரிந்துள்ளது. குஜராத் கலவரம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என மோடி மீது ஒரு அடையாளம் படிந்திருந்தது. 

இதனால், மோடியுடன் தான் இருப்பது போன்ற புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானால் தனது நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என நினைத்த இம்ரான்கான் மோடியை கண்டும் காணதது போல இருந்துள்ளார். மோடியும் அவ்வாறே இருக்க ஏதோ ஒரு புள்ளியில் இருவரது பார்வையும் மோதின.

அப்போது, உடனே மோடி இம்ரான்கானின் கையை தனது கைகளால் எடுத்து கை குலுக்கியுள்ளார். இதனை சிறிதும் எதிர்பாராத இம்ரான்கான் வாயடைத்து போயுள்ளார். எனினும் ஒரு இறுக்கமான சூழல் விலகியதால், இருவரும் பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களும், மோடிக்கு கை கொடுக்கும் போது ஒருவித குமட்டலான மனநிலையை இம்ரான்கான் கொண்டிருந்ததாகவும் இம்ரான்கானின் சுயசரிதை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘இம்ரான் v இம்ரான்’ என்ற புத்தகம் ப்ராங் ஹஸுர் என்பவரால் எழுதப்பட்டதாகும்.


2014-ம் ஆண்டு சந்திப்பு

2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது, பாகிஸ்தானின் முக்கிய கட்சியாக இம்ரான்கானின் கட்சி அவதாரம் எடுத்தது. நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்த இம்ரான்கான் மோடியை சந்தித்து பேசினார். முக்கியமாக மோடியிடம் கை குலுக்கினார். அப்போது இம்ரான்கானின் மனநிலை என்ன? என்பது அவருக்கே தெரிந்த ஒன்று.

2006-ம் ஆண்டில் மோடி உடனான கை குலுக்கல் இம்ரான்கானுக்கு ஒரு விதமான மனநிலையை தந்திருந்தாலும், இப்போது அவர் பிரதமரான பின்னர் ஒருவேளை இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் போது கை குலுக்கினால் என்ன மனநிலையில் இருப்பார்? என்பது இம்ரான்கானுக்கே வெளிச்சம்.
Tags:    

Similar News