செய்திகள் (Tamil News)

மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

Published On 2019-05-12 04:57 GMT   |   Update On 2019-05-12 04:57 GMT
பிரதமர் மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

அமராவதி:

தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி எங்களுக்கு நீதியை போதிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதற்கு மாறாக செயல்படுபவர்.

அவர் தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார். அழிந்துவிட்டவர்களை மறுபடியும் உயிர்த்தெழ செய்வார். இவ்வாறு பல அரசியல் தலைவர்களை அழித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ஆதாயத்துக்காக இந்திய ராணுவத்தையும், பாதுகாப்பு துறையையும் பயன்படுத்தி உள்ளார். நாட்டில் மத மோதல்களை அவர் உருவாக்குகிறார்.


மோடியால் இந்திய ஜனநாயகம் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. ஜனநாயகத்தை கொன்றதற்காக அவரையும், அவரது அணியினரையும் 23-ந்தேதி மக்கள் வெளியேற்றுவார்கள்.

ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய புதிய அணியை மக்கள் தேர்வு செய்வார்கள்.

இந்திய தேர்தல்துறை பாரதிய ஜனதாவின் உத்தரவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

நாங்கள் தேர்தல் துறையை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலர் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறினால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எதிர்க்கட்சிகள் 50 சதவீத விவிபாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஆனால், தேர்தல் கமி‌ஷன் அதை ஏற்க முன்வரவில்லை.

தேர்தல் கமி‌ஷனுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு இருக்கிறது? என்று தெரியவில்லை. விவிபாட் எந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எப்போது குரல் எழுப்பினாலும் தேர்தல் கமி‌ஷன் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் குரலுக்கு எதிராக உள்ளது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Tags:    

Similar News