இந்தியா

லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்- நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு

Published On 2024-08-17 01:55 GMT   |   Update On 2024-08-17 13:54 GMT
  • பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்து போராட்டம்.
  • கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.

குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .

இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.

அம்ரிஸ்தரில் பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி, ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் உள்ளிட்டவை நேற்று முதலே காலவரையின்றி இந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் PCMS உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள், சிவில் மருத்துவமனை, குரு நானக் மருத்துவமனை பயிற்சி ஜூனியர் மருத்துவர்கள், டெல்லியின் RMS மருத்துவமனை மருத்துவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் மருத்துவர்கள், ஹைதராபாத்தில் இயங்கி வரும் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், மும்பையில் செயல்படும் மருத்துவமனை டாக்டர்கள், கொல்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் என நாடு முழுவதும் நேற்று முதில் தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தபடி இன்று காலை 6 மணி முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது

2024-08-17 12:56 GMT

டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பெறுவதற்காக குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024-08-17 12:04 GMT

நிலைமையை சரியாக கையாள தவறியதால் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

2024-08-17 10:52 GMT

பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தொண்டர்கள் மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2024-08-17 09:41 GMT

பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்தினர்.

2024-08-17 08:29 GMT

கொல்கத்தாவில் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.

2024-08-17 06:05 GMT

கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம்-கொலை:ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தை வந்டைந்தார்.

2024-08-17 06:00 GMT

புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024-08-17 05:59 GMT

இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்களின் போராட்டங்களுக்கு நேபாளம் மற்றும் பாகிஸ்தான் மருத்துவ சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. உலக மருத்துவ சங்கம் தலையிட பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

2024-08-17 05:56 GMT

கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024-08-17 04:26 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ச் அணிந்து, பதாகைகளை ஏந்தி வந்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்.

Tags:    

Similar News