இந்தியா

பா.ஜ.க.வுக்கு ஒரு ஓட்டு கூட விழக்கூடாது: பஞ்சாப்பில் கெஜ்ரிவால் ஆவேசம்

Published On 2024-05-28 08:16 GMT   |   Update On 2024-05-28 08:16 GMT
  • லூதியானாவில் நடந்த கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்றார்.
  • அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மிக்கு 13 மக்களவை தொகுதிகளைக் கொடுங்கள் என்றார்.

சண்டிகர்:

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று பஞ்சாப் மாநிலம் வந்தார். லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று, நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். இது மத்திய அரசுக்கான தேர்தல். மத்தியில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.

மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே ஆம் ஆத்மி கட்சிக்கு 13 மக்களவை தொகுதிகளைக் கொடுங்கள். அதனால் உங்கள் உரிமைகளை மையத்தில் இருந்து கொண்டு வரலாம்.

நாட்டில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இரு நாட்களுக்கு முன் லூதியானாவுக்கு வந்த உள்துறை மந்திரி அமித் ஷா, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும். பகவந்த் மான் பதவி விலகுவார். அவரை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்குவோம் என மிரட்டியுள்ளார். அவர்கள் இலவச மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள். எனவே, ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவாக விழக்கூடாது.

அனைத்து வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போடப்பட வேண்டும். பஞ்சாப்புக்கு கிடைக்க வேண்டிய ரூ.9,000 கோடி அவர்களால் தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News