உசுப்பேத்திய மந்திரி, ரகசிய கடிதம் எழுதிய ஆளுநர்: மேற்கு வங்காளத்தில் தொடரும் அதிகார மோதல்
- உயர்க்கல்வி முறையை அழிக்க முயற்சி செய்கிறார்- மேற்கு வங்காள மந்திரி
- நள்ளிரவுக்குள் நடவடிக்கையை பார்க்கலாம்- ஆளுநர்
மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும், ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்-க்கும் இடையில் அதிகாரம் குறித்து மோதல் இருந்து வருகிறது.
ஆளுநர் பல்கலைக்கழங்களுக்கு இடைக்கால துணைவேந்தர்களை நியமித்ததில் இருந்து இந்த மோதல் பெரியதாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஆளுநர் செயல்பட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன், ஆளுநருக்கு துணை போகும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதிக்கு முட்டுக்கட்டை போடப்படும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியிருந்தார்.
ஊழல் இல்லாத பல்கலைக்கழகம் என்பதை உறுதிப்படுத்துவதுதான் என்னுடைய பணி என போஸ் பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்காள கல்வித்துறை மந்திரி பிரத்யா பாசு, ''உயர்க்கல்வி முறையை அழிக்க முயற்சி செய்கிறார். பல்லைக்கழகங்களில் ஆளுநர் பொம்மை ஆட்சி நடத்துகிறார்'' என ஆளுநர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டு ரகசிய கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஒன்றை மத்திய அரசுக்கும், மற்றொன்றை மாநில அரசுக்கும் அனுப்பியுள்ளார்.
இதை உறுதி செய்த ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ''இரண்டு ரகசிய கடிதங்களில் கைழுத்திட்டுள்ளார். அந்த கடிதங்கள் குறிப்பிட்டுள்ள விசயங்கள் தங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்'' என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
தலைமை செயலாளரை அழைத்து சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
மந்திரி பேச்சு குறித்து ஆளுநரிடம் பத்திரிகையாளர் ஒரு நிகழ்ச்சியின்போது எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் ''நள்ளிரவு வரை காத்திருங்கள். என நடவடிக்கை என்பது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்'' என் குறிப்பிட்டார்.
ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்த சில நிமிடங்களில், கல்வித்துறை மந்திரி பிரத்யா பாசு ''நள்ளிரவு வரை பார்க்கவும், நடவடிக்கை பார்க்கவும். எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! நகரில் புதிய காட்டேரி! மக்களே உங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய புராணங்களில் கூறப்படும் அசுரன் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.