இந்தியா (National)

மணிப்பூர் எரிகிறது, ஐரோப்பா விவாதிக்கிறது: ஆனால் மோடி மட்டும் மவுனம்- ராகுல் காந்தி விமர்சனம்

Published On 2023-07-15 10:53 GMT   |   Update On 2023-07-15 10:53 GMT
  • மணிப்பூர் வன்முறையில் 135-க்கும் மேற்பட்டோர் பலி.
  • கலவரம் குறித்து இதுவரை பிரதமர் மோடி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே கடந்த மே மாதம் தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம், தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேலும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான உரிமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

அதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் உள்விவகாரங்களில் இதுபோன்ற அந்நிய நாட்டின் தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு தேசிய தினம் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து 26 ரபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர் எரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இந்தியாவின் உள்விவகாரம் பற்றி விவாதிக்கிறது. ஆனால் நமது பிரதமர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார். ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்புக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டார்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுவரையில் மணிப்பூர் நிலைமை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News