மணிப்பூர் வன்முறை: டெல்லி ஜந்தர் மந்தர் அருகே மாணவர்கள் போராட்டம்
- மணிப்பூர் பிரச்சனையில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரசாங்கத்தின் சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் தந்திரங்களை கண்டிக்கிறோம்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து புதுடெல்லியில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் அருகே நடந்த இப்போராட்டத்தில், அகில இந்திய மாணவர் சங்கம், கிராந்திகாரி யுவ சங்கதன் மற்றும் புரட்சிகர இளைஞர் சங்கம் ஆகியவை பங்கேற்றன.
இப்போராட்டம் தொடர்பாக ஒரு மாணவி போராடும் மாணவ-மாணவியர்களிடையே உரையாற்றிய வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
மணிப்பூர் பிரச்சனையில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலேயே நேரம் செலவிடுகிறார். பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை குறித்து அவர் எங்கும் பேசவில்லை.
வன்முறையை அடக்க முடியாமல் போனதால் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இதற்கு பெருமளவு பொறுப்பாகிறார். நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தனது மாநில மக்களை வெளியாட்கள் மற்றும் பழங்குடியினர் என்றும் முதல்வர் அழைக்கிறார். மே மாதம் நடந்த இனக்கலவரத்தில் மணிப்பூரில் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டது குறித்து காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. ஆனால் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு நடந்த சம்பவங்களின் வீடியோக்கள் 4 நாட்கள் முன் வெளியானதும், பொதுமக்களின் சீற்றத்தை கண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முடிவு செய்தது.
இங்கு கூடியிருக்கும் நாங்கள் அனைவரும் அரசாங்கத்தின் இத்தகைய சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் தந்திரங்களை கண்டிக்கிறோம். முதல்வர் பிரேன் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அந்த மாணவி உணர்ச்சிகரமாக பேசினார்.