இந்தியா

மகாராஷ்டிராவில் எந்த கிராமமும் கர்நாடகத்துடன் இணையாது: பசவராஜ் பொம்மைக்கு, பட்னாவிஸ் பதிலடி

Published On 2022-11-24 03:11 GMT   |   Update On 2022-11-24 03:11 GMT
  • இது 2012-ம் ஆண்டில் நடந்த பிரச்சினை.
  • எந்த கிராமங்களும் கர்நாடகத்துடன் செல்லாது.

மும்பை :

மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் கர்நாடக மாநில ஆட்சி எல்கையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்தநிலையில் எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கில் சட்ட குழுவை ஒருங்கிணைக்க மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜ் தேசாய் ஆகியோரை மகாராஷ்டிரா அரசு நேற்று முன்தினம் நியமித்தது.

இதேபோல எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சில தகவல்களை எடுத்து வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் உள்ள ஜாட் தாலுகாவில் கடும் வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அங்குள்ள கிராமங்களை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்த கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றின. அப்போது கர்நாடக அரசு தலையிட்டு அந்த கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முன்வந்தது. இது குறித்து நாங்கள் இப்போதும் பரிசீலித்து வருகிறோம்.

மேலும் மகாராஷ்டிராவில் உள்ள கன்னட பள்ளிகளுக்கு சிறப்பு மானியம் வழங்கவும், மாநிலத்தை ஒன்றிணைக்க போராடிய அம்மாநிலத்தில் உள்ள கன்னடர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் எனது அரசு முடிவு செய்துள்ளது.

எல்லை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும்போது அதை எதிர்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த மூத்த வக்கீல்கள் கொண்ட ஒரு வல்லமைமிக்க சட்ட குழு உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக முதல்-மந்திரிக்கு நேற்று பதிலடி கொடுக்கும் வகையில் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

எங்களது சாங்கிலி மாவட்டத்தில் உள்ள சில கிராம பஞ்சாயத்துகள் தான் கர்நாடக முதல்-மந்திரி கூறியதுபோல தீர்மானங்கள் நிறைவேற்றின. இது 2012-ம் ஆண்டில் நடந்த பிரச்சினை. தற்போது எந்த பஞ்சாயத்தும் அதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. எந்த கிராமங்களும் கர்நாடகத்துடன் செல்லாது. அந்த கிராமங்களின் தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றப்போகிறோம். கொரோனா மற்றும் உத்தவ் தாக்கரே அரசால் இந்த தண்ணீர் திட்டம் தாமதமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி ஷிண்டே கட்சியை சேர்ந்த சம்புராஜ் தேசாய் கூறியதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சில ஆபத்தான கருத்துகளை முன் வைத்துள்ளார். இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. எனக்கு கிடைத்த தகவலின்படி, சாங்கிலியில் உள்ள ஜாட் தாலுகாவின் வறண்ட பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழக்குவதற்கான திட்டத்தை மாநில அரசு ஏற்கனவே அனுமதித்துள்ளது. சுமார் ரூ.1,200 கோடியிலான இந்த திட்டம் குறித்து தொழில்நுட்ப ஆய்வு நடந்து வருகிறது. இதன்மூலம் அந்த கிராமங்களுக்கு கண்டிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து தண்ணீர் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் எல்லைப்பிரச்சினையில் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News