இந்தியா

ராகுல் காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு பயனுள்ளது: சரத்பவார் கருத்து

Published On 2022-09-20 03:09 GMT   |   Update On 2022-09-20 03:09 GMT
  • ராகுல்காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு பயனுள்ளதாக அமையும்.
  • எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.

மும்பை

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சோலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை வரும் நாட்களில் அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தும். இது காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாக அமையும். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இதுபோன்ற பாதயாத்திரை நடத்தியபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் கூட 1980-ம் ஆண்டில் ஜல்காவில் இருந்து நாக்பூருக்கு விவசாயிகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டேன். ஜல்காவில் பாதயாத்திரையை தொடங்கியபோது 5 ஆயிரம் பேர் வந்தனர். புல்தானா சென்றபோது அந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்தது. பின்னர் அகோலா மற்றும் அமராவதியில் யாத்திரை நடத்தியபோது 1 லட்சம் பேர் திரண்டனர். மாநிலம் முழுவதும் இது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை மிகுந்த முயற்சியுடன் நடத்தினால் மக்கள் வரவேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுப்படுமா? என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளிக்கையில், "எதிர்கால ஏற்பாடுகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது" என்றார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் என்னை சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் என்னை சந்தித்தார். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்து தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை.

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். எனது கருத்து என்னவென்றால், ஒரு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதை, மற்றவர்கள் எதிர்க்கக்கூடாது" என்றார்.

Tags:    

Similar News